கல்முனை ஸாஹிரா மாணவன் சௌபாத் தேசிய ரீதியில் சிறந்த கண்டுபிடிப்பாளரருக்கான கௌரவிப்பு...!







அஸ்ஹர் இப்றாஹிம்-

ல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி உயர்தர தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவன் ஏ.எம்.எம்.சௌபாத் தேசிய ரீதியில் சிறந்த கண்டுபிடிப்பாளரருக்கான விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்கும் ஸ்ரீலங்கா புத்தாக்க ஆணைக்குழு கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் ஒழுங்கு செய்திருந்த இலங்கையிலுள்ள பாடசாலைகளில் புத்தாக்க முயற்சியில் ஈடுபடும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்விலேயே இம்மாணவன் இவ்வாறு கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த , தேசிய புலமைச் சொத்து நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி ஜீ.ஆர்.ரணவக்க , இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் சிரேஸ்ட பொது செயலாளர் சந்திரானந்த விதானகே , இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திலக் கொடமான , ஸ்ரீலங்கா புத்தாக்க ஆணைக்குழுவின் ஆணையாளர் மகேஸ் எதிரிசங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழிகாட்டலும் ஆலோசனையும் வழங்குவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஸ்ரீலங்கா புத்தாக்க ஆணைக்குழு பலவிதமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் சௌபாத் குறைந்த மின்சாரத்தில் இயங்கக்கூடிய மாவரிக்கும் இயந்திரமொன்றை அண்மையில் கண்டுபிடித்திருந்தார்.

எதிர்வரும் காலங்களில் புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா புத்தாக்க ஆணைக்குழுவினால் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்படும் கண்டுபிடிப்பாளர்களுக்கும் வங்கியில் கணக்கொன்றினை ஆரம்பித்து ஊக்குவிப்பு பணமொன்றினை வைப்பிலிடுதல்,

உயர்தர பரீ்ட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் நுழையும் வாய்ப்பை இழக்கும் பட்சத்தில் இளம் கண்டுபிடிப்பாளருக்கான உத்தியோகபுர்வமான சான்றுகள் இருக்கும் போது பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல்,

நீண்ட காலம் எடுக்கும் கண்டுபிடிப்பு ஒன்றின் ஆக்க உரிமைப்படுத்தல் திட்டத்தை குறுகியகாலப்படுத்துதல்,

தான் கல்வி பயிலும் பாடசாலையில் இளம் கண்டுபிடிப்பாளர் கழகம் ஒன்றை ஏற்படுத்தி புத்தாக்க முயற்சியில் ஈடுபடக்கூடிய மாணவர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவித்தல் போன்றனவாகும்.

இம்மாணவன் மே மாதம் 16 ஆம் திகதி கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட போட்டியின் போது தனது புதிய கண்டுபிடிப்பான சூரிய சக்தியில் இயங்கக்கூடிய வயலுக்கு கிருமி நாசினி மற்றும் களை நாசினி விசிறக்கூடிய இயந்திரமொன்றை சமர்பிக்கவுள்ளார் .

இவரது முதலாவது கண்டுபிடிப்பு கடந்த திங்கட் கிழமை ( 4 ) சாய்ந்தமருதில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த பிரதம அதிதியாக கலந்து கொண்ட விதாதா வளநிலைய திறப்பு விழாவின் போது பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -