ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
நாவைப் பேணுவோருக்கு சுவனம் உண்டு, பேசினால் நல்லதையே பேசுங்கள் இல்லாவிட்டால் வாய் மூடியிருங்கள்.
வார்த்தை பிரயோகங்கள் வன் முறைகளையும் தூண்டலாம் சமாதான சகவாழ்வையும் கொண்டு வரலாம்.
நாவைப் பேணுதல் என்பது கருத்து வெளியிடல் என்றபரந்த பரப்பில் அமானிதமாக பார்க்கப்படல் வேண்டும்.
நாவினாலும், நடத்தையினாலும் அடுத்தவரை காயப்படுத்தாதவரே ஒரு முஸ்லிம்.
அமைதி சாந்தி சமாதானம் என்ற அழகிய பிரயோகமே இஸ்லாமிய தொடர்பாடல்களின் துவக்கப் புள்ளியாகும், வாழ்த்தாகும்.
ஆண்கள் அல்லது பெண்கள் ஒரு கூட்டத்தினரை பிறிதொரு கூட்டத்தினர் ஏளனம் செய்வது, புறம் பேசுவது, அபாண்டம் சுமத்துவது அல்குர்ஆனில் வன்மையாக கண்டிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் இருக்கின்ற பொழுது கேட்பதற்கு விரும்பாத விடயத்தை அவர் இல்லாத நிலையில் பேசாதீர்கள்.
அழகிய உபதேசங்கள், கருத்தாடல்கள், அறிவுபூர்வமான வழிமுறைகள் மூலம் மாத்திரமே அழைப்புப்பணி மேற்கொள்ளப்படல் வேண்டும்.
அழகிய கருத்தாடல்கள் கசப்பான வாதப் பிரதிவாதங்களாக முற்றி விடுகின்ற பொழுது முதலில் விட்டுக் கொடுப்பவருக்கு சுவனத்தில் ஒரு வீடு கிடைக்கிறது, அவர்பக்கம் நியாயம் இருப்பினும் சரியே.
அல்லாஹ் அல்லாதவற்றை அழைப்பவர்கள் மனம் காயப்பட நீங்கள் திட்டுவீர்களாயின் அவர்கள் அல்லாஹ்வை திட்டுவார்கள் என்ற அல்-குரானிய அறிவுரை எதிர்மறையான எதிர் வினையாற்றல்களை வர வழைத்துக் கொள்ள வேண்டாம் என்ற அடிப்படை உண்மையை அழைப்பாளர்களுக்கு உணர்த்தி நிற்கின்றது.
இஸ்லாத்தில், நிர்பந்தமோ, பலவந்தமோ, வன்முறையோ கிடையாது.
நாவு பேணப்பாடமையின் விளைவுகளே குடும்ப வன்முறைகளின் முதல்படி.
ஊடக சுதந்திரம், சமூக ஊடக சுதந்திரம் என்பவற்றை வரை முறைகளோடு கையாள தவறுபவர்கள் பெரும் பாவத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அழகிய மானுட விழுமியங்களின் பிரதிபலிப்பாகவே ஒரு விசுவாசியின் நாவும் நடத்தையும் இருத்தல் வேண்டும்.
கருத்தியல் வன்முறை பிரயோகங்கள் நாவு எழுத்து, பேச்சு பிரயோகங்களைத் தாண்டி துப்பாக்கிப் பிரயோகங்களாக இன்று மாறிவருகின்றது.
பண்பாடற்ற பிரயோகங்கள் வன்முறைகளைக்கே இட்டுச் செல்லும் வாளேந்திய இருவிசுவாசிகளில் ஒருவர் மற்றவரை கொலை செய்தால் கொலை செய்தவரும் செய்யப்பட்டவருமாக இருவருமே நரகிற்குச் செல்வார்கள்.
அதிகரித்துச் செல்லும் கருத்தியல் வன்முறைகள்..கவலை தருகின்றன!
விசுவாசிகள் மத்தியில் விடாப்பிடியான வாதப் பிரதிவாதங்கள், தர்க்கங்கள், குதர்க்கங்கள் அதிகரித்து வருவதனை அவதானிக்கும் பொழுது வேதனையாக இருக்கின்றது, அதிகரித்த மன உளைச்சளைத் தருகின்றது.
குறிப்பாக அறிவு பூர்வமான, ஆதார பூர்வமான வாதப் பிரதிவாதங்கள் கூட தனிநபர்கள், அறிஞர்கள், நிறுவனங்களை மிகவும் கீழ்த்தரமாக அல்லது மட்ட ரகமாக விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்ற பொழுது சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.
அவ்வாறான விமர்சனங்களில் போட்டியும் பொறாமையும், காழ்ப்புணர்வும், சில வேளைகளில் புகழ் தேடலும், தாழ்வு மனப்பான்மைகளும், மனநிலைக் கோளாறுகளும், கருத்தியல் வன்முறையும் குழுச் சண்டைகளும் மிகைத்து நிற்பதனை என்னால் உணர முடிகின்றது.
இஸ்லாமிய சகோதரத்துவ வாஞ்சை பரஸ்பர அன்பு இல்லாது ஒருவரை அடுத்தவர் வழிகேடாக அடையாளப்படுத்த மேற்கொள்ளப்படுகின்ற பிரயத்தனங்கள் அடிப்படை இஸ்லாமிய ஒழுக்கவியல் பண்பாட்டு விழுமியங்களை மீறுவதாக எனக்குத் தெரிகின்றது.
பரஸ்பரம் அன்பு பாராட்டாத ஒரு சமூகத்தில் வெறும் கொள்கைகளும், கோட்பாடுகளும், கருத்தாடல்களும் முரண்பாடுகளையே தோற்றுவிக்கின்றன, அங்கு மதத்திற்கு மதம் பிடிக்கின்றது, வெறிபிடிக்கின்றது, அங்கு புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, சமயோசிதம், உணர்வுகளை மதித்தல் மன்னித்தல், மறத்தல் போன்ற அடிப்படை ஒழுக்க விழுமியங்கள் உயிர்வாழ்வதில்லை.
சிலரது கருத்துப் பகிர்வுகள் மிகவும் சிறு பிள்ளைத் தனமாகவும், அதிகப் பிரசங்கித் தனமான பிரயோகங்களைக் கொண்டதாகவும் எனக்குத் தெரிகின்றது.
நாம் எமக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப ஆயிரம் நியாயங்கள் இருக்க வெவ்வேறு முகாம்களாக முரண்பட்டுக் கொள்வதற்கு ஒருசில நியாயங்களைத் தேடிக் கொண்டிருப்பதாக எனது மனம் சொல்லுகின்றது.
இவ்வாறு ஒரு காலத்தில் முரண்பாடுகளை பேச்சு எழுத்து மொழிகளில் வளர்த்துக் கொண்டிருந்தவர்கள், இன்று துப்பாக்கி ரவைகளின் மொழியால் பேசிக் கொண்டிருப்பதனை உலகின் பல பாகங்களிலும் நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம்.
அவ்வாறான முரண்பாட்டு முகாம்களை உம்மத்தின் பொது எதிரிகள் தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்காக பயன்படுத்தி வருவதனையும், அழிவின் விளிம்பில் கொண்டுபோய் நிருத்தியுள்ளதனையும் நாம் காணுகின்றோம்.