எம்.ஷபீக்-
சிறந்த மதிப்பான எண்ணங்களை மாணவர் மனங்களில் விதைக்கும் கல்விக் கூடங்களும் கல்வியியலாளர்களும் என்றைக்கும் மதிக்கப்பட்டு போற்றப்பட வேண்டும். அவ்வாறு ஊக்கப் படுத்துவது சமூகக்கடமையாக நோக்கப்படுகிறது. எனது அரசியல் பிரவேசத்திற்கு முன்னரும் கல்விச் செயற்பாடுகளில் மிக நெருக்கமான பணிகளைச் செய்திருக்கின்றேன்.
மாணவர் கல்வி மேம்பாட்டிக்கு என்றும் துணை நிற்பேன். அதற்கு நான் முன்னுரிமை கொடுக்கக் கூடியவனாக இருப்பேன் எனத் தெரிவித்தார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்களின் இணைத்தலைவருமான கௌரவ கே.காதர் மஸ்தான் அவர்கள்.
வவுனியா சைவப் பிரகாச மகளிர் கல்லூரியில் உயர்தரப் பரீட்சையில் சாதனை புரிந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அப்பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ கே.காதர் மஸ்தான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மேற்படி சைவபிரகாச மகளிர் கல்லூரியின் க.பொ.த (உஃத) -2015 மாணவர்களின் கௌரவிப்பு விழாவில் அழைத்தமையானது பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயமாக உள்ளதெனக் கூறினார். இப் பாடசாலையின் பழைய மாணவராகிய நான் இவ்வாறு பரீட்சையில் தோற்றி சாதனை படைத்த இம் மாணவர்களின் கௌரவிப்பு விழாவானது இம் மண்ணிற்கு பெருமை தேடித்தருகின்றது.
இம்மாணவர்கள் பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெற்று மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துவதோடு இப்பாடசாலையின் சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களிலும் ஆதரவாக இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியதோடு மாணவர்களுக்கு உதவி நலத்திட்டங்களும் வழங்கி வைத்தார்.