நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாக சம்பந்தம் ஐயாவும், தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரமே இருப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகத் தெளிவாக அறிவித்துள்ளார் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராச்சி அமைச்சின் 'கிராமத்திற்கு தொழில்நுட்பம்' எனும் தொனிப்பொருளின் கீழ் சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சாய்ந்தமருது விதாதா வள நிலைய புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (04) திங்கட்கிழமை இடம்பெற்றது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில் விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் விதாதா வள நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சிறுகைத்தொழில் அமைச்சர் தயா கமகே, கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
கல்முனை பிரதேசத்தில் கைத்தொழில் துறையில் வளர்ச்சி ஏற்பட்டு வருவதை உணர முடிகிறது. எமது பிரதேச தரமான நெசவு உற்பத்தி பொருட்களான சாரம், சாரிகள் என்பன அனைவராலும் விரும்பி கொள்வனவு செய்யக் கூடியளவு உள்ளது. இந்தியாவின் உற்பத்தி பொருட்களுக்கு நிகராக எமது கல்முனை பிரதேச நெசவு உற்பத்தி பொருட்கள் பிரபல்யம் அடைந்துள்ளதுடன் தலைநகரில் பல காட்சிறைகளும் உள்ளன.
இந்தியாவின் பெங்களுர், கைதராபாட், சென்னை போன்ற நகரகங்கள் தொழில்நுட்பத் துறையில் பிரகாசிக்கின்றது. அங்குள்ள இளைஞர்கள் தொழில்நுட்ப கல்வியினை கற்று மாதாந்தம் கூடுதலான வருமானத்தை ஈடுகின்றனர்.
இந்த தொழில்நுட்ப வசதிகளை எமது நாட்டிலும் ஏற்படுத்த நாட்டின் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை எடுத்து வருகிறார். அதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தகளும் கைச்சாத்திடப்படவுள்ளது. இதன் மூலம் பிரதமரின் தேர்தல் வாக்குறுதியான 10 லட்சம் தொழில் வாய்ப்புக்கள் எமது நாட்டில் உருவாகப்படவுள்ளது.
இதில் எமது இளைஞர், யுவதிகளும் உள்வாங்கப்படவுள்ளனர். அதற்கான ஆயத்தங்களுடன் உரிய கற்கை நெறிகளை மேற்கொண்டு எமது இளைஞர்கள் தயாராக இருக்கவேண்டும்.
நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையில் சிறுபான்மை சமூகத்தின் ஏக பிரதிநிதிகளாக சம்பந்தம் ஐயாவும், தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரமே இருப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகத் தெளிவாக ஏறாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் தேசிய இயக்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பாலமுனையில் இடம்பெற்ற கட்சியின் 19வது தேசிய மாநாடு உணர்த்தியுள்ளது. இன்று சிலர் தங்களை தாங்களே தேசிய தலைமைகளாக சித்தரித்துத் திரிகின்றனர். இவர்களின் அற்ப சொற்பங்களுக்காக சிலர் திரிகின்றனர். இதனை மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
நாட்டின் அரசியல் அமைப்பு மாற்றம் சம்பந்தமாக இன்று பேசப்படுகின்றது. இதில் முஸ்லிம் சமூகம் பாதிக்காதவாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் கட்சியின் செயற்பாட்டை இல்லாமல் செய்வதற்கு பல சதிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதனை நாம் நன்கு புரிந்து வைத்துள்ளோம். இச்சதிகளுக்கு முகம் கொடுத்து முறியடிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். ஆனால் மக்கள் குழம்பிவிடாமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
முஸ்லிம்களின் பிரச்சினைகளை பேசக்கூடிய சக்தியும், மக்கள் பலமும், மக்கள் ஆணையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.