த.நவோஜ்-
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மஹா கும்பாபிஷேகத்தின் போது உலங்கு வானுர்த்தி மூலம் கோபுர பூசையில் மலர்கள் தூவப்பட்டது. கடந்த 30ம் திகதி கிரியைகளுடன் ஆரம்பமாகி சனிக்கிழமை எண்ணெய்க்காப்பு வைக்கும் நிகழ்வு இடம்பெற்று ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
எண்ணெய் காப்பு சாத்தும் மற்றும் கும்பாபிஷேக நிகழ்வின் போது இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஆகம பிரவீணர் சிவஸ்ரீ.கு.குகேஸ்வரக் குருக்கள் (நீர்கொழும்பு), கிரியா பூசணம் சிவஸ்ரீ.கு.கிருபாகரக் குருக்கள் (மலேசியா) ஆகியோரால் கும்பாபிஷேக கிரியைகள் யாவும் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேக பூசைகள் மற்றும் சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது. இதன்போது கிராம இளைஞர்களால் பக்தர்களின் நலன் கருதி தாகசாந்தி நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தனர். அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை வரலாற்றுச் சிறப்புப் பெற்ற வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.