இனவாதிகளை ஏமாற்றிய முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடும் காழ்ப்புணர்ச்சி கொண்ட எம்மவர்களும்..!

ழை நின்றாலும் தூவானம் விடவில்லை என்பார்கள். அதுபோல ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பத்தொன்பதாவது தேசிய மாநாடு முடிந்து இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் அதுபற்றிய விமர்சங்கள் இன்னும் ஓயவில்லை. 

இந்நாட்டின் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தினை பிரதிநித்துவப்படுத்துவதும், அங்கீகரிக்கப்பட்டதுமான ஓர் அரசியல் கட்சி என்றவகையில், அதற்கு தேசிய மாநாடு மட்டுமல்ல எந்தவொரு மாநாடும் நடாத்துவதற்கு உரிமை உண்டு. அந்தவகையில்தான் கடந்த பத்தொன்பதாம் திகதி குறித்த மாநாட்டினை முஸ்லிம் காங்கிரஸ் நடாத்தியது. அம்மாநாட்டில் அக்கட்சியின் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களும், போராளிகளும், தீவிர செயட்பாட்டாளர்களும் நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் கலந்துகொண்டார்கள். 

அவர்களது கட்சி, அவர்களது மாநாடு இடையில் மூன்றாம் நபருக்கு என்ன பிரச்சினை? ஏன் அதனை விமர்சிக்க வேண்டும்? மு.கா காரர்கள் தீர்மானம் நிறைவேற்றுவார்கள் அல்லது நிறைவேற்றாமலும் விடுவார்கள். இதனை அந்தக் கட்சிக்காரர்களும், அக்கட்சியில் உரிமை உள்ளவர்களும் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் முஸ்லிம் காங்கிரசோடு சம்பந்தம் இல்லாத இடையிலுள்ளவர்கள் ஏன் அதனை பற்றி அலட்டிக்கொள்ள வேண்டும்? இதுதான் இன்று எழுகின்ற சில கேள்விகளாகும். 

இவர்களது இந்த விமர்சனம் மூலம் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது இந்நாட்டு முஸ்லிம் மக்களின் ஒரேயொரு ஏகபிரதிநிதி முஸ்லிம் காங்கிரசும், அதன் தலைவர் ரவுப் ஹக்கீம் மட்டும்தான். வேறு யாராலும் முஸ்லிம் மக்களுக்காக பேசவோ, தலைமை தாங்கவோ முடியாது, அத்துடன் முஸ்லிம் காங்கிரசின் தலைவர்தான் முஸ்லிம்களுக்கான அரசியல் கோரிக்கையினை முன்வைக்க முடியும் என்ற மறைமுக சமிக்ஜையை இவர்களது இந்த விமர்சனம் வெளிப்படுத்துகின்றது. 

முஸ்லிம் காங்கிரஸ் அதன் தேசிய மாநாட்டினை நடாத்தப்போகின்றது என்ற செய்தி வெளியானதும் அக்கட்சியையும், அதன் தலைவரையும் அழிக்க காத்துக்கொண்டிருந்த அதன் எதிரிகளை கிலிகொள்ளச் செய்தது. இதனை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று கையை பிசைந்துகொண்டிருந்த வேளையில், பழம் நழுவி பாலில் விழுந்ததுபோன்று முஸ்லிம் காங்கிரசில் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்மாட்டாது என்பது உறுதியானதனால் கட்சிக்கும், தலைவருக்கும் குழிபறிக்க காத்துக்கொண்டிருந்த துரோகிககள் சிலரின் அரவணைப்பு இவ்வெதிரிகளுக்கு கிடைத்தது. 

இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரசின் எதிரிகளும், துரோகிகளும் ஒன்று சேர்ந்து பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர்களது அனைத்து உச்ச வளங்களையும் பயன்படுத்தி இம்மாநாட்டினை தடுக்க முற்பட்டனர். இறுதியில் அல்லாஹ்வின் உதவியினை கொண்டு முஸ்லிம் காங்கிரசின் போராளிகளின் அயராத உழைப்பினாலும், தியாகத்தினாலும் எதிர்பார்த்ததனையும்விட அதிக மக்களின் பங்கேற்புடன் அம்மாநாடு வெற்றியுடன் நிறைவடைந்தது. 

இம்மாநாட்டுக்கான அறிவிப்பு வெளியானதும், இது தேசிய ரீதியில் நன்கு பிரபலமடைந்ததுடன், பலவித சந்தேகக்கண்கொண்ட அதிக எதிர்பார்ப்புக்களையும் தென்னிலங்கையின் சிங்கள இனவாதிகள் மத்தியில் தோற்றுவித்தது. நல்லாட்சிக்கான அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற சூழ்நிலையில், முஸ்லிம் காங்கிரசின் இந்த தேசிய மாநாட்டில் அதன் தலைவர் முஸ்லிம் மக்களுக்காக என்ன கோரிக்கையினை முன்வைக்க போகின்றார் என்று சிங்கள இனவாதிகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். 

முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் அதன் ஒவ்வொரு தேசிய மாநாடுகளிலும் கால சூழ்நிலைக்கு ஏற்ற சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அதுபோல் இம்மாநாட்டிலும் பல முக்கிய விடயங்கள் தலைவர் அவர்களினால் முன்மொழியப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர், மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும், கட்சி தலைவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்றதனால், எமது பிரச்சினைகள் அவர்களுக்கு விளங்கும்விதமாக ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் தலைவர் ஹக்கீம் அவர்கள் உரையாற்றினார். 

அந்தவகையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் சம்பந்தமாகவும், தங்களது சமயத்தினை பின்பற்றுவதில் ஏற்பட்ட இடையூறுகள் சம்பந்தமாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் முஸ்லிம் நாடுகளில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்ற ஐ.எஸ் எனும் ஆயுத இயக்கத்துடன் இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கும் தொடர்புகள் உள்ளது என்ற குற்றச்சாட்டுக்களை இன்றைய நல்லாட்சியில், தென்னிலங்கை சிங்கள இனவாதிகள் முன்வைத்து வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் சம்மந்தமாக இம்மாநாட்டின் மூலம் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 

வடகிழக்கில் யுத்தம் நடைபெற்று கொண்டிருந்த காலத்தில் யுத்த சூன்ய பிரதேசங்களுக்கு சென்று தங்களது நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் கைவிடப்பட்டிருந்த முஸ்லிம்களின் காணிகள் அனைத்தும் காடுகள் போன்று காட்சியளித்ததனால், அது வனப்பிரதேசம் என்று அரசாங்கத்தினால் வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான முஸ்லிம்களின் காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் சிங்கள முஸ்லிம் எல்லைக் கிராமங்களில் ஏராளமான முஸ்லிம்களின் காணிகள் சிங்களவர்களினால் அபகரிக்கப்பட்டது. எனவே முஸ்லிம் மக்களின் இழந்த காணிகளை மீண்டும் உரியவர்களுக்கு வளங்கும்பொருட்டு அரசாங்கம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதுடன், விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டுமென்று தேசிய மாநாட்டின் மூலமாக தலைவர் ஹக்கீமினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இப்பிரதேசத்திலுள்ள இளைஞ்சர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இங்கு வரவளைப்பதன் மூலம் அதனை செய்யமுடியுமென்றும், இனப்பிரச்சினை தீர்வின்போது முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை வழங்க வேண்டுமென்றும் தலைவர் ஹக்கீம் அவர்களினால் தேசிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. 

தலைவரின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த உரையினை தமிழ் பத்திரிகைகள் புறம்தள்ளிவிட்டு ஏனைய உட்கட்சி பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தது. இதனால் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியினை புரிந்துகொள்ள முடியாதவர்களினால் தலைவரின் முழுமையான உரையினை அறிந்துகொள்ள முடியவில்லை. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த முற்பட்ட முஸ்லிம் காங்கிரசின் எதிரிகளும், துரோகிகளும் சமூகம் சார்ந்த எந்தவொரு விடயங்களையும் இம்மாநாட்டின் மூலம் ஹக்கீம் முன்வைக்கவில்லை என்று வேண்டுமென்றே குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டு செல்கின்றனர். 

பிரதம அதீதிகளும், ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு உரையாற்றிவிட்டு கலைந்து சென்றதுடன், அவர்களுடன் வந்திருந்த சர்வதேச மற்றும் தேசிய ஊடகவியலாளர்களும் சென்றுவிட்டனர். அத்துடன் மாநாட்டுக்குரிய முக்கியத்துவம் வாய்ந்த சம்பிரதாய நிகழ்வுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டன. 

அதன் பிற்பாடு கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் இருந்துகொண்டு பொறுப்பற்ற முறையில் மாநாட்டினை தடுக்கும் நோக்கில் சூழ்ச்சிகளில் ஈடுபட்ட சில கட்சியின் மூத்த உறுப்பினர்களின் நடவடிக்கைகளை கட்சி போராளிகள் முன்பாக தலைவர் போட்டுடைத்தார். இவ்வாறான தலைவரின் உரையினை மாநாட்டுக்குரிய சம்பிரதாய உரையாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவேதான் தலைவரின் சம்பிரதாயமற்ற உரைக்கு தமிழ் பத்திரிகைகள் முக்கியத்துவம் வழங்கியிருந்தன. 

தமிழ் மக்கள் அரசியல் போராட்டத்தினை நடாத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் மக்களுக்கான கோரிக்கைகளை வெளிப்படையாகவே கோரியிருந்தார்கள். இதனாலேயே தென்னிலங்கையின் சிங்கள இனவாதிகளினால் எந்தவொரு அரசியல் உரிமைகளும் தமிழர்களுக்கு வழங்க அனுமதிக்காமல் அனைத்தும் அவ்வப்போது குழப்பியடிக்கப்பட்டன. இது எமக்கு ஒரு பாடமாகும். இதனாலேயே முஸ்லிம்களின் கோரிக்கைகளும் தென்னிலங்கை இனவாதிகளினால் குழப்பியடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் தலைவர் ஹக்கீம் அவர்கள் மிகவும் கவனத்துடன் செயற்பட்டு வருகின்றார். 

எனவேதான் தென்னிலங்கை இனவாதிகள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டு உரையில், முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று மட்டும் தலைவர் கூறினாரே தவிர, அந்த தீர்வு என்னவென்று கூறவில்லை. தலைவர் நினைத்திருந்தால் மக்களை உணர்ச்சியூட்டும் விதமாக ஏதாவது கூறியிருக்கலாம் ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. 

இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம் மக்களுக்கு எப்படிப்பட்ட தீர்வினை வழங்கவேண்டுமென்று கோரியிருந்தால், முஸ்லிம்கள் நாட்டை பிரித்து “கிழக்கிஸ்தான்” கோருகின்றார்கள் என்று கூறி பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாதிகள் வீதியில் இறங்கியிருப்பார்கள். அதனால்தான் இவைகள் அனைத்தையும் உணர்ந்த எமது தலைமைத்துவம், முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வினை வழங்கவேண்டும் என்றதுடன் நிறுத்திக்கொண்டது. 

என்ன தீர்வு என்ற விடயங்கள் நாலு சுவருக்குள் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தை மேசையில் பேசப்படும். இதுதான் சானாக்கியமான எமது அரசியல் ராஜதந்திரம். இந்த ராஜதந்திரத்தினால் ஏமாந்தவர்கள் தென்னிலங்கையின் சிங்கள பேரினவாதிகளாகும். 

முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -