முஸ்லிம் காங்கிரஸ் - பிரமுகர் அரசியலை கைவிடவேண்டும் - அன்ஸில்

மு.பாயிஸ், அய்ஷத் ஸெய்னி-

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த மக்கள் இயக்கம் இனியும் பிரமுகர் அரசியலை தொடரக் கூடாது என்பதுடன் பிரமுகர்கள் மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடியவர்களாக மாற்றப்படுகின்ற ஒரு அரசியலைதான் செய்யவேண்டும் என்று கலைக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. அன்சில் தெரிவித்தார்.

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொத்துவில் தொகுதிக்கான மாவட்டக்குழுக் கூட்டம 03.04.2016 ல் ஒலுவிலிலுள்ள இலங்கைத் துறைமுக அதிகார சபையின் சுற்றுலா விடுதியில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 

எமது கட்சி இன்னுமின்னும் தனது பணிகளை கிரமாங்களின் அடிமட்டங்களுக்கு கொண்டு செல்லவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஏனெனில் இந்தக் கட்சி மக்களுக்கானதே தவிர பிரமுகர்களுக்கானதல்ல என்பதை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்.

கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கட்சியின் அடிமட்டப் போராளிகளுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அவர்கள்தான் கட்சி சவால்களைச் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கட்சியை சுமந்துகொண்டு தடைகளை தாண்டிச் செல்வதற்கு துணைபுரிகின்றவர்கள்.

பிரமுகர்கள் தொடர்ச்சியாக கட்சியையும் தலைமையும் பிழையாக வழிநடாத்துவதையும் போராளிகளுக்கும் தலைவருக்கும் இடையிலான தொடர்பை தூரமாக்கி தமது கட்டுப்பாட்டுக்குள் எல்லாவற்றையும் வைத்திருப்பதை நாம் இனியும் அனுமதிக்க முடியாது.

தலைவர் நேரடியாக போராளிகளுடன் தொடர்பை வைத்திருக்க வேண்டும். எந்த ஊருக்கும் எந்தநேரத்திலும் யாரையும் சென்று சந்திக்கின்ற செயற்பாட்டுக்கு யாதொரு தடையும் இருத்தல் கூடாது. எனக்குத் தெரியாமல் ஏன் அங்கு சென்றீர்கள் இங்கு சென்றீர்கள் என்ற கேள்விகளை யாரும் கேட்கக் கூடாது. தலைவர் கட்சியின் நலனுக்காக யாரை சந்திப்பதாக இருப்பினும் எந்தப்பிரமுகருக்கும் அறிவித்துவிட்டு செல்கின்ற தேவைப்பாடு அவசியமற்றதாகும்.

தலைவர் அவர்கள் கடந்த பதினாறு ஆண்டுகளாக ஒரு மாபெரும் தீச்சுவாலைக்கூடாக இந்தக் கட்சியை நகர்த்தி வந்திருக்கிறார். அதற்காக பல்வேறு தியாகங்களை செய்துதான் அதை செய்து வந்திருக்கிறார். எங்களுக்குத் தெரிந்து எவ்வளவோ இராஜதந்திர அணுகுமுறைகளை செய்து அவற்றில் வெற்றிகண்டுள்ளார். ஆனால் வேறு சில அபாயங்களை தவிர்ப்பதற்காக அவற்றை மக்களுக்கும் ஊடகத்திற்கும் பகிரங்கப்படுத்துவதற்கு தலைவர் விரும்புவதில்லை. அதனால்தான் இன்று மற்றவர்கள் அதைவைத்து மற்றவர்கள் இங்கு அரசியல் செய்துகொண்டிருக்கின்றனர்.

மேலும், சில முக்கியமான விடயங்கள் தொடர்பில் தலைவர் உறுதியான தீர்மானங்களை எடுக்கவேண்டும். உதாரணமாக தேசியப்பட்டியல் தொடர்பில் தீர்மானத்தை சபையில் கேட்டு தீர்மானிக்க முடியாது எல்லோரும் தமக்கு வேண்டுமென்ற கோரிக்கையுடனேயே இருப்பர். அதனால் தீர்மானத்தை தலைவர் எடுக்கவேண்டும்.

அத்துடன் கட்சியில் புதியவர் பழையவர் சிறியவர்கள் சிரேஸ்டமானவர்கள் என்ற பேதம் பார்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் இன்று நாற்பது வயதில் இருப்பவர் தலைவர் கட்சியை ஆரம்பிக்கும் போது பத்து வயதாக இருந்திருப்பார் அதனால் அவர் அரசியல் செயற்பாடற்றவராக இருந்திருக்கலாம். 

மாறாக அப்போது அவருக்கு இருபது வயதாக இருந்திருப்பின் அவர் தலைவருடன் முழு நேரப் போராளியாக இருந்திருப்பார். இன்று முப்பது வயதிலிருக்கின்ற ஒருவர் பதினைந்து வருடங்களாக கட்சிக்காக பணியாற்றுகின்றார் எனறால் அவர் சிரேஸ்டமான போராளியாக பார்க்கப்படுகின்ற கலாச்சாரம் வளர்க்கப்படவேண்டும். மாறாக நாங்கள் பழையவர்கள் நாங்கள்தான் எல்லாம் என்பது இல்லாமல் செய்யப்படவேண்டும். 

இன்று கட்சியில் இருக்கின்ற பலர் நாளை இல்லாமல் போகலாம். எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றபோது அதுவே நடக்க வாய்ப்புகள் உள்ளது. தலைவர் அஸ்ரப் அவர்களுடன் இல்லாத பலர் இங்கே இருக்கின்றனர். இன்று அவர்கள் தலைவரின் புகைப்படத்தை போட்டு விளம்பரம் செய்கிறார்கள் ஆனால் தலைவர் இருந்த காலத்தில் அவர்கள் அவ்வாறு இருக்கவில்லை. இன்று எமது தலைவரை விமர்சிக்கின்றவர்களும் நாளை அவரது புகைப்படத்தை வைத்து அரசியல் செய்ய முனையலாம். அதனால் போட்டோ வைத்திருப்பவர்களெல்லாம் கட்சி விசுவாசிகளாகி விடமுடியாது என்பது எனது அபிப்பிராயமாகும்.

தலைவருடனும் கட்சியுடனும் மக்கள் இருப்பார்கள் மக்களுக்காக தலைவர் தீர்மானங்களை எடுக்ககின்ற விடயத்தில் யாரையும் தனிப்பட்ட ரீதியில் கருத்திலெடுக்கத் தேவையில்லை.

இன்று இங்கிருக்கின்ற அனேகர் தேசியப்பட்டியல் கிடைக்கும் என்ற நப்பாசையில் இருக்கின்றனர். அது இல்லையென்று முடிவானால் அவர்களில் பலர் இங்கு இல்லாமலும் போகலாம். இதுவே யதார்த்தமாகும்.

இந்த சமுகத்தின் இலக்குகளை இன்றிருக்கின்ற சிக்கலான பாதையூடாக கவனமாக நகர்த்திச் செல்வதற்கு சிறந்த ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தலைவருக்கு அல்லாஹ் வழங்க வேண்டும் என்ற பிரார்த்தனையினை நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -