மு.காவின் முரண்பாடுகள் வளரக் கூடாது...!

எம்.சஹாப்தீன் -

லங்கை முஸ்லிம்களின் அதிக பட்ச ஆதரவை பெற்றுள்ள முஸ்லிம் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்குகின்றது. இக்கட்சி ஆரம்பம் முதல் இன்று வரைக்கும் பல முரண்பாடுகளையும், பிரிவுகளையும் சந்தித்துள்ளது. இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் மாத்திரம் நடைபெற்ற ஒன்றல்ல.

எல்லா அரசியல் கட்சிகளும் முரண்பாடுகளையும், பிளவுகளையும் சந்தித்துள்ளன. ஆயினும், முரண்பாடுகளினாலும் அதனோடு இணைந்தவாறு இடம்பெற்ற பிளவுகளினாலும் பல அரசியல் கட்சிகள் தடம்புரண்டுள்ளன. செல்வாக்கை இழந்துள்ளன. 

அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் காலத்திலிருந்து ரவூப் ஹக்கீமின் காலம் வரைக்கும் முரண்பாடுகள், பிளவுகளுக்கு மத்தியில் அக்கட்சி சுதாகரித்துக் கொண்டு எழுந்து நின்றுள்ளது. இன்று கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் பின்னரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது செல்வாக்கை நிலை நிறுத்தி நிமிர்ந்து நிற்குமா என்று பார்க்க வேண்டியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் கடந்த காலங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளினால் பேரியல் அஸ்ரப், அதாவுல்லா, ஹிஸ்புல்லா, றிசாட் பதியுதீன், அமீர் அலி எனப் பலர் பிரிந்து சென்றார்கள். இவர்கள் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் முரண்பட்டுக் கொண்டே பிரிந்தார்கள். தனிக் கட்சிகளையும் அமைத்தார்கள். இவர்கள் பதவிக்காகவே கட்சியை கூறு போட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டன.

இவ்வாறு இவர்கள் முரண்பட்டுக் கொண்டு கட்சியை விட்டுப் பிரிந்து சென்ற வேளைகளில் ரவூப் ஹக்கீமின் இடமும், வலமுமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகு தாவூத் ஆகியோர்கள் துணை நின்றார்கள். 

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு அமைவாக தற்போது தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இந்த இருவரும் பெரும் முரண்பாடுகளைக் கொண்டுள்ளார்கள். இவர்களின் முரண்பாடுகள் கட்சிக்குள் மற்றுமொரு பிளவை ஏற்படுத்திவிடுமோ என்று நினைக்கும் வகையில் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஹஸன்அலியும், பசீர் சேகு தாவூத்தும் தேசிய பட்டியலில் வாய்ப்புக் கேட்டுத்தான் கட்சியின் தலைமையுடன் முரண்பட்டுள்ளார்கள் என்றே அதிகம் பேசப்படுகின்றன. ஆனால், தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டால் முரண்பாடுகளின் திசையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ஏனெனில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை குறி வைத்து கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் களத்தில் குதித்திருந்தார்கள். 

அதே வேளை, அட்டாளைச்சேனைக்கு தேசிய பட்டியலில் வாய்ப்பு தரப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன. ஆதலால், தேசிய பட்டியலில் கட்சியின் செயலாளருக்கும், தவிசாளருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டிருந்தால் கட்சியின் வேறு நபர்களும், ஒரு சில பிரதேசங்களும் முரண்பாடுகளைக் காட்டியிருக்கும். ஆதலால், தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை யாருக்கு வழங்கினாலும் முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கும். 

இவற்றிக்கிடையே கட்சியின் நலன்களில் மாத்திரம் கரிசனை கொண்டவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள திருகோணமலை, வன்னி மாவட்டங்களுக்கு தேசிய பட்டியலில் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று தெரிவித்தனர். ஆனால், அதனை தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு வழங்கக் கூடாதென்றும் கூறினார்கள். ஆயினும், தேர்தலில் தோல்வியடைந்துள்ள எம்.எஸ்.தௌபீக்கிற்கு தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பசீருக்கும் ஹக்கீமுக்கும் முரண்பாடுகள்

கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ளவர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தேசிய பட்டியல் விவகாரத்தினால் மாத்திரம்தான் ஏற்பட்டுள்ளதென்று சொல்லவும் முடியாது. தவிசாளர் பசீர் சேகு தாவூத்திற்கும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் தற்போது தெரிவிக்கப்படும் தேசிய பட்டியலில் விவகாரத்துடன் முடிச்சுப் போடப்பட்டாலும் 2012ஆம் ஆண்டு முதல் முரண்பாடுகள் வளர்ந்து வந்துள்ளன. தற்போது அந்த முரண்பாடுகள் உச்சத்தில் இருக்கின்றது.

