முஸ்லிம்கள் நாட்டின் சட்டங்களை மீறி ஏனைய சமூகத்தினரை சிரமங்களுக்குள்ளாக்கி தமது சமயக் கடமைகளை நிறைவேற்றுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என சிங்கள ராவய தெரிவித்துள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை நுவரெலியா – கொழும்பு பிரதான வீதியில் 4 ஓடுபாதைகளை மறைத்து முஸ்லிம்கள் தமது சமயக் கடமைகளை நிறைவேற்றினார்கள்.
இதனால் தமிழ், சிங்கள மக்கள் அசௌகரியங்களுக்குள்ளானார்கள் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்ததேரர் தெரிவித்தார்.
நேற்று மதியம் கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, முஸ்லிம்கள் தாம் நினைத்தவாறு ஏனைய மக்களை அசௌகரியப்படுத்தி சமயக்கடமைகளை முன்னெடுத்தமை வெறுக்கத்தக்க செயலாகும். பொலிஸாரும் இவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் ஒளிந்து கொண்டார்கள்.
அடுத்த வருடம் தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் நாங்களும் நுவரெலியாவுக்குச் செல்வோம். நாமும் பிரதான வீதியின் நடுவே சமய வழிபாடுகளைச் செய்வோம். நுவரெலிய நகரின் மத்தியிலே எமது சமய வழிபாடுகள் நடாத்தப்படும்.
பௌத்தர்கள் நாம் பாதை நடுவில் பிரித் ஓதுகிறோமா? முஸ்லிம்களின் இவ்வாறான செயல்கள் காரணமாகவே மோதல்கள் உருவாகின்றன. நாம் எந்தச் சவால்களுக்கும் தயாராகவே இருக்கிறோம்.
முஸ்லிம்கள் நுவரெலியாவில் பாதை மத்தியில் மேற்கொண்ட சமய நடவடிக்கைகளை இந்த வருடத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் நிலைமை மோசமாகி விடும்.
பொதுவான பாதையில் ஏதும் நிகழ்வுகள் மேற்கொள்ள வேண்டுமென்றால் 6 மணித்தியாலங்களுக்கு முன்பே அதுபற்றி குறித்த பிரதேச பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
பொலிஸிடமிருந்து அனுமதியும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலே நடு வீதியில் முஸ்லிம்கள் சமய கடமைகளை மேற்கொண்டனர்.
முஸ்லிம்கள் தமது சமய வழிபாடுகளை பள்ளிவாசல்களுக்குள்ளேயே நடத்திக் கொள்ள வேண்டும்.
அதைவிடுத்து பொது மக்களின் பாதையைப் பயன்படுத்த முடியாது. முஸ்லிம்கள் நட்டின் சட்டங்களை மதித்து தமது வழிபாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.