பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலை விவகாரத்தில் சாட்சிகளை மறைத்தமை தொடர்பில் கைதான முன்னாள் நாரஹேன்பிட்டி குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி மீதான வழக்கு விசாரணை நேற்று புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் பொலிஸ் காவலரணிலேயே இடம்பெற்றது.
நேற்று போயா விடுமுறை என்பதால் புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணைக்கு என 9 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்ற நீதிபதி திலிண கமகே கடமையில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வஸீம் தாஜுதீன் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேராவை நேற்று மன்றில் ஆஜர் செய்வதாக இருந்தது.
இது தொடர்பில் நீதிவான் திலின கமகேவுக்கும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை முதல் பி.ப. 3.00 மணிவரை அவரும் தனது 9 ஆம் இலக்க நீதிமன்றில் இருந்தார்.
எனினும் சந்தேக நபர் அழைத்து வரப்படாத நிலையில் 3.00 மணிக்கு கடமையை நிறைவு செய்த நீதிவான் நீதிமன்றிலிருந்து செல்ல தனது காரில் பயணத்தை ஆரம்பித்தார்.
இதன்போதே சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேராவை புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அழைத்து வந்து பொலிஸ் காவலரணில் வைத்திருந்தனர்.
நீதிவான் தான் செல்லும் போது இதனை அவதானித்து உடனடியாக நீதிமன்ற வாயிலில் காரை நிறுத்திவிட்டு பொலிஸ் காவலரணுக்குள் சென்று வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
"ஏன் இப்படி அலைக்கழிக்கிறீர்கள் இன்று விடுமுறை நாள். நாமும் கடமையை தானே செய்கிறோம். பி.ப. 2.00 மணிக்கு வருவதாகக் கூறினீர்கள். பின்னர் பி.ப. 2.15 என்றீர்கள். பி.ப. 2.30 வருகிறோம் என்றீர்கள். 5 நிமிடங்களில் வருவதாகக் கூறினீர்கள். வரவே இல்லை. இப்போது வந்து நிற்கிறீர்கள்” என குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளை பார்த்து கூறியவாறே வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இதன்போது பொலிஸ் காவலரணில் தொலைக்காட்சி செயலில் இருந்ததுடன் அதில் நிகழ்ச்சி ஒன்றும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. விசாரணையின் இடை நடுவிலேயே தொலைக்காட்சியும் நிறுத்தப்பட்டது.