20.08.2012 திங்கட் கிழமை இரவு ஏறாவூரில் பசீர் சேகு தாவூத் ஒரு பொதுக் கூட்டமொன்றினை நடத்தினார். இக்கூட்டத்தில் அவர் மாத்திரமே உரையாற்றினார். சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு நீடித்த அவரின் பேச்சில் ரவூப் ஹக்கீமின் கட்சி நடவடிக்கைகளை கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தினார்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பசீர் சேகு தாவூத் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் பின்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக வர வேண்டுமென்ற விருப்பம் அவருக்கு ஏற்பட்டது. இதனை அடைந்து கொள்வதற்கு ரவூப் ஹக்கீம் தடையாக இருந்தார். 

இதனால், அவருக்கு பிரதி அமைச்சர் பதவியே வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் முழு அமைச்சர் பதவி வழங்கப்பட இருந்தமையை ரவூப் ஹக்கீம் தடுத்து நிறுத்தினார் என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டது. இதனால், பசீர் சேகு தாவூத்திற்கும், ரவூப் ஹக்கீமுக்குமிடையே முரண்பாடுகள் வளரத் தொடங்கியது. ஆதலால், பசீர் சேகு தாவூத்திற்கும் ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான முரண்பாடுகள் தேசிய பட்டியலுடன் ஏற்பட்டதென்று சொல்ல முடியாது. 

பசீர் சேகு தாவூத் முரண்பட்டு இருந்த போதிலும் ஹஸன் அலிக்கும் ரவூப் ஹக்கீமுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படவில்லை. தமக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சர் பதவியை கட்சியின் தலைவருக்கு அறிவிக்காது பசீர் சேகு தாவூத் இராஜினாமாச் செய்தார்.

இதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுடன் தனக்கு இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி பசீர் சேகு தாவூத் முழு அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டார். இதனை ரவூப் ஹக்கீம் அறிந்திருக்கவில்லை. இதனால், இவர்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் இன்னும் வலுவடைந்தது. பசீர் சேகு தாவூத் தனக்கு சவாலாக இருக்கின்றார் என்ற எண்ணம் ரவூப் ஹக்கீமுக்கு ஏற்பட்டது. நகவும், சதையுமாக இருந்த இவர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களில் சிலர் எண்ணெய் ஊற்றிப் மேலும் தீயை மூட்டினார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதிலும் ரவூப் ஹக்கீமுக்கும், பசீர் சேகு தாவூத்திற்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. பசீர் சேகு தாவூத் மஹிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க எண்ணினார். ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் முரண்பாடுகள் வலுத்துக் கொண்டன. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடைபெற்ற கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பசீர் சேகு தாவூத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், ரவூப் ஹக்கீமுக்கும் பசீர் சேகு தாவூத்திற்கும் முரண்பாடுகள் இன்னும் அதிகரித்துக் கொண்டது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்திலும், வன்னியிலும் தனித்துப் போட்டியிட்டது. இவ்விரு மாவட்டங்களிலும் மரச் சின்னத்திற்கு கிடைக்கும் வாக்குகள் ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்ள முடியாது. ஆயினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியலில் பசீர் சேகு தாவூத்தின் பெயர் குறிப்பிடப்பட்டது. இது பசீர் சேகு தாவூத்திற்கும் ரவூப் ஹக்கீமுக்குமடையே உள்ள முரண்பாடுகளை இறுக்கமடையச் செய்தது.

ஹஸன்அலியும், ரவூப் ஹக்கீமும்

ரவூப் ஹக்கீமுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக செயலாளர் ஹஸன்அலி திகழ்ந்தார். கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவராகவும் இருக்கின்றார். இதனால்தான் அவருக்கு இரண்டு தடவைகள் தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. 

ஆயினும், ஹஸன்அலிக்கும், ரவூப் ஹக்கீமுக்குமிடையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தின் காலத்திலிருந்து முரண்பாடுகள் ஏற்பட்டன. ஹஸன்அலிக்கும் மஹிந்த அரசாங்கத்துடன் சிறந்த உறவுகள் இருக்கவில்லை. ஹஸன்அலியின் அறிக்கைகள் அன்றைய அரசாங்கத்தை எரிச்சலடையச் செய்தது. 

இதனால், அம்பாரை கச்சேரியில் பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில்ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஹஸன்அலியின் முன் மொழிவுகளை பசில்ராஜபக்ஷ முற்றாக நிராகரித்தார். இந்தளவிற்கு அரசாங்கத்திற்கும் ஹஸன்அலிக்கும் முரண்பாடுகள் காணப்பட்டன.

ஹஸன்அலியின் அரசாங்கத்துடனான முரண்பாடுகளால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிளவுபடுத்துவதற்கு அரசாங்கத் தரப்பினர் திட்டமிட்டனர். ரவூப் ஹக்கீம் ஹஸன்அலியின் அறிக்கைகளுடன் தொடர்பற்றவராக இருந்தாலும், அவரின் அறிக்கைகளின் பின்னணியில் ரவூப் ஹக்கீம் இருந்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிளவுபடுத்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரித்து எடுக்கும் நடவடிக்கைகளை அன்றைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மேற்கொண்டார்கள். 

இதற்கு கட்சியின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் துணை போனார்கள். அவர்கள் அமைச்சர் பதவிகளை விலை பேசினார்கள். இதனால், ஹஸன்அலியை கட்டுப்படுத்தி கட்சியை பிளவுபடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்தை ரவூப் ஹக்கீம் மேற்கொண்டார். இதற்காக ஹஸன்அலியை கடிந்து கொள்ள வேண்டியேற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இப்படியாக இவர்களிடைiயே வளர்ந்த முரண்பாடுகள், கடந்த பொதுத் தேர்தலில் விஸ்பரூபம் எடுத்தது. தனக்கு தேசியப் பட்டியலில் மூன்றாவது தடவையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காது என்று முடிவு செய்து தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் தருமாறு ஹஸன்அலி கேட்டார். 

ஆனால், ஹஸன்அலிக்கு சந்தர்ப்பம் வழங்க முடியாத நிலையில் ரவூப் ஹக்கீம் இருந்தார். ஐ.தே.கவுடன் இணைந்து மூன்று வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்துவதற்கு ரவூப் ஹக்கீம் உடன்பாடு கண்டிருந்தார். 

இதே வேளை, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் தன்னால் இலகுவாக வெற்றி கொள்ள முடியுமென்ற நம்பிக்கை ஹஸன்அலிக்கு இருந்தது. இதே வேளை, ஹஸன்அலி போட்டியிட்டு வெற்றி பெற்றால் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது போய்விடுமென்ற பயம் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்தது. 

மேலும், ஹஸன்அலிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் நான்; கட்சியை விட்டு விலகி மாற்று கட்சியில் இணைந்து போட்டியிடுவேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ரவூப் ஹக்கிமிடம் கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால், ரவூப் ஹக்கீம் ஹஸன்அலிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில் கட்சியின் பேராளர் மாநாட்டில் ஹஸன்அலியின் செயலாளர் பதவிக்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. இதனால், ஹஸன்அலிக்கும் ரவூப் ஹக்கீமுக்குமிடையே முரண்பாடுகள் இன்னும் வலுத்துக் கொண்டது.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் செயலாளர் ஹஸன்அலிக்கும், தவிசாளர் பசீர் சேகு தாவூத்திற்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இதனை சிலர் இவர்கள் தேசிய பட்டியலுக்காகவே முரண்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று பிரச்சாரம் செய்கின்றார்கள். இன்னும் சிலர் ரவூப் ஹக்கீம் கட்சியை கட்டிக் காத்தவர்களை ஒதுக்கிவிட்டார் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். 

ரவூப் ஹக்கீம் கட்சி பிளவுபடக் கூடாதென்ற எண்ணத்தைக் கொண்டுள்ளார். இதே எண்ணத்தை பசீர் சேகு தாவூத்தும், ஹஸன்அலியும் கொண்டுள்ளார்கள் என்பது எம்மோடு பேசிய போது தெரிவித்தார்கள்.

ஆனால், இவர்களை கட்சியை விட்டு துரத்த வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டவர்களாக ஒரு சில உயர்பீட உறுப்பினர்கள் உள்ளார்கள். கட்சியின் மூன்று முக்கிய தூண்களுக்கடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பது கட்சிக்கு நல்லதல்ல என்று உணர்ந்து அவர்களை சமரசப்படுத்தி ஒற்றுமைப்படுத்துவதற்கு உயர்பீட உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. 

