அஸ்லம் எஸ்.மௌலானா-
அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த முழுநாள் செயலமர்வு இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் ஆரம்பமானது.
கட்சியின் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறுகின்ற இந்த செயலமர்வில் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி எம்.ஏ.எம்.ஹக்கீம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மு.கா. பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் உள்ளிட்டோர் விரிவுரையாற்றுகின்றனர்..
அரசியல் யாப்பு மறுசீரமைப்புக்கு முன்மொழிவுகளை தயாரிப்பதற்காக புத்திஜீவிகள், துறைசார் ஆர்வலர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளின் ஆலோசனைகளைப் பெறும் பொருட்டே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த செயலமர்வை ஒழுங்கு செய்துள்ளது.
இந்த செயலமர்வில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் புத்திஜீவிகளும் பங்கேற்றுள்ளனர்.