சர்வதேச தரத்திலான மட்டக்களப்பு கெம்பஸில் புதிதாக மருத்துவ பீடத்தினை பிரத்தியோகமாக ஆரம்பிப்பது தொடர்பில் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பிற்கும் மட்டக்களப்பு கெம்பஸ{க்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது.
சவூதி அரேபியாவின் ஜிந்தா நகரில் அமைந்துள்ள ஐ.ஐ.ஆர்.ஓ. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற இவ்வுடன்படிக்கையில் மட்டக்களப்பு கெம்பஸ் தலைவர் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி அப்துல்லாஹ் முகம்மது ஹப்ஹப் ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இந்த உடன்படிக்கை மூலம் மட்டக்களப்பு கெம்பஸில் அமைக்கப்படவுள்ள மருத்துவ பீடத்தின் முழுப்பொறுப்பினையும் சவூதி அரேபியாவின் ஐ.ஐ.ஆர்.ஓ. அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. அத்துடன், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள மருத்துவ பீடத்தை அமைப்பதற்கும், அது தொடர்பான சகல கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஐ.ஐ.ஆர்.ஓ. அமைப்பு இந்த ஓப்பந்தம் மூலம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இதற்கமைய மிக விரைவில் இதன் கட்டிட வேலைகள் 600 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக டாக்டர். அல் ஹத்தாத் என்பவரை ஐ.ஐ.ஆர்.ஓ. அமைப்பு நியமித்துள்ளது.
இந்த மருத்துவ பீடத்திலே ஆசிய பல்கலைகழகங்களில் இதுவரை அறிமுகப்படுத்தபடாத நவீன கல்வி முறைக்கு ஏற்ப அமெரிக்க பல்கலைகழகம் உருவாக்கியுள்ள புதிய மருத்துவ பீடம் தொடர்பான கற்கை நெறிகள் இங்கு ஆரம்பிக்கபடுகிறது. இன்று ஆசிய நாடுகளில் பல வருடங்களாக இருக்கின்ற மருத்துவ பீடத்தில் கற்பிக்கும் முறையினை தவிர்த்து இன்று உலகம் நோக்குகின்ற சவால்களை மையமாக கொண்டு புதிய நோய்களை மையமாக கொண்டு இவற்றை தீர்ப்பதற்கான புதிய வழிமுறைகளை அமெரிக்க பல்கலைகழகம் உருவாக்கியுள்ளது.
ஐந்து வருடங்களை கொண்ட அமெரிக்க பல்கலைக்கழகம் உருவாக்கிய மருத்துவ பாடத்திட்டமே மட்டக்களப்பு கெம்பஸ்யில் நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இந்த புதிய பாடதிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற முதலாவது பல்கலைகழகமாக இந்த மட்டக்களப்பு கெம்பஸ் கருதப்படும் என்று ஐ.ஐ.ஆர்.ஓ. அமைப்பின் பதில் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் ஹிரா பெளண்டேசன் செயலாளர் மும்தாஸ் மதனி, ஐ.ஐ.ஆர்.ஓ. அமைப்பின் நிதி பொது முகாமையாளர் கலாநிதி தாரிக் உமர் காபிலி இலங்கைக்கான சஊதி பதில் தூதுவர் அஷ்செய்க் அன்சார் மற்றும் ஐ.ஐ.ஆர்.ஓ. அமைப்பின் உறுப்பினர்கள் பேராசிரியர்கள், சஊதி ஊடகவியளார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
இதன் போது சவூதி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இன்று இந்த உடன்படிக்கையானது மட்டக்களப்பு கெம்பஸ்ஸை பொறுத்தவரையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மறக்க முடியாத நாளாகும். எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதோடு இவ்வாறன சர்வதேச பிரசித்தி வாய்ந்த அமைப்போடு உடன்படிக்கை செய்தது மூலமாக மட்டக்களப்பு கெம்பஸின் மருத்துவ பீடம் மிக முன்னேற்றத்தை அடையும்| என்றார்.