அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அலுவகத்துக்கு முன்பாக சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரில் இருவர் மயக்கமடைந்த நிலையில் இன்று (29) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்னர்.
இன்று வௌ்ளிக்கிழமை பிற்பகல் 04 மணியளவில் ஈச்சிலம்பற்றைச்சேர்ந்த எப்.பத்மநாதன் என்ற தொண்டராசிரியரும் நேற்றைய தினம் குச்சவௌி பிரதேசத்திலுள்ள புடவைக்கட்டு ஜே.முபாரக் எனபவரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைக்குரிய திகதியை உடனடியாக அறிவிக்குமாறு கோரி கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கடந்த திங்கட்கிழமை (25) ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு தொண்டர் ஆசிரியர்கள் புதன்கிழமை பிற்பகலிலிருந்து சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்களில் இருவரும் மயக்கமடைந்துள்ளார். நாளைய தினம் பெண் தொண்டராசிரியர்களும் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிய வருகின்றது.