மப்றூக் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினுள் கடந்த காலங்களில் மிகப்பெரும் சவால்களையெல்லாம் தாம் சந்தித்துள்ளமையினால், தற்போது ஏற்பட்டிருக்கும் குடுமிச் சண்டையில் தான் ஈடுபட வேண்டிய தேவையில்லை என்று அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
அதேவேளை, பத்திரிகைகளில் சிலர் அறிக்கைப் போர்களை நடத்திவரும் நிலையில், கட்சியின் தலைவர் என்கிற வகையில், தான் – ஒரு மௌன விரதத்தினை அனுஷ்டித்து, கட்சியை மிகவும் கச்சிதமாக நடத்திக் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெளி நோயாளர் பிரிவுக்கான கட்டிடம், மருந்துக் களஞ்சியம், இயன் மருத்துவ அலகு, தாதியர் விடுதிக் கட்டிடம், மூடிய நடைபாதை, அம்பியுலன்ஸ் வண்டித் தரிப்பிடம் மற்றும் சாரதி விடுதி ஆகியவற்றினை, அமைச்சர் ஹக்கீம் இன்று சனிக்கிழமை திறந்து வைத்த பின்னர், அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
“தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் சுகாதார அமைச்சர்களாக நமது கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளமையினால், நமது பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளின் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்குரிய சாத்தியங்கள் உருவாகியுள்ளன. அதற்குரிய அரசியல் சூழல் எங்களுக்கு வாய்த்திருக்கிறது.
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், மு.காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டபோது, சம்மாந்துறைத் தொகுதியில் மு.காங்கிரஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதன் காரணமாகத்தான் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றபோது, கூடவே சுகாதார அமைச்சினையும் பெற்றெடுத்து, அதற்குரிய அமைச்சராக சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.ஐ.எம். மன்சூர் அமர்த்தப்பட்டார். அதன் மூலம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலுள்ள பல்வேறு தேவைகளை நிறைவு செய்வதற்கான சாத்தியங்கள் உருவாகின.
எதிர்வரும் 05 ஆம் திகதி தொடக்கம் நாடாளுமன்றமானது அரசியல் யாப்பு சபையாக தன்னுடைய அமர்வுகளைத் தொடங்கவுள்ளது. இதனூடாக இந்த நாட்டுக்கான புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் ஒரு நடவடிக்கை உருவாகவுள்ளது. எனவே, நாம் மிகத் தீவிரமாக இயங்கி, எமது சமூகத்தின் உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.
அபிவிருத்தி என்கிற விடயங்களை அடைவதற்கு நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது அவற்றினை அடைந்து கொள்ளும் ஒரு காலசூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான தயார்படுத்தல்களைச் செய்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக, என்னுடைய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சினூடாக, சம்மாந்துறை வங்களாவடியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, கல்முனை வரையிலான நீர் வழங்கல் திட்டங்களை மேம்படுத்தும் பொருட்டு, புதிய குழாய்களைப் பதிக்கும் வேலைகள் நிறைவுறும் தருவாய்க்கு வந்துள்ளது. எதிர்வரும் மே, ஜுன் மாதமளவில் அந்த வேலைகள் பூரணப்படும்.
எதிர்வரும் நோன்பு காலத்துக்கு முன்பாக, இங்குள்ள பிரதேசங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டினை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறோம். இதேவேளை, நெய்னாகாடு போன்ற பகுதிகளிலுள்ள குடிநீர் மஞ்சள் நிறத்தில் உள்ளமையினால், குடிப்பதற்கு அது உகந்ததாக இல்லை. அதற்குரிய தீர்வினையும் மிகவிரைவில் நாம் வழங்கவுள்ளோம்.
அம்பாறை மாவட்டத்தில், குடிநீர்த் தேவையினை மிக வேகமாக நிறைவு செய்யும் ஒரு நிலையினை நாம் அடைந்திருக்கின்றோம். அதற்கான ஆரம்ப கட்டப் பணியினை தொடங்கி வைத்த எமது கட்சியின் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.
மறைந்த தலைவரின் காலத்திலிருந்து சம்மாந்துறையை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஆனால், அவற்றினையெல்லாம் பூரணப்படுத்துவற்கு கடந்த காலங்களில் எமக்கு சரியான சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கவில்லை.
ஆயினும், இப்போது புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், சம்மாந்துறை நகரினை அழகுபடுத்துகிற நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளோம். இங்குள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதோடு, நவீன சந்தைக் கட்டிடத் தொகுதி, புதிய பஸ்தரிப்பு நிலையம் ஆகியவற்றினை அமைப்பதற்கான திட்டமொன்றினை வகுத்துள்ளோம். விரைவில் அவை அமுல்படுத்தப்படும்.
அதேபோன்று, ஏனைய நகரங்கள் மாநகரங்களாக மாறிவரும் நிலையில், சம்மாந்துறை பிரதேச சபையினை ஒரு நகரசபையாகவாவது மாற்றுவதற்கான முயற்சியினை நாம் செய்து முடிக்கவுள்ளோம்.
கல்முனை நகர அபிவிருத்திக்கான பாரிய நிதி ஒதுக்கீடுகளுடனான வேலைகள் ஆரம்பிக்கும் போது, அதனோடு சேர்ந்து சம்மாந்துறை நகரமும் அபிவிருத்தி செய்யப்படும்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஒரு மௌன விரதத்தினை நான் அனுஷ்பது நல்லது என்று நினைக்கிறேன். வாயைத் திறந்தால் வம்பாகப் போய்விடும் என்பதற்காகவே மௌன விரதம் நல்லது என்று நினைக்கிறேன். எனவே, தற்போதைய கட்சி விவகாரங்களைக் கதைப்பதை நான் தவிர்த்து வருகிறேன்.
பத்திரிகைகளில் சிலர் அறிக்கைப் போர்களை நடத்துகின்றனர். எனவே, தலைமை மட்டத்தில் ஒரு மௌன விரதத்தினை அனுஷ்டித்து, கட்சியை மிகவும் கச்சிதமாக நடத்திக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
என்னைப் பொறுத்த மட்டில் கட்சிக்குள் தற்போது நிலவுகின்றதை விடவும் மிகப்பெரும் சவால்களையெல்லாம் நாம் சந்தித்திருக்கிறோம். எனவே, தற்போதைய குடுமிச் சண்டையில் நான் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
இக்கூட்டத்தில், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், மு.காங்கிரசின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகரசபையின் பிரதி மேயருமான முழக்கம் மஜீத், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கே.எம். ஜவாத், ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், வைத்தியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் பார்வையாளர்களாக பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்
தொடர்புடைய செய்திகள்: