முஹம்மத் ரோஷன்-
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 2018 ஆம் ஆண்டிற்குள் உயர்தர விஞ்ஞானத்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்காலத்தில் சிறப்பான அடைவு மட்டத்தை எய்துவதற்கான முயற்சிகளை கல்லூரி பழைய மாணவர் சங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இவ்விடயம் சம்பந்தமாக கல்லூரி உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுடனான முழுநாள் செயலமர்வொன்று இன்று வியாழக்கிழமை கல்லூரியின் விஞ்ஞான ஆய்வு கூட கேட்போர் கூடத்தில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடமபெற்றது.
இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலும் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளிலும் கல்வித்துறையிலும் ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் முன்னணியில் திகழும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் க.பொ.த.உயர்தர விஞ்ஞானத்துறையில் குறிப்பாக உயிரியல் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தி மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை அதிகரிக்கச் செய்வதுடன் வருடா வருடம் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்களின் தொகையை அதிகரிப்பதற்காக கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மேலதிகமாக இலங்கையில் மிகவும் பிரபலம் பெற்ற துறைசார் வளவாளர்களைக் கொண்டு மேலதிக வகுப்புகளையும் ஒழுங்கு செய்து மாணவர்களின் கற்றலுக்கு பல்வேறு வகையிலும் உதவி செய்து வருவதோடு அவர்களுக்கு பக்க பலமாகவும் இருந்து வருகின்றனர்.
இதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி உயர்தர கணிதப்பிரிவில் அதிகளவிலான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்ற போதிலும் அண்மைக்காலமாக உயிரியல் துறையில் ஏற்பட்டிருந்த சற்று தொய்வு நிலையை அவதானித்த கல்லூரியின் பழைய மாணவர் குழு கல்லூரி அதிபர், முகாமைத்துவ சபை , பாடசாலை அபிவிருத்தி சபை, பழைய மாணவர் சங்கம் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடி உயிரியல் பிரிவின் தொய்வு நிலையை தற்காலிகமானதொன்றாக கருதி உடனடியாக அதற்கான பரிகார நடவடிக்கையாகவே மேற்கூறப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது உயர்தர உயிரியல் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் வெற்றியளித்துள்ளதோடு அதில் கணிசமான முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கு முதல் இந்த முயற்சி வெற்றிபெறும் என்பதில் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் கருத்து தெரிவித்தார்.