இந்தத் தேர்தலில் எனக்கு வாக்குரிமை இல்லை. எனவே ஓட்டுப் போட மாட்டேன். ஷூட்டிங் கிளம்பிடுவேன் என்று கமல் ஹாஸன் கூறியிருந்தார். அவருக்கு பதிலளிக்கும் வகையில், கமல் ஹாஸன் மற்றும் கவுதமிக்கு வாக்குரிமை உள்ளதற்கான புகைப்படம் ஒட்டப்பட்ட வரிசைப் பட்டியலை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது.
நேற்று நடந்த சபாஷ் நாயுடு படத்தின் தொடக்கவிழா செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல் ஹாஸன், "என்னுடைய 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 16 ம் தேதி தொடங்குகிறது. அதனால் படப்பிடிப்புக்கு போய் விடுவேன்.
இந்த சட்டமன்றத் தேர்தலில் நான் வாக்களிக்க முடியாது என்றும் சொல்லலாம்... வாக்களிக்க மாட்டேன் என்றும் சொல்லலாம். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, என் வாக்கை யாரோ முன்னரே போட்டு எனக்கு அதிர்ச்சி தந்தார்கள்.
அதுவும் வாக்குச் சாவடிக்குப் போன பின்னர் எனக்கு வாக்கு இல்லை என்பதை அறிந்து, நான் ஏமாற்றமடைந்தேன். விளக்கம் கேட்டபோது, வாக்காளர் பட்டியலிலேயே என் பெயர் இல்லை என்று சொல்லி விட்டார்கள்!'' என்றார்.
இந்த நிலையில், கமல்ஹாசன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் (வீட்டு எண்:4/172 ) கமல்ஹாசன் மற்றும் கவுதமி ஆகியோரின் புகைப்படம் ஒட்டப்பட்ட வரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
அப்பறமென்ன கமல் சார்... உங்க ஜனநாயகக் கடமையை ஆற்ற தடையேதுமில்லையே!