ஹஸன்அலியின் செயலாளர் பதவிக்குரிய அதிகாரங்களை அடுத்த பேராளர் மாநாட்டின் பின்னரே வழங்க முடியுமென்று உயர்பீட உறுப்பினர் ஒருவர் பத்திரிகைகளில் அறிக்கைவிடும் சிந்தனையே உயர்பீட உறுப்பினர்களுக்கு இருக்கின்றது.

இவர்கள் பெற்றுள்ள பதவிகளில் குறி வைத்துக் கொண்டு, அந்தப் பதவியை தாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சில உயர்பீட உறுப்பினர்கள் முரண்பட்டுள்ளவர்களை சந்தித்து கோள் மூட்டிக் கொண்டிருக்கின்றார்கள். 

ஒருவர் மற்றவர் மீது கோபத்தை வெளிக்காட்டும் போது, அதனை உரியவரிடம் அள்ளிப் போட்டுக் கொடுக்கின்றார்கள். இவ்வாறு உயர்பீட உறுப்பினர்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பதனால் இவர்களிடையே முரண்பாடுகள் நாளுக்கு நாள் இறுக்கமாகிக் கொண்டிருக்கின்றன.

இதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைப் பற்றி கவலை கொள்ளாதவர்களாக உள்ளார்கள். கட்சியின் தலைமையுடன் முரண்பாடு கொண்டுள்ளவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் தாங்கள் முரண்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. 

கட்சியின் தலைவருக்கு எதிராக செயற்படவில்லை. எங்களுக்குள் கொள்கை அடிப்படையில்தான் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. தலைவர் முஸ்லிம்களுக்குரிய அரசியல் தீர்வு விடயத்தில் பேசாதிருக்கின்றார். நாங்கள் பேசினால் அதனை வேறுவிதமாக பார்க்கின்றார் என்று சொல்லுகின்றார்கள்.

உண்மையில் புதிய அரசியல் தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டை இன்னும் உறுதியாக வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியல் யாப்பில் கிழக்கு முஸ்லிம்களுக்கு எத்தகைய தீர்வுகள் கிடைக்க வேண்டுமென்று தெரிவிக்கவில்லை. அரசாங்கம் எதனைத் தந்தாலும் பெற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றார்கள். 

தங்களுக்கு கிடைத்துள்ள பிரதி அமைச்சர் பதவிகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாதென்று எண்ணுகின்றார்கள். முஸ்லிம்களுக்கு என்ன நடந்தாலும் அது பற்றி கவலையில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தலைவர் ரவூப் ஹக்கீம் மீது பலியைப் போட்டார்கள். ஆனால், மறைமுகமாக மஹிந்தராஜபக்ஷவுடன் தொடர்புகளை வைத்துக் கொண்டார்கள்.

இப்படியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை பயன்படுத்தி இலாபம் அடைந்து கொள்ளவே எண்ணுகின்றார்கள். தங்களின் இலாபத்திற்கு தலைவரையும் பலி கொடுப்பதற்கு தயராகவுள்ளார்கள். இப்போதைக்கு தலைவருடன் இருப்பதுதான் தங்களுக்கு இலாபமென்று எண்ணுகின்றார்கள்.

நாளை தலைவருக்கு எதிராக இருந்தால் தங்களுக்கு இலாபம் என்றால் அதனையும் செய்வார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் கொழும்பில் ஒரு முகமும் தமது பிரதேசத்தில் ஒரு முகமும் காட்டிக் கொண்டார்கள். இவற்றை எல்லாம் ரவூப் ஹக்கீம் தெளிவாக அறிந்தே வைத்துள்ளார்.

ஆகவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தனியே தேசியப் பட்டியலுடன் சம்பந்தப்பட்டதல்ல. நீண்ட கால முரண்பாடுகள் உச்சமடைந்துள்ளது. ஆனால், தேசியப்பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் முரண்பாடுகள் தணிந்திருக்கும் என்ற உண்மையும் உள்ளது.

எனவே, இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். முரண்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் யார் இறங்கிப் போவதென்ற கௌரவத்திலும் உள்ளார்கள். 

ஆதலால், கட்சியினதும், சமூகத்தினதும் நன்மை கருதி கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் முரண்பாடுகளை தீர்த்து கட்சியின் அரசியல் பலத்தை பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இந்த முரண்பாடுகள் தனி நபர்களுடன் தொடர்புடையதென்று பார்க்காது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கருதி முரண்பாடுகளை கலைந்து ஒற்றுமைக்கு வழி காண வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -