பள்ளிவாசளில் பன்றி இறைச்சியை எறிகின்ற அசிங்கம் இப்போது இல்லை - அமைச்சர் ஹக்கீம்

ஷபீக் ஹுசைன் -
பாலமுனையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 19 ஆவது தேசிய மாநாட்டில் கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரையில் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் குறிப்பிட்டவை தமிழ் ஊடகங்களில் வெளிவரவில்லை என்ற காரணத்தினால் அவற்றின் தமிழ்மொழிபெயர்ப்பு இங்கு தரப்படுகின்றது.

இங்கு மக்களது பறிபோன நிலபுலன்கள் உள்ளன. இப்பிரதேச விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். யுத்த காலத்தில் கூட விவசாயம் செய்யப்பட்ட பாரம்பரிய விளை நிலங்களை எமது மக்கள் இப்பொழுது இழந்து தவிக்கின்றார்கள். அவ்வாறான காணிகள் வனப் பிரதேசங்கள் என்று வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 

இவ்வாறு பொலன்னறுவை உட்பட ஏனைய சில மாவட்டங்களிலும் நடந்திருக்கின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வாறான அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயத்தில் கூடுதல் அவதானம் செலுத்தி எங்களது மக்களின் இழந்த நிலங்களை மீட்டுத் தருமாறு இந்தச் சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கின்றேன். 

முஸ்லிம் நாடுகளின் ஸ்திரத் தன்மையை சீர்குலைத்து, சின்னாபின்னப்படுத்தி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு, இஸ்லாத்தை தவறான முறையில் பயங்கரவாதத்தோடு இணைத்து சகிப்புத் தன்மைக்கு பெயர் பெற்ற எங்களது மார்க்கத்தை - சகிப்புத் தன்மையை போதிக்கும் எங்களது மார்க்கத்தை ஒரு மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித் தனமான மார்க்கமாக சித்திரிக்க திட்டமிட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையில் முஸ்லிம்களாகிய எங்களுக்கெதிராக எத்தனை வன்செயல்கள் புரியப்பட்ட போதிலும், நாங்கள் ஒருபோதும் ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை இழந்துவிடவில்லை. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனப்படும் இந்த பாரிய கட்சியை ஸ்தாபித்த எமது தலைவர் மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப் முதல் முறையாக பாராளுமன்றத்திற்கு 1989 ஆம் ஆண்டில் தெரிவானார்;. அதே ஆண்டில் எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குச் சென்றார். 

அதுபோல் ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சிக்காலத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற அவை தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அதிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்நாட்டு முஸ்லிம்களின் பேரபிமானத்தை வென்றெடுத்த பிரதான அரசியல் கட்சியாகச் செயற்பட்டு வருகின்றது. 

நாங்கள் நீண்டதொரு பயணித்தில் ஈடுபட்டிருக்கின்றோம். முக்கிய சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றோம். கடந்துவந்த பாதையை சற்றுத் திரும்பி பார்த்தால் எங்களுக்கு பல உண்மைகள் புலப்படுகின்றன. 

சர்வதேச நாடுகளை பொறுத்தவரை முன்னணி முஸ்லிம் நாடுகள் மத்தியில் பயங்கரவாதம் பரவி, ஸ்;திரமற்ற தன்மை காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் தான் இந்த நாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகத்தான பங்களிப்பு பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம்.

இந்த நாட்டில் பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட பின்னரும் படிப்படியாக அப்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளினூடாக நாம் பெற்றுக்கொண்ட சமாதானம், அமைதி என்பன எங்களை விட்டு அகன்று செல்லும் அபாயம் ஏற்பட்டது. ஜனாதிபதி அவர்களே நீங்களும், நாங்களும் ஒரே அமைச்சரவையில் உட்கார்ந்துகொண்டு சிலவேளைகளில் நான் எமது பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு முற்பட்ட போதெல்லாம் எனக்கு நேர்ந்த கதியை நீங்கள் அமைதியாக மிகவும் கவலலையுடன் உற்றுநோக்கிகொண்டிருந்தீர்கள். 

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலிருந்து நீங்கள் வெளியேறிய பின்னர் அவ்வாறானதொரு அராஜக நிலைமை மற்றும் அநீதி மலிந்த கலாசாரம் இனிமேல் ஏற்படக் கூடாது என்ற உறுதியோடு தான் ஜனாதிபதியாக போட்டியிட்டு வெற்றிபெற்று இருக்கின்றீர்கள். உங்களது வெற்றிக்கு துணை நின்ற மக்கள் பிரவாகத்தின் ஒரு சாரார் தான் இந்த மைதானத்தில் பல்லாயிரக்கணக்கில் இப்பொழுது குழுமியிருக்கின்றார்கள். 

