எப்.முபாரக்-
திருகோணமலை, மொறவெவப் பகுதியில் பாடசாலை சென்ற 14 வயது மாணவியைக் கடத்திச் செல்ல முற்பட்ட முச்சக்கரவண்டி சாரதியை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீ கஹகே, செவ்வாய்க்கிழமை (05) உத்தரவிட்டார்.
இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர் பன்குளம், மொறவெவப் பகுதியைச் சேர்ந்த (வயது-19) வயது இளைஞன் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மொறவெவப் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவி பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது முச்சக்கரவண்டியில் ஏற்றுவதை அவதானித்த தந்தை, வேகமாக மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று முச்சக்கரவண்டி சாரதியைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
கைதுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியையும் முச்சக்கரவண்டியில் ஏறிச் சென்ற சிறுமியையும் பொலிஸார் விசாரணை செய்ததுடன், சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சோதனைகளை மேட்கொண்டுள்ளனர்.
அதனையடுத்து சிறுமியை, உறவினர்களிடம் ஒப்படைத்ததாகவும் குறித்த சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொறவெவப் பொலிஸார் தெரிவித்தனர்.