திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபரின் மகத்தான பிரியாவிடை வைபவமும், மாணவர் பரிசளிப்பு விழாவும்....

திரு
கோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபர் எஸ்.எம்.முஹம்மட் அலி  தனது 32 வருடகால கல்விச்சேவையிலிருந்து 2016.05.01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தனது 60வது வயதில் ஓய்வு பெறுவதையொட்டி 2016.04.30ஆந் திகதி சனிக்கிழமை கல்லூரி திறந்த வெளியரங்கில் மகத்தான பிரியாவிடை வைபவமும், மாணவர் பரிசளிப்பு விழாவும் இடம்பெறவுள்ளது. 

புதிதாக கல்லூரி அதிபராக கடமையேற்கவிருக்கும் பிரதி அதிபர் அலி சப்றி அவர்களின் தலைமையில் கல்லூரி அதிபரின் மகத்தான பிரியாவிடை வைபவமும், மாணவர் பரிசளிப்பு விழாவும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ Z.A.நசீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம்.எஸ்.தௌபீக், கௌரவ அப்துல்லா மஹ்ரூப், கௌரவ இம்ரான் மஹ்ரூப் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஆர்.எம்.அன்வர், கௌரவ ஜே.எம்.லாஹிர், கௌரவ நஜீப் ஏ மஜீத் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் என்.விஜேந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

கலைப் பட்டதாரியான கல்லூரி அதிபர் எஸ்.எம்.முஹம்மட் அலி அவர்கள் 1984.01.02 இல் அசிரியராக இணைந்து 1991.06.01 இல் அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டு கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அதிபராக கடமையாற்றி வருகின்றார். அத்துடன் 2013.09.08 இலிருந்து இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கடந்த 02 தசாப்ததிற்கு அதிகமான காலம் திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபராக எஸ்.எம்.முஹம்மட் அலி அவர்கள் மெச்சத்தக்க சிறப்பான சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரி அதிபர் எஸ்.எம்.முஹம்மட் அலி அவர்கள் 2003 இல் நீதி அமைச்சினால் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டார். 2006 இல் அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியத்தினால் தேசமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  2014 இல் இலங்கை ஜனாதிபதியினால் சிறந்த அதிபருக்கான குரு பிரதீபா பிரபா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிட்டுக் கூறவேண்டிய விடயமாகும்.

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபராக எஸ்.எம்.முஹம்மட் அலி அவர்கள் கடமையாற்றிய காலப்பகுதியில் கல்லூரியானது மிகச்சிறப்பான பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. அதில் பின்வருவன மிக முக்கியமானவையாகும்.

01. வைத்தியத்துறைக்கு 13 மாணவர்களும், ஆயுர்வேத வைத்தியத்துறைக்கு 03 மாணவர்களும், பொறியியல் பீடத்திற்கு 05 மாணவர்களும், நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைகழகத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

02. மாகாண மட்டத்தில் 2013 இல் மாணவியொருவர் உயிரியல் பிரிவில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டார்.

03. மாவட்ட மட்டத்தில் 2015 இல் கணிதப்பிரிவில் மாணவரொருவர் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டார்.

04. 2014 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தரத்தில் வலய மட்டத்தில் சித்தியடைந்தவர்களின் வீத அடிப்படையில் முதலாம் இடத்தை கல்லூரி பெற்றுக்கொண்டது.

05. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 2013, 2014 ஆம் ஆண்டுகளில் சித்தியடைவதற்கு தேவையான சராசரிப் புள்ளிகளை 100 % மான மாணவர்கள் பெற்றுகொண்டனர்.

06. 2014 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு போன்ற பாடங்களில் 100 % மான மாணவர்கள் சித்தியினை பெற்றுகொண்டனர். இப்பெறுபேறானது மாகாண மட்டத்தில் 04 ம் இடத்தை பெற்றுக் கொடுத்தது.

07. தேசிய மட்டத்தில் தமிழ் மொழித்தினம், ஆங்கில மொழித்தினம், சிங்கள மொழித்தினம் , மீலாத் போட்டிகளில் 01, 02, 03 ஆம் இடங்களை பல தடவைகள் கல்லூரி பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும் கல்லூரி அதிபராக எஸ்.எம்.முஹம்மட் அலி அவர்கள் கடமையாற்றிய காலப்பகுதியில் அவரது முழுமையான முயற்சியின் காரணமாக பல கட்டிட வசதிகளை பெற்றுக்கொண்டதுடன்,  2004 ஆம் ஆண்டில்  1AB பாடசாலையாக உள்வாங்கப்பட்டதுடன், ஸாஹிரா கல்லூரியாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபரின் மகத்தான பிரியாவிடை வைபவமும், மாணவர் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை  கல்லூரி ஆசிரிய சமூகம், பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர் சங்கம் இணைந்து பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

கல்லூரி அதிபரான எஸ்.எம்.முஹம்மட் அலி அவர்களின் ஓய்வானது திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தளவில் மிகப்பாரிய வெற்றிடத்தை தோற்றுவிக்கும் என்றால் மிகையாகாது. கல்லூரி ஆசிரிய சமூகம், பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன கடந்த 02 தசாப்ததிற்கு அதிகமான காலம் திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபராக எஸ்.எம்.முஹம்மட் அலி அவர்கள் மெச்சத்தக்க சிறப்பான சேவையாற்றி வந்தமைக்கு தமது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றது.

சுபைர் முஹம்மட் கலீம்,
உறுப்பினர்,
பழைய மாணவர் சங்கம்,
பாடசாலை அபிவிருத்தி குழு,
தி/தி/ஸாஹிரா கல்லூரி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :