எப்.முபாரக்-
மூதூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) மாலை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதுண்டதில் அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் மரணமடைந்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி-02, சரீப் புரக்டர் வீதியைச் சேர்ந்த முஹம்மது சாதிக் (வயது-31) என்பவரே விபத்தில் மரணித்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தந்தையும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரில் மகன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே மரணித்துள்ளார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த தந்தை எம்.செயினுலாப்தீன் (வயது 60) கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மூதூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.