பொத்துவில் மக்களின் நீண்ட கால தேவையாக இருந்துவந்த குடிநீர் பிரச்சினைக்கு இடைக்கால தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட குழாய் நீர் கிணறு விநியோகத் திட்டம், மக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்து செய்வதற்குப் பெரிதும் உதவும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.
பொத்துவில் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) ஆரம்பிக்கப்பட்ட இடைக்கால ஏற்பாடான குழாய் நீர் கிணறு விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
இப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வொன்றை எமது பொறியியலாளர்களினால் இன்னும் சரிவர அடையாளம் காணப்படாததால் இதுவொரு இடைக்கால தீர்வு மாத்திரமே. சுனாமி அனர்த்தத்தின் பிறகு அமெரிக்காவின் உதவியுடன் நாங்கள் ஆரம்பித்த ஐந்து குழாய் நீர் கிணறு விநியோகத்தில் ஒன்று இப்பொழுது செயலிழந்துவிட்டது. 1200கியூபிக் மீட்டர் நீரை தான் பெறக் கூடியதாக இருக்கின்றது.
இன்று ஆரம்பித்த நான்கு மேலதிக குழாய் நீர் கிணறுகளுக்கான திட்டத்தில் நேரடியாக ஆற்றிலிருந்து ஒரு நாளைக்கு 350கியூபிக் மீட்டர் நீரையும் மேலதிகமாக பெற்றுக்கொண்டு தான் இக்குழாய் கிணறுகளுக்கான நீரை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இக் குழாய் நீர் கிணறுகளின் மூலம் விநியோகப்படவுள்ள நீரை முழுமையாக சுத்திகரிக்க முடியாவிட்டாலும், தேவையான குளோரின் போன்ற சுத்திகரிப்பு இராசயனப் பதார்த்தங்களை சேர்த்து மக்களின் பாவனைக்கு உகந்த விதத்தில் இந்த குடிநீரை விநியோகிக்கும் நடவடிக்கைகளை இத்திட்டத்தின் மூலம் முன்னெடுக்கவுள்ளோம். இவை ஓர் இடைக்கால தீர்வு மட்டுமே என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.
இதற்கான நிரந்தர தீர்வாக முன்வைக்கப்பட்டுள்ள ஹெட ஓயா ஆற்றுப் படுக்கையில் குழாய் நீர் கிணறு தோன்றுவதன் மூலம் அதன் பயன்பாடு எவ்வளவு தூரம் கிடைக்கும் என்பது சந்தேகத்திற்குரியதாகும். அது காலநிலை மற்றும் நிலத்தடி நீரில்; தங்கியுள்ளது. எனவே நிலத்தடி நீரை முழுமையாக எதிர்பார்த்து இத்திட்டத்தை முன்னெடுப்பது ஒருபோதும் நிரந்தரமான தீர்வாக அமையாது. அது இயற்கைக்கு முரணான செயற்பாடாகும்.
பொத்துவில் மக்களின் நீண்டகால தேவையாக இருந்த இக்குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதத்தில் 116மில்லியன் ரூபாய்செலவில் இத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். தற்பொழுது 2 அல்லது 3 மணிநேரத்திற்கு விநியோகிக்கப்படும் நீரை எதிர்வரும் காலங்களில் 8 முதல் 9 மணித்தியாலங்களுக்கு அதிகரித்து கொள்ள கூடியதாக மாற்றியமைக்கப்படும்.
இதற்கான நிரந்தர மாற்றீடு நடவடிக்கையாக ஹெட ஓயாவிற்கு குறுக்கே சியம்பலாண்டுவயில் நீர்த்தாங்கியை அமைத்து, சுத்திகரிப்பு நிலையத்தினூடாக ஏறத்தாழ 10,000 கியூபிக் மீட்டர் நீரை பெற்றுக்கொள்வதற்கு; உத்தேசித்துள்ளோம். இதற்காக நீர்ப்பாசன அமைச்சர் காமினி விஜித் விஜித முனிசொய்சாவுடனான கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டிருந்தோம். அமைச்சரவையில் இது தொடர்பில் பத்திரமொன்றையும் சமர்பிக்கவுள்ளோம்.
ஏனெனில், ஹெட ஓயாவிற்கு குறுக்கே சியம்பலாண்டுவயில்; அணைக்கட்டொன்றை நிறுவி, பொத்துவில் மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பதனால் விவசாய நடவடிக்கைகளுக்கான நீர்ப்பாசன செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என அந்தப் பிரதேச விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், விவசாயிகளின் இந்த அச்சம் தேவையற்றது. இதனால் நீர்ப்பாசனத்தை பொறுத்தவரை எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்படாது.
அத்தோடு அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்ப்பித்தால் ஹெட ஓயாவிற்கு குறுக்கே அணை கட்டப்பட்டால் நீர்ப்பாசனத்திற்கும் அந்த நீரை பயன்படுத்தலாம். இதனால் இந்த ஹெட ஓயாவிற்கு இரு மருகிலும் காணப்படும் சுமார் 25,000 ஏக்கர் தரிசு நிலத்தை பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். இது எமது நீண்டகால எதிர்ப்பார்ப்பாகும்.
ஆனால், தற்போதைய நெல் உற்பத்தியானது எமது அரசாங்கத்திற்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்னும் மேலதிகமாக நெற் உற்பத்தியினை மேற்கொண்டால் இதற்கு அரசாங்கம் எவ்வாறு ஈடுகொடுக்க முடியும்; என்ற கேள்வியொன்றும் எழுகின்றது.
இப்பிரச்சினையை இயன்றளவில் விரைவாக தீர்த்து, பொத்துவில் மக்களுக்கான குடிநீரை நிரந்தரமாக வழங்குவதற்குரிய உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இந்நிகழ்வில் கட்சியின் மூத்த துணை தலைவரும்;, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் இணைப்பாளருமான ஏ.எல். அப்துல் மஜீத், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி சுகாதார அமைச்சருமான பைசால் காஸிம், கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர், பொறியியலாளர் கே.ஏ.அன்சார், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், கட்சியின் அமைப்பாளருமான அப்துல் வாசித், அக்கறைபற்று பிராந்திய முகாமையாளர், பொறியியலாளர் கரீம், மற்றும் அமைச்சின் இணைப்புச் செயலளாளர் ரஹ்மத் மன்சூர் உட்பட அநேகர் கலந்துகொண்டனர்.