கல்முனையில் நடந்த உங்களது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார கூட்டம் நினைவிருக்கலாம். நான் உங்களோடு இணைந்துகொள்வதற்கு தாமதித்து விட்டேன் என்றார்கள். உண்மையில் அப்போதைய அராஜக அரசாங்கத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உங்களுடன் இணைந்து கொள்வதற்கு ஒரு நாளைக்கு முன்னர் தான் நாங்கள் அப்போதைய அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம். 

அதற்கு முன்னர் வெளியில் வந்திருந்தால், வேறு கதையைப் பரப்பி இருப்பார்கள்;. அத்துடன், எங்களிலிருந்து பலரைப் பிரித்தெடுத்திருப்பார்கள். ஆனால், ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கூட இழக்காமல், அத்தனை பேருடனும் வெளியேற முடிந்தது. கூட்டத்தோடு வந்து உங்களது மக்கள் வெள்ளத்தில் எங்களால் சங்கமிக்கக் கூடியதாக இருந்தது. 

வாகனத்தில் வரும்போது உங்களுடன் கதைத்துகொண்டு வந்ததை போன்று, இந்த மேடையில் அமர்ந்திருக்கின்ற கட்சித் தலைவர்கள் எல்லோருடனும் சேர்ந்து இந்த அரசாங்கம் கவிழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்ற விடயத்தை இங்கு மீண்டும் நினைவூட்டுகின்றேன். 

நல்லிணக்கத்தை ஏற்படுத்த திடசங்கற்பம் பூண்டுள்ள இந்த தேசிய அரசாங்கத்தை முழுமையாக ஐந்தாண்டுகளுக்கு முன்கொண்டு செல்வதற்கு நாங்கள் ஒத்துழைப்போம். 

ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி துண்டு துண்டாக போய்விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டிலிருந்தும் எத்தனை பேர் வெளியேறி சென்றாலும் அவர்கள் மீண்டும் தாய் கட்சியில் தஞ்சமடையும் நிலைமை தான் ஏற்படும்.

அவ்வாறே ஜனாதிபதி தேர்தலில் பீல்ட் மார்ஷெல் சரத் பொன்சேகாவுக்கும் எங்களது மக்கள் அபரிமிதமான ஆதரவை வழங்கினார்கள். 

பொதுவாக, ஆட்சிகளை கவிழ்ப்பதற்கும், ஆக்குவதற்கும் எங்களது மக்கள் பங்களிப்பு செய்திருக்கின்றார்கள். 

பள்ளிவாசல்களில் பன்றி இறைச்சியை கொண்டுவந்து எறிகின்ற அசிங்கம் இப்பொழுது இல்லை. அவ்வாறானதொரு யுகம் இருந்தது. முஸ்லிம்களின் சுய கௌரவத்திற்கு பங்கம் விளைவித்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த கொடூர அரசாங்கத்திலிருந்து வெளியேறிய உங்களது தலைமைத்துவத்திற்கு உரமூட்டுவதற்கு எங்களால் முடிந்தது. 

பிரதமர் எதிர் கட்சியில் இருந்துகொண்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எத்தனை நெருக்கடிகளை ஏற்படுத்திய போதிலும் ஏனைய கட்சிகளையும் இணைத்துகொண்டு உங்களது தலைமையினாலான ஆட்சி மாற்றத்திற்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தார். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இதேபோன்ற எங்களது மக்கள் வெள்ளம் ஒன்று திரண்டு ஆதரவளித்தது. ஆனால், அது கைகூடவில்லை. 

எங்களது கட்சியின் ஸ்தாபக தலைவரின் சித்தாந்தத்தின்படி எங்களது மக்களின் விடிவிற்காக ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் கைங்கரியத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம். 

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் ஹெலிகொப்ட்டரில் வந்து இறங்கும் வரை நான் பிரதமருடன் பேசிக்கொண்டிருந்த போதும் எங்களது இந்த பிரதேசத்திலுள்ள பௌதிக வளங்களைப் பொறுத்து நாங்கள் இந்த மக்களின் தொழில் வாய்ப்புக்களை இன்னும் மேம்படுத்துவதற்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகளவில் இங்கு ஈர்த்தெடுப்பதற்கும், வெளிநாட்டு நிதியுதவிகளை இந்தப் பகுதிக்கு கூடுதலாக கொண்டு வந்து சேர்ப்பதற்கும் உரிய வழிவகைகளை ஆராய்ந்தோம். ஒலுவில் துறைமுக பிரதேசத்திலும் நாங்கள் இவை பற்றி கதைத்தோம். 

அத்துடன் இங்கு மக்களது பறிபோன நிலபுலன்கள் உள்ளன. இப்பிரதேச விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். யுத்த காலத்தில் கூட விவசாயம் செய்யப்பட்ட பாரம்பரிய விளை நிலங்களை எமது மக்கள் இப்பொழுது இழந்து தவிக்கின்றார்கள். 

அவ்வாறான காணிகள் வனப் பிரதேசங்கள் என்று வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பொலன்னறுவை மாவட்டத்திலும் நடந்திருக்கின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வாறான அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயத்தில் கூடுதல் அவதானம் செலுத்தி எங்களது மக்களின் இழந்த நிலங்களை மீட்டுத் தருமாறு இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களை வேண்டிக்கொள்கின்றேன்.

அவ்வாறே பொருளாதார பிரச்சினை தலை தூக்கியிருக்கின்ற போதிலும், அச்சத்துடன் வாழ்ந்த இருண்ட யுகத்தை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதியாகிய நீங்கள் உரிய தலைமைத்துவத்தை வழங்கினீர்கள். புதிய யுகத்திற்கு இட்டுச் செல்லும் இந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். 

நாங்கள் எல்லோரும் ஒற்றுமைபட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்நாட்டின் சிறுபான்மை மக்கள் வேண்டி நிற்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வருகின்ற போது அதனை உச்சகட்ட விட்டுகொடுப்போடு இரு தரப்பினர்களான தமிழர்களும், முஸ்லிம்களும் இந்த நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களின் அபிலாஷைகளை புரிந்துகொண்டவர்களாக இருக்கும் நிலையில், வீண் பிரசாரங்கள், புரளிகளை தெற்கில் உருவாக்க எத்தனிக்கின்ற சக்திகளின் சதிவலையில் சிக்காமல் மிகவும் லாவகரமாக பல தசாப்த காலங்களாக இங்கிருக்கின்ற எல்லா சிறுபான்மை தலைமைகளையும் ஒன்றிணைத்து நீங்கள் சகலருக்கும் நீதி, நியாயத்தை பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பி;க்கை எங்களுக்கு உள்ளது. 

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாங்கள் ஒன்றுபட்டு ஆட்சி மாற்றங்களை கொண்டு வந்தோம். கடந்த தேர்தலில் நாங்கள் ஆட்சி மாற்றத்தின் மூலம் சகல சிறுபான்மை மக்களுக்கும் நிம்மதியை கொண்டு வந்ததது மட்டுமல்ல, அதற்கு முன்னர் யுத்தத்தை வென்ற இறுமாப்பில், ஆணவத்தில் அகங்காரத்தில் திளைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்தோம். சாணக்கியமாகவும், சமயோசிதமாகவும் முடிவுகள் எடுப்பதற்காக தருணம் வரும் வரை காத்திருந்தோம். 

இங்கு வருகை தந்திருக்கின்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளே, பிரதிநிதிகளே, பலமானதும் வளமானதுமான முஸ்லிம் நாடுகளின் ஸ்திரத் தன்மையை சீர்குலைத்து, சின்னாபின்னப்படுத்தி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு, இஸ்லாத்தை தவறாக பயங்கரவாதத்தோடு இணைத்து சகிப்புத் தன்மைக்கு பெயர் பெற்ற எங்களது மார்க்கத்தை, சகிப்புத் தன்மையை போதிக்கும் எங்களது மார்க்கத்தை ஒரு மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித் தனமான மார்க்கமாக சித்திரிக்க திட்டமிட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இலங்கையில் முஸ்லிம்களாகிய எங்களுக்கெதிராக எத்தனை வன்செயல்கள் புரியப்பட்ட போதிலும், நாங்கள் ஒருபோதும் ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை இழந்துவிடவில்லை. 

முழுநாட்டையும் பயங்கரவாதம் வியாபி;த்திருந்த வேளையில் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. குறிப்பாக, தெற்கில் அரசியல் இலக்குகளை அடைவதற்காக சிங்கள இளைஞர்கள் வன்முறையை கையாண்ட போது, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளில் தமிழ் இளைஞர்கள் விரக்தியடைந்து அவர்களது அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கு வன்முறையை கடைப்பிடித்த போது எனது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மிகவும் துணிச்சலாக, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்நாட்டு முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் ஏந்துவதிலிருந்து தடுத்து ஜனநாயக வழிமுறைகளின் பால் இட்டுச்சென்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்தை தொடர்ந்து இந்த நாட்டில் முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாதத்திற்கு அறவே இடமில்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. 

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக, ஏனைய சில மாவட்டங்களின் எல்லை புற கிராமங்களில் முஸ்லிம்கள் மிகவும் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டார்கள். 

சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு இராஜதந்திரிகளான உங்களில் பலர் பொலன்னறுவைக்கு விஜயம் செய்;தபோது இங்கு வீற்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உங்களை அந்த மாவட்டத்தின் எல்லை புற கிராமங்களான பள்ளித்திடல், பங்குரானை, அளிஞ்சிப்பொத்தானை போன்ற கிராமங்களுக்கும், சிங்கள அப்பாவி மக்கள் வாழ்ந்த குக்கிராமங்களுக்கும் சென்று பாரிய மனிதப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களை காண்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருந்தார்.

இத்தனைக்கும் மத்தியில்தான் எங்களது மறைந்த தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாக ஜனநாயக மரபுகளை பேணி எமது மக்களை நெறிப்படுத்தினார். 

தமிழாக்கம் : டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -