பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தியே அவர் இந்த முறையீட்டை செய்துள்ளார்.
பிரகீத் எக்னெலிகொட கொலை வழக்கு இன்னும் முடிவடையாத நிலையில், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தேவையற்ற தலையீட்டினால் நீதிமன்றத்துக்கு அவமானம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? எனக் கண்டறிந்து, நீதிமன்றத்தை அவமானப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தேரருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின் சந்தேக நபரான இராணுவ அதிகாரி, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் விசாரணை அதிகாரிகள் உட்பட வழக்குதாரர் சார்பில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், ஞானசார தேரர் உயர்ந்த சப்தத்தில் நீதிமன்றத்துக்குள் தெரிவித்த கருத்து மற்றும் தகவல்கள் என்பன குறித்தும் அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனு, மேன் முறையீட்டு தலைமை நீதிபதி விஜித் மலல்கொட உட்பட நீதிபதிகள் குழுவினால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.