சுஐப் எம் காசிம்-
சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் தென்னிலங்கையில் அகதி வாழ்வுக்கு முகம் கொடுத்து தற்போது மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள அகதி முஸ்லிம் மக்களின் பூர்வீகக் கிராமங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (22) விஜயம் செய்தார்.
மன்னார் முசலி - சிலாவத்துறை பிரதேசங்களிலுள்ள அகத்திமுறிப்பு, அளக்கட்டு, பீ பீ பொற்கேணி, எஸ் பீ பொற்கேணி, வேப்பங்குளம், மறிச்சுக்கட்டி ஆகிய கிராமங்களுக்கும் சிங்கள மக்கள் வாழும் சிங்கள கம்மான மீள்குடியேற்றக் கிராமம், தமிழ் மக்கள் வாழும் முள்ளிக்குளம் மீள்குடியேற்றக் கிராமம் ஆகிய பிரதேசங்களுக்கே அமைச்சர் சென்றார்.
மீள்குடியேறிய மக்கள் தாம் எதிர் கொள்ளும் கஷ்டங்களை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். கொடூர வெயிலுக்கு மத்தியிலும் மக்கள் அமைச்சரை சந்திக்க காத்து நின்றதை அவதானிக்க முடிந்தது. இந்தக் கிராமங்களில் மீள் குடியேறியுள்ள மக்கள் நீர்க்கஷ்டத்தால் தாம் பெரிதும் வாடுவதாகவும் அமைச்சரால் ஆங்காங்கே அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள குழாய்க்கிணறுகள் தமது நீர்த்தேவைக்கு போதாதென்றும் எடுத்துரைத்தனர்.
பல மீள்குடியேற்றக் கிராமங்களில் வாழும் பாடசாலை மாணவர்கள் தாம் கல்வி கற்பதற்கு நீண்ட தூரம் பாடசாலை செல்ல வேண்டியிருப்பதால் தாம் வாழும் இடங்களுக்கு அருகாமையில் ஓரிரு பாடசாலைகளையாவது அமைத்துத் தாருங்களென வேண்டினர். அத்துடன் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்த தமக்கு சுய தொழில் வாய்ப்புக்கு உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
தாங்கள் அன்றாட பாவனைப் பொருட்களை பெறுவதற்கு நகருக்கு செல்ல வேண்டியிருப்பதன் கஷ்டத்தையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர், இந்தப் பிரதேசத்தில் தரமான பாடசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அத்துடன் பாலர் மாணவர்களின் நன்மை கருதி ஐந்தாம் ஆண்டு வரை இன்னுமொரு பாடசாலையை அமைக்க தான் உத்தேசித்துள்ளதாகவும் இவ்விரண்டு பாடசாலைகளும் விரைவில் கைகூடுமென உறுதியளித்தார்.
மீளக்குடியேறிய மக்களுக்கு அன்றாடப் பொருட்களை அண்மையில் பெறக்கூடிய வகையில் சிறந்த வசதியொன்றை ஏற்படுத்தித் தருவதாகவும் தெரிவித்ததுடன் படிப்படியாக போக்குவரத்து வசதிகள், தபால் வசதிகளையும் ஏற்படுத்தி மீளக்குடியேறிய மக்கள் கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்களை போக்குவதற்கு தன்னாலான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அத்துடன் இந்தக் கிராமங்களில் அமைச்சரின் நிதியுதவியுடன் மேற் கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சர் பார்வையிட்டதுடன் அவற்றைத் துரிதப்படத்துமாரு உரியவர்களுடன் வேண்டினார்.