பி. முஹாஜிரீன்
'அண்மையில் பாலமுனையில் வெற்றிகரமாக நடந்தேறிய தேசிய மகாநாடு சி.ல.மு.காங்கிரஸ் மீதான தேசியப்பார்வை மற்று கண்ணோட்டத்தினை வித்தியாசமான ஒரு கோணத்தில் தேசிய ரீதியில் தொடக்கி விட்டிருக்கின்றது.
மறைந்த தலைவர் அஷ்ரப் காலந்தொட்டு இன்றுவரையும் இருந்து வந்த குற்றச்சர்ட்டுகளுக்கு யதார்த்தமான எண்ணக்கருக்களினை செயலுருப்படுத்திக் காட்டும் ஒருகளமாகவே தேசிய மகாநாடு விளங்கியது'
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் எம். பழீல் பீஏ கட்சி மாநாடு தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'முகாவின் தேசிய மகாநாட்டு வெற்றிமூலம் தேசியத் தலைவர் ரஊப் ஹக்கீம் எமது சமுதாயம், கட்சிமீதான தேசிய பன்முக மீள் பார்வையை முடுக்கி விட்டிருக்கின்றார்.
குறுகிய நோக்கங் கொண்ட இனவாதக் கட்சி என்ற அபத்தமான லேபலினை நாம் தாங்க வேண்டியிருந்தது. மு.கா. முஸ்லிம்களின் விடயங்களை மட்டுமே பேசும்இகுரல் கொடுக்கும். ஏனைய தேசிய இனங்களுக்கு அது விரோதமானது. அது இன ஐக்கியம், சகவாழ்வு, நல்லிணக்கங்களுக்கு உட்படாத மாற்றமான ஒரு இயக்கம் என்ற முரண்பாடான பார்வையும் சாடலுமே பரவலாக எம்மீது இருந்து வந்தது.
ஆனால் இப்பிழையான பார்வை மாற்றப்படல் வேண்டுமென எமது தேசியத்தலைவர் ரஊப் ஹக்கீம் கடந்த காலங்களில் தீவிரமாக இயங்கினார். இந்நாட்டு முஸ்லிம் சமுதாயம், இந்நாட்டில் தாம் வாழ்வதுடன் ஏனைய சமூகங்களும் வாழ்வதற்கான அத்தனையும் செய்யப்படல் வேண்டுமென்பதையே விரும்புகின்றது என்பதனை சட்டமூல விவாதங்களின் போதும் வலியுறுத்தி வந்திருக்கின்றார்.
தேர்தல் திருத்த சட்டமூலம், அரசியலமைப்புத் திருத்தங்களின் போதும் இத்தொணியே அவரின் பேச்சுகளில் இழையோடியது. இனஒற்றுமையும், ஐக்கியமுமே எப்போதும் அவரின் பக்குவமான மனிதநேய பேச்சுகளின் கருப்பொருளாக அமைந்திருந்தன. எப்பொழுதுமே இத்தொனியை தமிழ்இசிங்களத்தலைமைகளுக்கு அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.
தலைமைத்துவம் தனது யதார்த்தமான எண்ணக்கருக்களினை செயலுருப்படுத்திக் காட்டும் ஒருகளமாகவே தேசிய மகாநாட்டை முற்றுமுழுதாக வடிவமைத்தது.
நல்லாட்சியின் தலை மக்களான மாண்புமிகு ஜனாதிபதியும், பிரதமரும், தமிழ் எதிர்க்கட்சித் தலைமை ஏனைய கட்சித்தலைவர்களையும் அழைத்துவந்து 'இதுதான் எமது சமுதாயத்தின் சுயரூபமும் யதார்த்தமுமாகும்' என்பதை காட்சிப்படுத்தினார்.
அதற்காகத்தான் சிங்கள,தமிழ் கலாசாரங்களை பிரதிபலிக்கும் நிகழ்வுகளை வெகுவாக அரங்கேற்றினார். இனவாதிகள் முஸ்லிம்களுக்கெதிராக பயங்கரவாதிகளென கொடிப்பிடிக்கும் இச்சூழலில் 'முஸ்லிம்கள் சமாதான சகவாழ்வுக்குரியவர்களன்றி மற்ற இனங்களை அழிக்கும் பயங்வாதிகளல்ல என்ற அடிப்படையினை உரத்த தொணியில் உலகுக்கு பறைசாற்றினார். இந்த அடிப்படைகள் குறுகிய நோக்கத்துடன் பணத்துக்கு 'கபடிஆடும்' ஒலமாக்கு எங்கே விளங்கப்போகின்றது?
நாடுதளுவி, நாற்புறத்திலிமிருந்து வந்து குவிந்த 30,000க்கும் மேற்பட்ட தமிழ், சிங்கள மக்களுடன் இரண்டறக்கலந்த முஸ்லிம் 'ஜனவெள்ளம்' எம் சமுதாயம் மீதான பார்வையையும் எம்மீதான முரண்பாடுகளையும் குற்றாச்சாட்டுகளையும் மறுதலித்து உலகுக்கு காட்டியிருக்கின்றது. தேசிய மகாநாடு எமது சமுதாய பலத்தையும், எமது அடிப்படைப் பிரச்சினைகளின் உக்கிரத்தையும் தேசியத்தலைவர்களின் முன்வைக்கும் சாத்வீக களமாக அமைந்தது. 'இந்நாட்டில் நாங்களும் பூர்வீக இனம்.நாம் பயங்கரவாதிகளோ அடிப்படைவாதிகளோ அல்ல.
நாம் சமாதானத்துக்கும் சகவாழ்வுக்குமுரியவர்கள். இதைத்ததான் கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்கள் நடைமுறையில் நிரூபித்திருக்கின்றனர்.' என்ற செய்தியை கட்சியின் இதயமான அம்பாரை மாவட்டத்திலிருந்து எம்தேசியத்தலைவன் உலகிற்கு உரத்துச் சொல்லியிருக்கின்றார். இதற்கிடையில் இப்பலத்தையும், எம்சமுதாய தளத்தையும் சிதைக்க நினைப்பதும் அதைப் பகிஷ்கரித்து எமது இயக்கத்தை தமது அற்ப ஆசைக்காக அழிக்க நினைப்பதும் சமுதாயத் துரோகத்தின் சிகரமில்லையா?
மறுபுறத்தில் அம்பாரை மாவட்டம்தான் இம் மு.கா.வின் ஆணிவேரும், இதயமும் அடித்தளமும் என்பதை மீண்டுமொருமுறை உரக்கப் பறைசாற்றி அத்தளத்தை மேலும் ஓட்டைஒடிசலின்றி பலப்படுத்த வேண்டிய அவசர, அவசிய காரணத்தை இத்தேசிய மகாநாடு தேசியத்தலைமைக்கும் எமக்கும் வலியுறுத்தி நிற்கின்றது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.