மு.கா கடந்து வந்த பாதையினை படிப்பினையாகக் கொண்டு செயற்படுவதன் அவசியம்..!

எம்.எல்.பைசால் காஷ்பி-
முஸ்லிம் சமூகம் தனித்துவ அரசியல் பயணத்தினை ஆரம்பிப்பதற்கு முன்பு நாட்டின் பிரதான இருகட்சிகளுக்கும் தங்களது ஆதரவினை வழங்கிக் கொண்டிருந்தது. 

ஐ.தே.க, அல்லது சு.கட்சிகள் ஆட்சி அமைக்கும் போது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஆட்சியில் அங்கத்துவம் பெற்று சமூகத்தின் அரசியலை தடம்பதித்துச் சென்றனர்.

இவ்வரசியல்த் தலைவர்கள் குறிப்பிட்ட கட்சியினை சார்ந்திருப்பினும் முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் தங்களால் முடிந்த பங்களிப்புக்களை செய்தனர்.

தாங்கள் அங்கத்துவம் பெற்றிருக்கும் கட்சிகளின் நலங்கருதி கட்சிகளை அவர்கள் ஆரம்பித்த போது அவை மக்களின் செல்வாக்கினைப் பெறவில்லை.

இந்நிலையில் மு.கா கட்சியின் வருகை சமூகத்தில் பல தரப்பாராலும் வரவேற்பைப் பெற்றது. பல சமூக அமைப்புக்கள், பள்ளிவாசல் சம்மேளனங்கள், மார்க்க சபைகள், மார்க்க அறிஞர்கள் என இதை அங்கீகரித்து இதன் வெற்றிக்காக உழைத்தனர். அன்று முஸ்லிம்கள் எதிர்கொண்டிருந்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக இக்கட்சியினைக் கண்டு கொண்டனர்.

முஸ்லிங்களின் அரசியல் உரிமை, அபிவிருத்தி, சிறுபான்மை இனம் என்ற வகையில் அரசியல் தீர்வில் தனது சமூகத்தின் அரசியல் நிலைப்பாடு போன்ற விடயதானங்களை இக்கட்சி பேசிய பொழுதிலும் முஸ்லிம் சமூகம் இவை அனைத்திற்கும் மேலாக தேசியரீதியாக முஸ்லிம் சமூகத்தினை ஒன்றிணைக்கக்கூடிய பெரும் சக்தி வாய்ந்த சமூக பேரியக்கமாக இக்கட்சியினைக் கருதினர்.

சமூகத்தில் தேசிய அளவில் பல சமூக அமைப்புக்கள், நிறுவனங்கள், சபைகள் மக்களோடு அண்மித்திருந்த வேளையிலும் கூட அதிகார பலத்துடன் அவர்களை ஒன்றிணைப்பதற்கான சந்தர்ப்பம் அற்றுப்போனது. இவ்விடைவெளி மு.கா கட்சியின் மூலம் நிறப்பப்பட்டது.

வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவுடன் தனது பயணத்தினை ஆரம்பித்த இக்கட்சி நாட்டின் சகல பிரதேசங்களிலும் தனக்கான ஆதரவுத் தளத்தினைப் பெற்றுக்கொண்டது.

ஐ.தே.க, சு.க கட்சிகளுடன் மிக நெருக்கத்தினை பேணிய முஸ்லிங்களை வேறாக பிரித்தெடுக்க மர்ஹூம் அஸ்றப் அவகர்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது. வடக்கு, கிழக்கு பிரதேசங்ஙகளில் அது சாத்தியப் படுத்தப்பட்டாலும் ஏனைய பிரதேசங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது சற்று சிரமமாகவே இருந்தது. இருப்பினும் முஸ்லிங்களின் பெரும்பாலானவர்களின் ஆதரவு கிடைக்கப் பெற்றமையினால் தேசிய அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொண்டது.

ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் அரசியல் கட்சிக்கான அடித்தளத்தினையிட்டு சமூகப் பேரியக்கம் என்ற வகையில் முஸ்லிம் சமூகத்தினை பல துறைகளிலும் தனது செயற்ப்பாடுகளால் கவர்ந்து சென்றார்.

ஒரு சமூகம் அபிவிருத்தியடைவதற்கு அதன் அடிமட்ட சமூகம் நிறுவன கட்டமைப்புக்களுடன் இணைந்த நிருவாக வட்டத்திற்குள் சங்கமித்தல் அவசியம். இக்கட்டமைப்பு அச்சமூகத்தினை அது எதிர்பார்க்கும் அபிலாசைகளை அடைந்து கொள்ள வழிவகுக்கும்.

இவ்வடிப்படை மு.கா கட்சியின் பிரதேச, மாவட்ட கிளைகளின் செயற்ப்பாடுகளில் காணக்கிடைத்தது.

