ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்-
பொத்துவில் களப்புக்கட்டு மீனவர்களுக்கும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்குமிடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (03) களப்புக்கட்டு மீனவர் ஓய்வு மண்டபத்தில் நடைபெற்றது.
பொத்துவில் களப்புக்கட்டு கிராமிய மீனவர் அமைப்பின் தலைவர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.மர்சூக், நித்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.தாஹிர், நகர திட்டமிடல் மற்றும் தேசிய நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற விவகார செயலாளர் ஏ.எம்.ஜவ்பர் உள்ளிட்டவர்களும் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது களப்புக்கட்டு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதி அமைச்சர் ஹரீஸ் கேட்டறிந்து கொண்டார்.
பொத்துவில் களப்புக்கட்டு மீனவர்களின் தேவைகளான தோனி மற்றும் வலைகள் என்பவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக அண்மையில் இலங்கைக்கான குவைத் நாட்டுத் தூதுவருடன் விளையாட்டுத்துறை அமைச்சில் பேச்சுவார்த்தை நடாத்தி இதற்கான இணக்கப்பட்டினை பெற்றுள்ளேன்.
இந்த உதவியினை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். இதனை விரைவில் பொத்துவில் மீனவர்களுக்கு பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேன்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளேன் எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.