எப்.முபாரக்-
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பொது விளையாட்டு மைதானம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட போதிலும் திறந்து வைக்கப்படாமலும், குறைபாடுகளுடனும் இருப்பதாக அப்பிரதேச விளையாட்டுக் வீரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பேராறு விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு முன்னால் உள்ளக போக்குவரத்து பிரதியமைச்சரும் தற்போதைய திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக்கின் பதினைந்து இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட போதிலும் கழிவிடங்கள், குடிநீர், மற்றும் பூரணமாக நிறைவு பெறாமலும் மூன்று வருடங்கள் கழிந்தும் இன்னும் திறந்து வைக்கப்படவில்லையென இப்பிரதேச விளையாட்டு வீரர்களும்,பொது மக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்விளையாட்டு மைதானத்தில் ஏதாவது விளையாட்டு சுற்றுப்போட்டிகள் நடாத்த முடியாத நிலையில் உள்ளதாகவும்,விளையாட்டு வீரர்கள் கவலை தெரிவிப்பதோடு பேராறு விளையாட்டு வீரர்களின் விளையாட்டு திறமையினை மழுங்கடிக்கும் செயல் எனவும் பிரதேச மக்களும் விளையாட்டு வீரர்களும் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பிரதேசத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்கள் இருக்கின்ற நிலையில் மைதானத்தின் பார்வையாளர் அரங்கு பூரணப்படுத்தவுமில்லை, திறந்து வைக்கப்படவுமில்லை என தெரிவிக்கின்ற அதேவேளை கந்தளாய் முன்னால் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஒரு எதிர்பார்ப்பும் பார்வையாளர் அரங்கு திறக்கப்படாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே கந்தளாய்ப் பிரதேச விளையாட்டு வீரர்களின் விளையாட்டு திறமையினை மழுங்கடிக்காது கூடிய விரைவில் குறைபாடுகளை நிவர்த்தி செய்து பார்வையாளர் அரங்கினை திறந்து வைக்குமாறு விளையாட்டு வீரர்களும் பிரதேச மக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.