ஒவ்வொரு கிளையும் சமூகத்தின் நன்மை, தீமைகளில் கலந்து, தேர்தல் கால செயற்ப்பாடுகளுக்காக, தொழில் வாய்ப்புக்காக அல்லது கொந்திராத்துக்காக மாத்திரம் கூட்டம், தீர்மானம் என்றிராது அவை சமூக நீரோட்டத்துடன் ஒன்றிப்போனது. 

இதனால் சமூகத்தின் தேவைகள் முன் ஆயத்தங்களுடன் ஆவணப் படுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரதேசத்துக்கமான முன்திட்டங்களை அக்கட்சி தனது கனவாகக் கொண்டு செயற்பட்டது.

சமூகத்தினை முன்நிறுத்தி அதற்கு அடிப்படையில் தேவையான விடயங்களில் முதன்மைப்படுத்தி கல்வி, கலாசார, பொருளாதார, பிரதேச அபிவிருத்தியில் குறிப்பிட்ட பங்காற்றியது.

தனிமனிதன், சமூகம், கிராமம் போன்ற பல தரப்பாரின் அபிலாசைகள் ஓரளவு நிறைவேற்றப்பட்டு கௌரவிக்கப்பட்டன.

கிழக்கு, மேற்கு என்ற பிரதேச வாத சிந்தனைக்கு முடிவு கட்டி சமத்துவ அடிப்படையில் ஒற்றுமைபட்டு சங்கமிக்க இக்கட்சி சந்தர்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது.

அஸ்றப் அவர்களின் அரசியல் காலத்தில் திட்டமிட்ட அடிப்படையில் இவ்வியக்கம் முன்கொன்டு செல்லப்பட்டது. இரிப்பினும் சேஹூஇஸ்ஸதீன் போன்றோர்களின் பிரிவு சில இடங்களில் அவருக்கு தலையிடியாக இருந்தது. ஆட்சியில் பங்காளியாக சேர்ந்த வேளை சில அபிலாசைகள் நிறைவேற்றப்படாத போது அவரால் கட்டிக் காக்கப்பட்ட சில அடிப்படைகளை நிறைவேற்றுதில் சிக்கல்களை எதிர் கொண்டுதான் இருந்தார்.

கௌரவ அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் இக்கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்ற பிற்பாடே எண்ணிலடங்கா பிரச்சினைகளை இக்கட்சி எதிர் கொண்டது.

அக்கட்சியின் பார்வையில் காட்டிக் கொடுத்தல், துரோகமிழைத்தல், ஏமாற்றுதல் என்று அழைக்கலாம்.

இலங்கையின் அரசியல் கட்சி வரலாற்றில் தன்னை பாதுகாப்பதர்க்காக பல தடவை நீதிமன்றம் சென்ற கட்சி என்று சொல்லும் அளவிற்கு வரலாற்றினை கொண்டுள்ளது.

இணைத் தலைமை ஏற்டுத்தப்பட்ட போது இக்கட்சியின் பிரமுகர்கள் கட்டிக்காத்து வந்த குர்ஆன் ,ஹதீ்ஸ் யாப்பின் அடிப்டை நன்றாகத் தெரிந்தது.

கட்சிப் போராளிகளுக்குத் தலைமைத் தெரிவுக்கு தெரிந்திருந்த யாப்பு பிரமுகர்களுக்கு தெரியாமல் போயிற்று.

அன்று இணைத்தலைமை என்ற பெயரில் விதைக்கப்பட்ட பிளவு எனும் விதை அக்கட்சிக்கு இன்று வரை தலையிடியே.

அஸ்ரப் அவர்கள் எதிர்கால கனவுகளுடன் ஆரம்பித்த “நுஆ” கட்சி தடம் புரண்டது இந்த இணைத்தலைமைத் தெரிவினால்தான்.

காலத்திற்கு காலம் குறிபிட்ட அணிகள் பிளவு பட்டுச் சென்றுள்ளன. ஒவ்வொரு அணியும் வெளிப்படையாக ரவூப் ஹகீம் அவர்களை குறைகூறியே வெளியாகின. இருப்பினும் பிளவு பட்டவர்களும், ரவூப் ஹகீம் அவர்களின் தலைமையினை ஏற்றவர்களும் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் ஓர் அணியில் இருந்ததுதான் வேடிக்கை.

ரவூப் ஹகீம் என்ற ஆளுமை இக்கட்சியில் பிளவு பட்டுச் செல்பவர்களால் தங்களது வாசிக்காக மக்கள் சமூகத்தில் பிழையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 15 வருட காலத்திற்குள் இக்கட்சியினை கட்டிப் பாதுகாத்ததை, சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையினை முன்கொண்டு சென்றதை, இனவாதிகள் இவரை முஸ்லிம் இனவாதி என அடைாளப் படுத்தியதை, தனது ஆற்றலால் முஸ்லிம் சமூகத்திற்கு பெருமை சேர்த்ததை, நாடாளுமன்றத்தில் இச்சமூகம் பற்றி எடுத்துச் சொன்னதை, பலர் பாராளுன்றம் செல்வதற்கு வியூகம் அமைத்துக் கொடுத்ததை எல்லாம் மறந்து அவரை முஸ்லிங்களைக் காட்டிக் கொடுத்தவர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பொருத்தமற்றவர் என்று விமர்சிக்கும் அளவிற்கு அவரது ஆளுமையினை சிறுமைப்படுத்த பலர் பல வழிகளிலும் முயர்சிக்கின்றனர்.

தொடராக வெளியேறிச் செல்பவர்கள் கூறும் காரணத்திற்க்கான விடையினை ஒவ்வொரு அணியினை சார்ந்தவர்களும் தங்கள் வாசிக்காகத் தெரிவிக்கின்றனர்.

தங்களது அபிலாசைகள் நிறைவேற்றப்படாத போது வெளிப்படையான காரணத்தினை வைத்தார்களே தவிர கொள்கையில் வேறுபட்டு பிளவு பட்டார்கள் என்பதை அறிய முடியவில்லை.

ஏனெனில் பிளவுபட்டவர்களின் கட்சி காங்கிரஸ் என்ற பெயரோடும், ஆதரவாளர்கள் போராளிகள் என்றும், மு.கா கட்சியின் பெரும்பாலான நிருவாக கட்டமைப்புக்களையும், அஸ்றப் அவர்களின் அரசியலை மும்மாதரியாகக் கொண்டுமே எல்லோரும் அரசியலை முன்னெடுக்குகின்றனர்.

பாராளுமன்றத்தில் ஆளும் கூட்டணியில் ஒன்றிணைந்துள்ள இவர்கள் அதர்க்கு வெளியில் மக்கள் சமூகத்தில் கீரியும் பாம்புமாக ஏன் காட்சியளிக்க வேண்டும்? அரசியலால் மக்களை பல அணியாக பிரித்து எதர்க்காக அவர்களைப் பிளவு படுத்தும் இந்த நாடகம்?

மு.கா கட்சியின் சில முக்கியஸ்த்தர்கள் கட்சியின் யாப்பு பற்றி இன்றுதான் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையை நாடியுள்ளனர். இது காலம் கடந்த ஞானமாகும். 

எந்தளவுக்கு ஜம்இய்யதுல் உலமா இதில் தலையிடும் என்பது தெரியாது. இருப்பினும் கட்சியில் அபிமானங்கொண்ட மார்க்க அறிஞர்களுக்கு பொறுப்பு உள்ளது. கடந்த காலங்களில் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க அவர்கள் ஆற்றிய பங்களிப்புக்களை குறைத்து மதிப்பிட முடியாது.

சமூகத்தின் பேரியக்கம் என்றவகையில் இக்கட்சி ஆற்றவேண்டிய பணிகள் இருக்கத்தக்க நிலையில் உள்ளக கருத்து முண்பாடுகளைத் தீர்ப்பதிலே தனது கவனத்தினை அதிகம் செலவிடுகின்றது. 

பல அபிவிருத்திகளை சமூகம் வேண்டி நிற்கும் இவ்வேளை இக்கட்சி சமூக நலங்கருதி சில பிரிவுகளை ஏற்படுத்தி பணிசெய்தல் அவசியம். சமூக சேவை, கல்வி என்ற இரு பிருவுகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் இக்கட்சி பணி மேற்கொள்வது காலத்தின் தேவை.சமூகத்தில் உள்ள சகலருக்கும் கட்சியின் சேவை கிடைக்கப்பெறல் வேண்டும்.

இப்பிரிவின் கீழ் பல செயற்திட்டங்களுக்கு நிதியினை பெறுவதற்கான பல வழிகள் இருந்தும் அது பற்றி இக்கட்சி சிந்தித்ததாகத் தெரயவில்லை. தாருஸ்ஸலாம் இச்செயற்பாடுகள் மூலமாகவும் பிரகாசிக்க வேண்டும் அப்போதுதான் இக்கட்சி சமூக பேரியக்கம் என்பதர்க்கான அர்த்தத்தினை வலுப்படுத்தும்.

மேலும் கட்சியின் தலைமையினை குற்றம் சுமத்தி பலர் வெளியேறியுள்ளனர் அல்லது முரண்பட்டுள்ளனர். இதர்க்குரிய பரிகாரம் என்ன? இக்கட்சிக்காறர்களின் தொடரான ஒரு நோயாக இருக்குகின்றது. இந்நோய் சமூகத்தினை பாதிக்கின்றது. இலங்கையில் முஸ்லிங்களின் பெயரைத்தாங்கி அரசியல் நடாத்தும் ஒரேயொரு இயக்கம்தான் மு.கா. இது பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்கப்படல் அவசியம்.

எனவே வெளிப்படையான பேச்சு வார்த்தைகள் மூலம் விடயங்கள் மிகத்தெளிவாக விவாதிக்கப்பட்டு மக்கள் சமூகத்தில் முன்வைக்கப்படல் வேண்டும். அதன் போதே இக்கட்சியின் நம்பத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டு விமர்சிப்பவர்களுக்கு பதிலாகவும் அமையும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -