கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த தனது போட்டியாளர் விரும்பும் பாதுகாப்புக் குழுவைத் தெரிவு செய்து ஹெலிக்கொப்டர் மூலம் ஊருக்கு செல்ல அனுமதி அளித்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்து அலரிமாளிகையில் இருந்து வௌியேறும் போது, இலங்கை ஜனாதிபதி பதவி தன் வசம் இருந்தது என அவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை கண்டுகொள்ள முடியாது போனதால், ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் தனது பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை தீர்மானித்துக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"நான் ஹெலிக்கொப்டரில் சென்ற போது தேர்தல் முடிவுகள் வௌியிடப்பட்டிருக்கவில்லை, தேர்தல்கள் ஆணையாளர் உத்தியோகபூர்வ முடிவை அறிவித்திருக்கவும் இல்லை, அப்போது சிறிசேன பொது வேட்பாளர், அவரை என்னால் கண்டு கொள்ள முடியவில்லை, பின்னர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து விட்டு காலை 06.00 மணிக்கு வௌியேறினேன்.
இதன்படி எனது பாதுகாப்பு குழுவினருடன் அன்று கொழும்பில் இருந்து வௌியேறிய போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி நானே" என, மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தேர்தலில் தோல்வியடைந்த பின்னும் தொடர்ந்தும் பதவியில் இருக்க முற்பட்டதாக வௌியான செய்திகளையும் அவர் இதன்போது மறுத்துள்ளார்.