ஒரு தந்தை ஏங்குகிறார்...!
+++++++++++++++++
தெருவாய் நான் அலைந்து
தேடிய வருவாயால்
உருவான பின்னாலே
ஊர் விட்டுப் போனவனே
ஒரு தரம் என்றாலும்
உன் தந்தையை பார்ப்பதற்கு
வருவாய் என நம்பி
வயசு போன பின்னாலே
வருவாய் ஏதுமின்றி
வாடி நிற்கின்றேன்
ஒருவாய் சோறூட்ட
நீ ஓடி வருவாயா...?
சின்ன வயதினிலே
செல்லமாய்க் கதை சொல்ல
என்னை நீ சுற்றி
எத்தனை முறை வந்தாய்.
இன்னும் எனக்குள்ளே
இருக்கிறது பல கதைகள்
சொன்ன கதைகளிலும்
சோகமாய் சொந்தக் கதையும்.
அக்கம் பக்கத்தார்
ஆதரவு தந்தாலும்
வெட்கத்தை விட்டு விட்டு
வேண்டியதைக் கேட்பதற்கு
பக்கத்தில் மகனிருந்தால்
பாவி என் வாழ்வில்
துக்கம் குறந்து விடும்
தொல்லைகள் பறந்து விடும்.
செருப்பு பிஞ்சு போச்சு
சேர்ட்டு கிழிஞ்சு போச்சு
தெருவிலுள்ள மனிதரிடம்
தேவைகளைக் கூறும் போதும்
என் அருமை மகனே
அவருனக்கு ஏசுவதை
பொறுக்குதில்லையடா
பொன்னான என் மகனே
இன்னும் எத்தனை நாள்
இருப்பேனோ உயிரோடு
எண்ணுகிறேன் நாட்களினை
இறந்து நான் போகு முன்னால்
பறந்து வா மகனே
பாசமாய் உன் வாயை
திறந்து வாப்பான்னு
திருப்தி தரக் கூப்பிடுவாய்
இரந்து கேட்கின்றேன்
இதையேனும் செய்வாயா?
(பிள்ளைகளால் கைவிடப்பட்டு வறுமையில் வாடும் மனிதர் ஒருவர் மனக் கவலைகளை என்னிடம் கொட்டினார். அத்தோடு மேலதிக சில விபரங்களையும் சேர்த்து எழுதப்பட்டது)
-Mohamed Nizous-