எப்.முபாரக்-
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள படுகாடு பகுதியில்; தமிழ் - சிங்கள விவசாயிகளுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக அப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை(21) சில மணி நேரங்கள் அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மூதூர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் விரைந்து அங்கு சுமுக நிலையை ஏற்படுத்தியதாக மூதூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் வி.மோகன் தெரிவித்தார்.
பொலிஸார் அங்கு வருகை தந்து அமைதி நிலையை ஏற்படுத்தியிருந்தாலும், எதிர்வரும் திங்கட்கிழமை வரை இரு தரப்பினரையும் அந்த பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தங்களின் வயல் நிலங்களில் நெல் வேளாண்மைச் செய்கைக்கான ஆரம்ப வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை 10 - 15 பேர் கொண்ட குழுவொன்று அங்கு வந்து தங்களை வெளியேறுமாறு கூறி தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும் இதன் எதிரொலியாகவே இந்த பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
போர் காரணமாக தங்களால் செய்கை பண்ண முடியாமல் போன காணிகளுக்கு குறித்த நபர்கள் உரிமை கோர முற்படுவதாகவும் இதன் காரணமாக தங்களின் காணி உரிமை மறுக்கப்படுவதாகவும் தமிழ் விவசாயிகள் விசனமும் கவலையும் வெளியிடுகின்றார்கள்.
தங்களின் காணி உரிமையை வலியுறுத்தியும் சட்டவிரோதமாக அதில் நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபடுபவர்களை வெளியேற்றி தருமாறு கோரியும் கடந்த 5- 6 வருடங்களாக தாங்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் உட்பட சிவில் அதிகாரிகளினால் நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த தங்களுக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் விவசாயிகளினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.