தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சினை தொடர்பில் நாம் பொறுமை இழந்து விட்டோம். தோட்ட நிறுவனங்களுக்கு தேவையான கால அவகாசங்கள் வழங்கி விட்டோம். ஆனால், தோட்ட முகாமையாளர்கள உருப்படியான மாற்று யோசனைகளை முன்வைக்க தவறி விட்டார்கள்.
ஆகவே தோட்ட தொழிலாளரின் நிரந்தரமான சம்பள பிரச்சினை தொடர்பாகவும், இப்போது வழங்கப்பட்டுள்ள இடைக்கால தீர்வான ரூ. 2500/= தொடர்பாகவும், எமது கடுமையான நிலைப்பாடு மேதின தீர்மானமாக மேதின மேடையில் அறிவிக்கப்படும். என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
இலங்கையில் இந்த வருடம் நடைபெறவுள்ள மேதின ஊர்வலங்கள், கூட்டங்கள் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் நாட்டில் நிலவுகின்றன. கொழும்பில் மூன்று இடங்களிலும், காலியிலும் நடைபெறும் பிரபல கூட்டங்களில், எந்த கூட்டத்துக்கு அதிக கூட்டம் வரும் என்ற ஊகங்கள் நிலவுகின்றன. இந்த எந்த ஒரு கூட்டத்தையும் விட எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தின நிகழ்விலேயே அதிக கூட்டம் கூடும் என்பதை நாடு மே தினத்தன்று பார்க்கப்போகின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டு மேதின நிகழ்வுகளாக, தலவாக்கலை பேரூந்து நிலைய வளவில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கும் எமது ஊர்வலம், நகரசபை மைதானத்தை அடைந்த பின்னர் அங்கே மாபெரும் மே தின கூட்டம் நடைபெறும். என்னுடன் இணைந்து கூட்டணி பிரதி தலைவர்கள் அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், கூட்டணி பொது செயலாளர் அன்டன் லோரன்ஸ், கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளார்கள்.
எமது விசேட அழைப்பை ஏற்று கலந்துக்கொள்ளும் சிறப்பு அதிதிகளும் உரையாற்றுவார்கள். கூட்டணியின் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருந்தொகையான அங்கத்தவர்கள் கலந்துக்கொள்ள உள்ளார்கள்.