பி. முஹாஜிரீன்-
நல்லாட்சி அரசாங்கத்தின் 'கிராம இராஜிய' திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை கிராமத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள கிராமத்திற்கொரு வேலைத்திட்டம் தொடர்பில் வேலைத் திட்டங்களை இனம் காண்பதற்கான கலந்துரையாடல் நேற்று (01) வெள்ளிக்கிழமை மாலை பாலமுனை அல்-ஹிதாயா பெண்கள் கல்லூர்யில் நடைபெற்றது.
பாலமுனையிலுள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள சமூகசேவை அமைப்புகள், சங்கங்கள் கழகங்களின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
ஒரு கிராமத்தில் வீதி நிர்மாணிப்பு, வடிகான் அமைத்தல், வாழ்வாதார உதவிகள், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்றவற்றில் மிக முக்கியமாக மக்களுக்கு தேவைப்படும் அபிவிருத்தி திட்டங்களை பொது மக்களே இனங்கண்டு முன்வைப்பதுடன் அவ்வேலைத் திட்டங்களே நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இராஜிய திட்டத்தின் கீழ் பிரதேச செயலக ரீதியாக 2016ம் ஆண்டில் அமுல்படுத்த வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகள் தோறும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை முன் வைத்தனர்.