அஸ்ஹர் இப்றாஹிம்-
16 அணிகள் பங்கு பற்றிய ஈஸ்டர்ன் பேர்ல்ஸ் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி அண்மையில் கட்டார் அல்- ஸாத்சென்டர் பொய்ன்ட் மைதானத்தில் ஈஸ்டர்ன் பேர்ல்ஸ் மற்றும் சிலோன் எய்சஸ் அணிகளுக்கிடையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.
இப்போட்டியில் 76 ஓட்டங்களினால் பெரு வெற்றியீட்டி இவ்வாண்டில் மூன்றாவது முறையாகவும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சம்பியன் கிண்ணத்தை ஈஸ்டர்ன் பேர்ல்ஸ் விளையாட்டுக்கழகம் சுவீகரித்தது .
இறுதிப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிலோன் எய்சஸ் அணியினர் முதலில்களத்தடுப்பை தேர்வு செய்தனர். இதன்படி முதலில் களமிறங்கிய ஈஸ்டர்ன் பேர்ல்ஸ் அணியினரின்ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் ஹக்கீம் மற்றும் ரியாஸ் ஆகியோர் முதல்விக்கட்டுக்காக 108 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொடுக்க, 8 ஓவர்கள் முடிவில் ஈஸ்டர்ன் பேர்ல்ஸ் அணியினர் 1 விக்கட்டைமாத்திரம் இழந்து 114 ஓட்டங்களை பெற்றிருந்தனர். இதில் ஆரம்பதுடுப்பாட்ட வீரர் ரியாஸ் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களையும், ஹக்கீம் 52 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர் .
பதிலுக்கு 115 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிலோன் எய்சஸ் அணியினர்ஆரம்பத்திலேயே ஈஸ்டர்ன் பேர்ல்சின் ஆரம்ப பந்துவீச்சாளர்களான ரிஹான் ,அஸ்லம் மற்றும்ஹமீஸ் ஆகியோரின் பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினர். இறுதியில் சிலோன் எய்சஸ் அணியினர் 6.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 38 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 76ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர் .
பந்து வீச்சில் ஈஸ்டர்ன் பேர்ல்ஸ் அணி சார்பில் ரிஹான் 5விக்கட்டுக்களையும் ஹமீஸ் மற்றும் அஸ்லாம் தலா 2 விக்கட்டுக்களையும், ஹக்கீம் ஒருவிக்கட்டினையும் கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தனர் .
இறுதிப்போட்டியின் சிறப்பாட்டகாரராக 5 விக்கட்டுக்களை கைப்பற்றிய ரிஹான் தெரிவு செய்யப்பட்டஅதே வேளை தொடரின் சிறப்பாட்டக்காரராக 212 ஓட்டங்களையும் 7 விக்கட்டுகளையும் கைப்பற்றி சகலதுறையில் பிரகாசித்த ரியாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இம் மாபெரும் இறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக கல்முனை சுப்பர் மார்க்கட் வர்த்தகர் அல்ஹாஜ் யூ.எல்.செயின் ஹாஜி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அணியின் ஆலோசகர்களில்ஒருவரான சகோ. யாசீர் அலியார் மற்றும் அணியின் நலன்விரும்பிகளான சகோ. நிஜாம், சகோ. ரிலாஅலியார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளையும் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.இறுதிப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வை ஈஸ்டர்ன் பேர்ல்ஸ் சமூக அமைப்பின் தலைவர் சகோ.ரம்ஸான் அபூபக்கர் தொகுத்து வழங்கியிருந்தார் .