வடக்கு கிழக்கை இணைப்பதற்கு இடமளிக்க கூடாது என்பதை இஸ்லாமிய நாடுகளின் அமைப்புக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் வலியுறுத்தியமை பெரிதும் பாராட்டுக்குரியதாகும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை இனப்பிரச்சினையில் முஸ்லிம்கள் மூன்றாவது தேசிய இனமாகும். தமிழ் தரப்புக்கள் தமது தீர்வுக்காக வெளிநாட்டு உதவிகளை நாடும் போது முஸ்லிம்களின் அதிக பட்ச வாக்குகளை பெற்றதாக சொல்வோர் இது விடயத்தில் தீர்மானமிக்க செயற்பாட்டில் இறங்க முடியாத கோழைகளாக உள்ளனர்.
இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தின் இரத்த உறவான இஸ்லாமிய நாடுகளை இது விடயத்தில் அ இ ம காங்கிரஸ் தெளிவு படுத்தியுள்ளமை நல்லதொரு செயற்பாடும் துணிச்சல்மிக்க முன்னெடுப்புமாகும்.
இது விடயத்தில் ஆர்வமுடனும் புத்தி சாதுர்யத்துடனும் செயற்படும் கட்சியின் தேசிய்த்தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனையும் அவருக்கு துணையாக சென்ற அ இ ம காவின் உப தலைவர் ஜமீல் அவர்களுக்கும் உலமா கட்சி முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவிக்கிறது.