ஹனீப் அஹமட்-
நிந்தவூர் கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில மொழி தினப்போட்டி எதிர்வரும் 12 ம் திகதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 16 ம் திகதி சனிக்கிழமையும் நடாத்துவதற்கான அறிவிப்பினை கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எல்.எம். சலீம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 11 ம் திகதி முதலாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவிருந்த அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் 08 ம் திகதியுடன் மூடுவதற்கான விசேட அறிவிப்பு விடுவிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான பதில் பாடசலையினைக் கூட விடுமுறையின் பின்னர் 30ம் திகதி சனிக்கிழமை நடாத்துவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருக்கின்றது.
அத்தோடு நிந்தவூர் பிரதேச பாடசாலைகளுக்குள் கமு/கமு/அட்டப்பளம் விநாயகர் வித்தியாலயம் எனும் தமிழ் பாடசாலையும் உள்ளடங்குவதால் எதிர்வரும் 13 மற்றும் 14 ம் திகதிகளில் தமிழ் சிங்கள புதுவருடம் மலரவுள்ள இவ்வேளையில் பாடசாலை மாணவர்களுக்குரியதான முதலாம் தவணை விடுமுறை மற்றும் புதுவருட பண்டிகையினை சுதந்திரமாக கழிப்பதற்கு கல்வி அதிகாரிகள் இடமளிக்க வேண்டும் என கோட்ட வலய மாகாண கல்விப் பணிப்பாளர்களை பெற்றோர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள.
கடந்த மார்ச் மாதம் 19 மற்றும் 23 ம் திகதிகளில் நடாத்தவிருந்த மேற்படி போட்டி நிகழ்ச்சி முதலாம் தவணைப் பரிட்சை நிமித்தம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இம்மாதம் 11 மற்றும் 12 ம் திகதி நடாத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றிருப்பதனால் மீண்டும் திகதி மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விடுமுறையின் பின்னர் மேற்படி போட்டியினை நடாத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் உரிய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றார்கள்.