இவ்வருடத்துக்கான ஹஜ் முகவர் நியமனம் பெற்றுக் கொள்வதற்காக 130 முகவர் நிலையங்கள் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு விண்ணப்பித்துள்ளன.
முகவர் நிலையங்களை தெரிவுசெய்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிமுறைகளின் (Guide Lines) படியே நேர்முகப்பரீட்சை நடாத்தி புள்ளிகள் வழங்கப்படவுள்ளதாகவும் முகவர் நிலையங்களுக்கு எதிராக கடந்தகாலங்களில் முறைப்பாடுகள் ஏதும் கிடைத்திருப்பின் அது கவனத்திற்கொள்ளப்படுமெனவும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல் தெரிவித்தார்.
மேலும் இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இதுவரை 4400 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஹஜ் பயணத்தை உறுதி செய்யுமாறு 3000 விண்ணப்பதாரிகளுக்கு திணைக்களம் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கடிதம் கிடைக்கப்பெற்றவர்கள் தமது பயணத்தை திணைக்களத்திடம் உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
திணைக்களம் ஹஜ் கடமைக்கான விண்ணப்பங்களை தொடர்ந்தும் ஏற்றுக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.