உழைக்கும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி துணிந்து குரல் கொடுக்கும்

மேதினச் செய்தியில் அமைச்சர் பி. திகாம்பரம் தெரிவிப்பு


ஒரு நாட்டின் அபிவிருத்தியில் உழைக்கும் மக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். அந்த வகையில் மலையக உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுக்கவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தமிழ் முற்போக்கு கூட்டணி துணிந்து குரல் கொடுக்கும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,

மலையக மக்களின் உழைப்புக்கு இந்த நாட்டில் இருநூறு வருட கால வரலாறு இருக்கின்றது. தேயிலைத் தோட்டங்களை செல்வச் செழிப்புள்ள பூமியாக்கி உலகத் தரத்துக்கு தேயிலையை உற்பத்தி செய்து இலங்கைத் திருநாட்டுக்கு பெருமை சேர்த்த பெருமை பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு இருக்கின்றது. அந்த உழைப்பாளர்களுக்குத் தலை வணங்கி அவர்களின் வாழ்வு செழிக்க இந்த மேதினத்தில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த தேர்தலின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கப்பட்டு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொண்டது. அதில் மலையக மக்களுக்கு ஏழு பேர்ச் காணியில் தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியிருந்தது.

அவை இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. நுவரெலியா மாவட்டத்தில் 400 தனி வீடுகளைக் கொண்ட இரண்டு கிராமங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மலையக மக்களின் இருநூறு ஆண்டு காலப் பிரச்சினைகளுக்கு ஒரு சில ஆண்டுகளில் தீர்வுகளைக் கண்டு விட முடியாது. இருப்பினும், எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான அடித்தளத்தை நாம் போட்டுக் கொள்ள முடியும். 

அதற்கு மலையக மக்களின் நலன்களைப் பற்றி சிந்திக்கின்ற அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க முன்வர வேண்டும். அந்த அடிப்படையில் நீண்ட கால திட்டத்தின் ஓர் அங்கமாக தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் முதலாவது ஐக்கிய மேதினம் இன்று இடம்பெறுகின்றது. 

தேர்தல் கால கூட்டணி தேர்தல் முடிந்த பிறகு உடைந்து விடும் என்று சிலர் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதை மிகவும் பலமுள்ள கூட்டணியாக தொடர்ந்து வளர்த்தெடுக்கும் வகையில் பதிவு செய்து எமது செயற்பாடுகளை முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றோம்.

சிறுபான்மை சமூகங்கள் தனித்துவம் என்ற பெயரில் சுயநலம் கருதி தனித்து நின்று எதையும் சாதித்து விட முடியாது. ஒன்று சேர்ந்து குரல் எழுப்பும் போது எமது சக்தியை வெளிப்படுத்த முடியும். 

அந்த வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக உழைக்கும் மக்களின் உரிமைக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவற்றை வென்றெடுக்க என்றும் பாடுபடும். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் எமது எதிர்காலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -