அதிகாரப் பகிர்வும் தமிழ்-முஸ்லிம் மக்களின் நிலைப்பாடும்..!

எம்.ஐ.முபாறக்-
புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி தொடங்கப்பட்டவுடனேயே சிறுபான்மை இன மக்களும் அதற்குத் தயாராகிவிட்டனர். அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தங்களின் செயற்பாடுகளை அவர்கள் தீவிரப்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

புதிய அரசமைப்பில் இருக்க வேண்டிய ஏனைய விடயங்களை விடவும் அதில் உள்ளடங்கப்போகும் அரசியல் தீர்வின் மீதுதான் சிறுபான்மை இன மக்களின் முழுக் கவனமும் உள்ளது. எப்படியாவது இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்காக இருக்கின்றது.

இந்த நாட்டின் மூவின மக்களும் கணிசமான அளவு தங்களின் யோசனைகளை புதிய அரசமைப்புக்கு சமர்ப்பித்துள்ளனர். வட மாகாண சபை ஒரு படி மேலே சென்று தமக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் தீர்வு இவ்வாறுதான் அமைய வேண்டும் என்ற ஒரு முன்மொழிவை வெள்ளிக் கிழமை சபையில் நிறைவேற்றியுள்ளது.

தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இன்னும் யோசனைகளை முன் வைக்கவில்லை. இருந்தாலும், அது தொடர்பில் அந்த இரு கட்சிகளும் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில், அதிகாரப் பகிர்வு தொடபில் - ஒட்டுமொத்த அரசமைப்பு தொடர்பில் சிறுபான்மை இன மக்களின் நிலைப்பாடு என்னவென்று அறிவதற்காக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் ஒரு செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

அந்தச் செயலமர்வில் முஸ்லிம் அரசியல்வாதிகள், பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிகள் எனப் பலரும் கலந்து கொண்டு அரசியலைப்பு தொடர்பிலான அவர்களது யோசனைகளை முன்வைத்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் கலந்துகொண்டு தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பிலும் முஸ்லிம்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழர்களின் நிலைப்பாடு என்னவென்பதையும் விளக்கினார்.

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்-முஸ்லிம் மக்களின் நிலைப்பாடுகளை ஒரே மேடையில் பிரதிபலிக்கச் செய்த-தமிழருக்கான தீர்வு தொடர்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்னவென்பதையும் முஸ்லிம்களுக்கான தீர்வு தொடர்பில் தமிழர்களின் நிலைப்பாடு என்னவென்பதையும் தெட்டத் தெளிவாக எடுத்து வைத்த ஒரு முக்கியமான நிகழ்வாக அந்த செயலமர்வு அமைந்திருந்ததால் அது சம்பந்தமாக நாம் ஆராய வேண்டியது கட்டாயமாகின்றது.

அங்கு வைக்கப்பட்ட கருத்துக்களை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து பார்த்தால் 99 வீதமான கருத்துக்களுடன் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு நிற்பதைக் காணலாம். வடக்கு-கிழக்கு மீளிணைப்பு என்ற சர்ச்சைக்குரிய விடயத்தில்தான் இரண்டு சமூகங்களும் இரு வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அதற்காக முன்வைக்கப்பட்ட காரணங்கள் தொடர்பிலும் நாம் ஆராய வேண்டியுள்ளது.

முஸ்லிம்களுக்கான தீர்வு 
========================

அரசியல் தீர்வு என்பது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கே பிரதானமாகத் தேவை என்றபோதிலும், நாட்டில் ஏனைய இடங்களில் உள்ள மக்களின் பிரச்சினைகளையும் புறந்தள்ளிவிட முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இது அனைவரினதும் சரியான நிலைப்பாடும்கூட.

அந்த வகையில், வடக்கு-கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தால் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களும் தீர்வு முயற்சிக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை மறுக்க முடியாது.

அதற்காக வடக்கு-கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம்களின் மீது மாத்திரம் கவனம் செலுத்தி வடக்கு-கிழக்குக்கு வெளியில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. யுத்தத்தால் பாதிக்கப்படாவிட்டாலும் அவர்கள் நீண்ட காலமாக வெவ்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஆகவே, அவர்களைப் புறக்கணித்துவிட்டு வடக்கு-கிழக்கு முஸ்லிம்களை மாத்திரம் தீர்வு திட்டத்துக்குள் உள்வாங்கவே முடியாது.

ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இந்த நிலைப்பாட்டில் இருக்கின்றமை அந்த நிகழ்வில் பிரதிபலிக்கப்பட்டது. வடக்கு-கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் தீர்வு வடக்கு-கிழக்கு வெளியில் உள்ள முஸ்லிம்-சிங்கள மக்களின் உறவில் பாதிப்பை ஏற்படுத்திவிடக் விடக்கூடாது என்ற கருத்தும் அங்கு தெரிவிக்கப்பட்டது..

ஆகவே, முஸ்லிம்களின் சார்பில் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வு யோசனையானது நாடு பூராகவும் வாழும் முஸ்லிம்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் முன்வைக்கப்பட்டது.

அதுபோக,நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி, தொழிலின்மை, மார்க்கத்துக்கு எதிரான சவால்கள், இறுப்பு மற்றும் அரசியல் உரிமைகள் போன்ற பிரச்சினைகள் அங்கு பட்டியலிடப்பட்டு அந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வைக் கோரும் வகையில் மு.காவின் தீர்வு யோசனை அமைய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழர்களின் நிலைப்பாடு 
=======================

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் அங்கு தெளிவாக எடுத்து வைத்தார். ஒற்றை ஆட்சி, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை மற்றும் நாடாளுமன்றத்துக்கு உச்ச அதிகாரம் போன்றவை நீக்கப்பட்ட புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அதனூடாக தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழர்களின் நிலைப்பாட்டை அவர் மிகவும் தெளிவாக விளக்கிக் கூறினார். அரசியலமைப்பே உச்ச அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பு பேரினவாதிகளின் ஆட்சிக்கு வித்திடுவதற்காக உருவாக்கப்பட்டதே தவிர பெரும்பான்மை இன மக்கள் ஆள்வதற்காக அல்ல என்றும் அவர் கூறினார்.

சுமந்திரன் முன்வைத்த மேற்படி நிலைபாட்டையே மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் பொது மக்களும் முன்வைத்தனர். இதன் மூலம் அரசியல் தீர்வு தொடர்பில் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றனர் என்ற நற்செய்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியல் தீர்வைப் பெறுவதற்கான பயணத்தில் இரண்டு சமூகங்களும் ஒன்றிணைந்து நிற்கவேண்டியதன் தேவை உணரப்பட்டுள்ளது.

சிக்கலான வடக்கு-கிழக்கு மீளிணைப்பு 
===================================

அதிகாரப் பகிர்வில் உள்வாங்கப்படும் அனைத்து விடயங்களிலும் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டநிலைப்பாட்டில் உள்ளபோதிலும்,வடக்கு-கிழக்கு மீளிணைப்பு தொடர்பில் அவர்கள் இரு வெவ்வேறு நிலைப்பாட்டில் உள்ளமையை நீண்ட காலமாக நாம் அவதானித்து வருகின்றோம்.

வடக்கு-கிழக்கு மீளிணைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழர்களும் இணைக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம்களும் உள்ளனர்.அவ்வாறு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்குத் தனியான நிர்வாக அலகு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது.

வடக்கு -கிழக்கு மீளினைக்கப்பட்டால் கிழக்கில் முஸ்லிம்களின் சனத் தொகை விகிதாசாரம் குறைந்து முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெரும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற அச்சமே முஸ்லிம்கள் வடக்கு -கிழக்கு மீளிணைப்பை எதிர்ப்பதற்குக் காரணம்.

இதேவேளை, இதை எதிர்ப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கான ஆரசியல் தீர்வை குழப்பினார்கள் என்ற பழிச்சொல்லுக்கு முஸ்லிம்கள் ஆளாகிவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம்கள் இருப்பதும் தெரிகின்றது.

இந்த விடயத்தில் இரண்டு இனங்களும் திருப்திப்படும் வகையில், வேறொரு ஏற்பாடு பற்றியும் இரண்டு இனங்களும் யோசிக்க வேண்டும் என்றும் செயலமர்வில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இதேவேளை, முஸ்லிம்களின் அனுமதியுடனேயே வடக்கு-கிழக்கு மீளிணைக்கப்படும் என்றும் இந்த நிலைப்பாட்டை ஆதரித்துத்தான் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தனர் என்றும் சுமந்திரன் அங்கு தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வில் உள்ளடக்கப்படும் விடயங்கள் அனைத்திலும் தமிழ்-முஸ்லிம்கள் ஒன்றிணைந்து நிற்கின்றபோதிலும், வடக்கு-கிழக்கு மீளிணைப்பு விடயத்தில்தான் அவர்கள் முரண்பட்டு நிற்கின்றனர். இது பேசித் தீர்க்கப்பட விடயம். இரண்டு இனங்களின் அரசியல் பிரதிநிகளும் ஒன்றிணைந்து இரண்டு சமூகங்களும் திருப்திப்படக் கூடிய ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அதுபோக, இந்த விடயத்தில் சிங்கள புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் போன்றோரின் நிலைப்பாடும் கருத்துக்களும் அறியப்பட வேண்டியது அவசியமாகும். எதிர்வரும் காலங்களில் அவர்களையும் உள்ளடக்கியதான செயலமர்வுகளை நடத்துவது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் பரிசீலிக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -