அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என அழைத்து ஆசிரியர் ஒருவர் அவமானபடுத்தி உள்ளார். ஹீஸ்டன் முதல் காலனியில் உள்ள பாடசாலையில் 7–வது வகுப்பில் கல்வி கற்கும் வாலீத் அபுஷாபான் (12) என்ற முஸ்லிம் மாணவனையை இவ்வாறு குறித்த ஆசிரியை அவமானபடுத்தி உள்ளார்.
சம்பவத்தன்று, வகுப்பறையில் ‘பென்ட் இட் லைக் பெக்காம்‘ என்ற சினிமா படம் காட்டப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர், படத்தில் வந்த நகைச்சுவை காட்சிகளை நினைவுபடுத்தி குறித்த மாணவன் சத்தமாக சிரித்து உள்ளான்.
அப்போது அங்கு வந்த ஆங்கிலமொழி ஆசிரியை வாலீத்தை பார்த்து ‘நீ ஒரு தீவிரவாதி’ அதனால்தான் சிரிக்கிறாய் என்று கூறியுள்ளார்.
அதைக் கேட்டு உடன் படிக்கும் மற்றைய மாணவர்கள் பலமாக சிரித்துள்ளனர். அவர்களும் வாலீத்தை தீவிரவாதி என அழைத்து கேலி கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் மனவருத்தம் அடைந்த வாலீத் அதுகுறித்து தனது தந்தை மாலிக் அபுஷா பானிடம் தெரிவித்துள்ளான். அவர் பாடசாலை நிர்வாகத்திடம் தனது மகனை தீவிரவாதி என அழைத்த ஆசிரியை மீது புகார் செய்துள்ளார்.
அதை தொடர்ந்து, குறித்த ஆசிரியை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.