மு.கா. உடைந்து சிலர் வெளியே வர வேண்டுமென்று சிலர் தேதியைக் குறித்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

பி. முஹாஜிரீன்

'இன்று முஸ்லிம் காங்கிரஸ் எதிர் கொண்டுள்ள பிரச்சினை உட்கட்சிப் பிரச்சினையா அல்லது சதியா என்று நோக்கினால், அங்கே நடந்து கொண்டிருப்பது மிகத் தெளிவான சதி என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். 

கட்சியை மாத்திரம் பலவீனப்படுத்தினால் அது உட்கட்சிப் பிரச்சினை. கட்சியைப் பலவீனப்படுத்தி மாற்றுக் கட்சி எதிரிகளைப் பலப்படுத்தினால் அது சதி' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் தெரவித்தார்.

பாலமுனையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு வெற்றி மாநாடாக நடந்தேறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் 'நன்றி நவிலலும் பகற்போசன விருந்துபசாரமும்' நிகழ்வு பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றபோது சிறப்புரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஒன்றின் உருவாக்கத்திற்கு மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற, அடையாளம் காணப்பட்டிருக்கின்ற அரசியல் வாதிகள் சிலரும் இன்னும் மு.கா.வினுள் இருந்து சதி செய்து கொண்டிருக்கின்ற சிலரும் திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதன் ஓர் அங்கமாகத்தான் நேற்று (01) அதாஉல்லா தரப்பினருடன் சேகு இஸ்ஸதீனை சேர்க்கின்ற ஒரு பேச்சுவார்த்தை அக்கரைப்பற்றிலே நடைபெற்றது. 

மு.கா. உடைந்து அதிலிருந்து சிலர் வெளியே வர வேண்டுமென்று சிலர் தேதியைக் குறித்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இணைந்து முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிரான மாற்று அணி ஒன்றை உருவாக்கி பலப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இது திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற சதியாகும்.

எமது உடம்பிலே இருக்கின்ற ஒரு ஊனம் எமைக் கஸ்டப்படுத்துகின்றது என்பதற்காகப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, நமது உயிர் போவதற்கு காரணமான அந்த ஊனம் பிறப்பிலிருந்து இருக்கின்றதென்று பார்க்காமல் எப்படி வெட்டி வீழ்த்துவோமோ, அப்படி மு.கா. சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.

சிறுபான்மைப் பரப்பிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக உருவாகியிருக்கின்ற 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தினை சவாலுக்குட்படுத்தியதை தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஏற்றுக் கொண்டிருக்கின்றது. சமஷ்டியைத் தவிர வேறு எந்த தீர்வினையும் நாங்கள் இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக ஏற்றுக் கொள்ளமாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்லி வருகின்ற நிலையில், அதற்கு முன்னர் தமிழ் மக்களுடைய காணிப் பிரச்சினை தொடர்பில் எங்களுடன் பேசி ஒரு தீர்க்கமான முடிவைப் பெற வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை அவர்களை சிக்கலில் மாட்டியிருக்கிறது.

அவ்வாறே, முஸ்லிம் மக்கள் சார்ந்து முஸ்லிம்களின் பேரியக்கமான முஸ்லிம் காங்கிரஸ் நியாயமான கோரிக்கைகளை தீர்வு விடயத்திலே முன்வைக்கின்ற போது அதற்கு இடைஞ்சலாகயிருக்கின்ற விடயங்களை முன்வைக்கும் வகையில் மு.கா. வுக்கு எதிராக ஒரு கூட்டமைப்பு உருவாவதற்கு மறைமுகமாக செயற்படுகின்றவர்களை கட்சிக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.

செயலாளருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்களில் சிலவற்றை பங்கிட்டுக் கொடுத்ததென்பது ஏன் வந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். செயலாளர் என்ற பதவியை உரிய முறையில் பிரயோகிக்காமல், அதனை கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல் கட்சிக்கும் தலைமைக்கும் சவாலாக அறிக்கை விடுவதிலே பிரயோகிக்காமல் இருந்ததனால் இந்த அதிகார பகிர்ந்தளிப்பு உருவானது என்பது தெளிவானது.

மஹிந்த ராஜபக்ஷ காலப்பகுதியில் தலைமைக்கு எதிராகவும் கட்சிக்கு எதிராகவும் அறிக்கை விட்டுக் கொண்டு மு.கா. விற்குள் ஒற்றுமையில்லை என்பதை வெளியில் தெரியுமளவுக்கு இந்த செயலாளளர் நாயகமாக இருந்தவர்கள் செய்தார்கள். கடந்த 2012 இல் மாகாண சபைத் தேர்தலிலே மு.கா யாருடன் சேர்ந்து கேட்பது என்று தீர்மானம் எடுக்க ஆயத்தமான நிலையில், செயலாளர் நாயகமாக இருந்தவர்கள் தொலைபேசியை துண்டித்துவிட்டு 4 நாட்கள் தலைமைறைவாக இருந்து, கட்சியையும் சமூகத்தையும் பற்றி சிந்திக்காமல் ஒழிந்திருந்தார்கள். இந்த இக்கட்டான முடிவெடுக்க வேண்டிய நிலைமையில் இவ்வாறு செயலாளர் நாயகம் ஒழிந்து கொண்டால் கட்சியை எவ்வாறு வழி நடாத்துவதென்று அவர் நமக்கு விளக்கம் கூற வேண்டும். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சுதந்திரக் கட்சி, ஐ.தே.க. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய எல்லாக் கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட இரண்டாக உடைந்தன. ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் சிலர் பிரிந்தனர். ஆனால், மு.கா. எந்த உடைவும் இல்லாமல் சமூகத்திற்கும் பாதிப்பில்லாமல் நிதானமாக, பக்குவமாக முடிவெடுக்க யோசித்துக் கொண்டிருந்தபோது செயலாளர் நாயகமாக இருந்தவர்கள், என்னால் தாமதிக்க முடியாது அம்பாறைக்குச் சென்று மைத்திரியை ஆதரிப்பதாகக் கூறப் போகின்றேன் என்று கூறி தான் மாத்திரம் மஹிந்தவுக்கு எதிரானவன் என்பதைக் காட்ட முயன்றார்.

அப்போதைய நிலையில் மைத்திரியை ஆதரிக்கின்ற முடிவை அவசரமாகச் சொல்லியிருந்தால் இனவாதிகளின் தீனியாக, பாடு பொருளாக மு.கா. மாறி மஹிந்த தரப்பு வென்றிருக்கும் மு.கா. கட்சியும் துண்டாடப் பட்டிருக்கும். ஆனால் இவை இரண்டுமே நிகழாமல் தலைமை சற்று தாமதித்து சாணக்கியமாக முடிவெடுத்து வெளியேறியதனால் நாம் இன்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றோம். அதனால் இந்த செயலாளர் என்ற விடயம் கட்சிக்கும் தலைமைக்கும் எப்படியெல்லாம் சவாலாக வந்தது என்பதை நாம் விளங்க முடியும். 

செயலாளர் என்பவர் தலைமைக்கு விசுவாசமானவராக இருக்க வேண்டும். பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு இப்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் செயலாளர் நாயகமாக இருந்தார். மு.கா வை நுஆ கட்சியாக முன்கொண்டு செல்ல முனைந்தபோதுகூட ரவூப் ஹக்கீமைத்தான் செயலாளராக ஆக்கினார். அப்படி நம்பிக்கையும் விசுவாசமும் இந்த தலைமையிடம் அந்த தலைமைக்கு இருந்தது. 

ஆனால், இப்போதிருக்கின்றவரை செயலாளர் நாயகமாக நம்பிக்கையோடு கொண்டு வந்ததற்கு நம்பிக்கைக்குரியவராக செயற்பட்டிருக்கின்றாரா என்பதை சொல்லட்டும். இப்படியாக வருகின்றபோது கட்சியையும், சமூகத்தையும் பாதுகாப்பதற்கு நம்பிக்கைக்குரியவராக அவர் இல்லாதபோது, அதற்கு முடிச்சுப் போட வேண்டிய நிலை தலைமைக்கு உருவாகியது. அந்த முடிச்சுதான் உயர் பீடச் செயலாளர் என்ற நியமனம். அவ்வாறு அதிகாரம் பிரிக்கப்பட்டாலும் நமக்கு தேசியப்பட்டியல் கிடைக்குமென்று நம்பியிருந்தததால் அதனை ஆமோதித்தவராக இருந்துவிட்டு இன்று எதுவும் கிடைக்கவில்லை என்பதற்காக, தனக்கு அநியாயம் நிகழ்ந்திருக்கின்றதென்று இதனை வேறு திசைக்கு மாற்ற முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

உட்கட்சி ஜனநாயம் மிக உச்சத்தில் பேணப்படுகின்ற ஒரு கட்சி இருக்குமாக இருந்தால் அது மு.கா.வை தவிர வேறொன்றுமில்லை. அவ்வாறான நிலையில் தலைவர், செயலாளர் நாயகம் அவர்களை அவமானப்படுத்தும் விதமாக எந்த சந்தர்ப்பத்திலும் நடந்தது கிடையாது. அதற்கு உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் சாட்சி. மறைந்த தலைவர் அவர்கள் தற்போதய செயலாளரை இணைப்புச் செயலாளராக மாத்திரம்தான் வைத்திருந்தார். 

பேரியல் அஷ்ரபைத்தான் பிரத்தியேகச் செயலாளராக வைத்திருந்தார். ஆனால் தலைவர் ரவூப் ஹக்கீம் அவரை இரண்டு முறை தனது பிரத்தியேகச் செயலாளராக வைத்திருந்தார். கட்சியின் செயலாளர் நாயமாக வைத்திருக்கிறார். ஏன் மூன்று முறை தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கியிருக்கிறார். இதைவிட ஒரு மனிதனைக் கௌரவப் படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்.

ஆகவே கட்சிக்குள் நடப்பது சதி என்றால் வெட்ட வேண்டிய இடத்தில் வெட்டி காப்பாற்ற வேண்டிய நேரத்தில் கட்சியைக் காப்பாற்ற வேண்டும்.' என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -