பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு (வை.எம்.சீ.ஏ) கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் முன்மாதிரிமிக்க சிறந்த பெண் முயற்சியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று 31 வியாழக்கிழமை மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ தலைவர் ஈ.வி.தர்ஷன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக மட்டக்களப்பு செலான் வங்கிக் கிளை முகாமையாளர் திருமதி பத்மசிறி இளங்கோ கலந்து கொண்டார்.
இதன் போது அதிதிகளினால் தெரிவு செய்யப்பட்ட வை.எம்.சீ.ஏயின் நுண் கடன் பிரிவினால் கடன்களை பெற்று தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திய 75 முன்மாதிரிமிக்க சிறந்த பெண் முயற்சியாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ,கிராம மட்டத்தில் தலைமை தாங்கி நடாத்தும் 48 பெண் ஊக்குவிப்பாளர்களும்; பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் சிறப்பு அம்சமாக வை.எம்.சீ.ஏயின் நுண் கடன் திட்ட இணைப்பாளர் திருமதி.ரெபேக்கா கொன்ஸ்டன்டைன் சேவையை பாராட்டி அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இங்கு பெண்களில் பல்வேறுபட்ட ஆற்றல்களை வெளிக்கொனரும் பல்வேறு கலை,கலாசார நடன நாட்டிய நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இச் சர்வதேச மகளிர் தின நிகழ்வில் மட்டக்களப்பு (வை.எம்.சீ.ஏ) கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின்; பொதுச் செயலாளர் கலாநிதி டி.டி.டேவிட்,அதன் உப தலைவர் திருமதி.ஆர்.கருணாகரன்,அதன் இயக்குனர் சபை உறுப்பினர்களான திருமதி.மதிதரன்,பாக்கியராஜா, வாழ்வோசை பாடசாலை அதிபர் திருமதி. முhலினி டேவிட் உட்பட வை.எம்.சீ.ஏயின் கிராம மட்டத்திலான நுண் கடன் திட்ட அங்கத்தவர்கள், கிறிஸ்தவ,தமிழ்,முஸ்லிம் பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த மட்டக்களப்பு (வை.எம்.சீ.ஏ) கிறிஸ்தவ வாலிபர் சங்கம் பொருளாதார ரீதியில் பெண்களை வலுப்படுத்தும் வறுமை ஒழிப்பு திட்டம்,செவிப்புலனற்ற மாணவர்களுக்கு வாழ்வோசை பாடசாலை நடாத்துதல்,சிறுவர் நலன் திட்டங்கள் போன்ற பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு (வை.எம்.சீ.ஏயின் ஊடக இணைப்பாளர் பூ.விமலாகரன் தெரிவித்தார்.