நாட்டை ஆள்வது ராஜபக்‌ஷக்களா..? - வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன்

லோ.கஜரூபன்-
ண்மைக்காலமாக புனர்வாழ்வளிக்கப்பட்டு எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாதவர்கள் என சான்றிதழ் வழங்கி, விடுவிக்கப்பட்டவர்களை இலக்கு வைத்து விசாரணை என்ற பெயரில் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில் நேற்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இளைஞரணிக்குப் பொறுப்பாக இருந்தவரான நண்பர் சிவகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார் எனும் செய்தி கிடைத்திருக்கிறது.

சிவகரனின் கைது, மற்றும் முன்னாள் போராளிகள் மீண்டும் சிறைப்பிடிக்கப்படல் போன்ற சம்பவங்கள், மீண்டும் இலங்கையை ராஜபக்‌ஷாக்கள் ஆள்கிறார்களா எனும் சந்தேகத்தை மக்கள் மத்தியில் விதைத்து இருக்கிறது.

இலங்கை நாடு ஒரே நாடாக இருக்க வேண்டும் என்றும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றுக்கு தமிழர் தரப்பு தயாராகவே இருக்கக்கூடிய இந்தநேரத்தில், இலங்கையின் ஆட்சியயையே மாற்றியமைத்தோம் என்ற உரிமையோடு எமக்கானதை எப்படியும் பெற்றுவிடலாம் என்கின்ற நம்பிக்கையோடு எமது தலைவர்கள் உண்மையான விசுவாசத்தோடு செயற்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தனது இயலுமைகளுக்கும் அப்பால் சென்றும், அதிகபட்சமான சகிப்புத் தன்மைகளோடும் இந்த சூழ்நிலையைக் குழப்பி விடாமல் தக்கவைக்க வேண்டுமென்று போராடிவருகிறது. 

குறிப்பாக வலி.வடக்கு நில விடுவிப்பு தொடர்பான விடயங்களில் ஆட்சி மாறி, ஒருவருடமும் நான்கு மாதங்களும் கடந்துவிட்ட பிறகும், பெரியளவில் அல்லாமல் பெயரளவில் மாத்திரம், நிலப்பரப்புக்கள் விடுவிக்கப்பட்டிருப்பது, கைதிகள் தொடர்ச்சியாக கைதிகளாகவே இருப்பது, இராணுவத்தேவைகளுக்காக தொடர்ந்தும் பொதுமக்களின் காணிகள் கையகப்படுத்துவது தொடர்வது என இப்படியான தமிழ் மக்களின் முக்கியத்துவம் மிக்க பிரச்சனைகளில் கூட அக்கறையற்ற அரசாக இது இருப்பினும், எமது நீடித்த நிலைத்த தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நம்பிக்கையோடு தான் போராடி வருகிறது. 

அப்படியிருக்க எமது இளைஞர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் புதிய நிலைமையும், என்ன காரணத்துக்காக கைது செய்யப்படுகிறார்கள்? என்பதைக்கூட கூறாமல் கைது செய்யும் நடைமுறையும் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. 

2009 களுக்குப்பின் இருந்த முன்னைய ஆட்சியில் தமிழ்மக்கள் ஒன்று திரண்டு தமக்கான உரிமைகளைக்கேட்பதற்குக்கூட அஞ்சினார்கள். அப்படிக்கேட்டால் எங்கே கொலை செய்யப்பட்டு விடுவோமோ? அல்லது காணாமல் ஆக்கப்பட்டு விடுவோமோ என்பதான காரணம் தான் அவர்களின் அச்சத்தின் அடிப்படையாக இருந்தது.

ஆனால் ஆட்சிமாற்றத்தின் பின்னர் மக்கள் மெல்ல மெல்ல சிறிதளவாக எனினும் ஜனநாயகச்சூழலுக்குக்குள் நுழைவதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததை மறுப்பதற்கு இல்லை. எனினும் இது முழுமையான ஜனநாயகம் இல்லை என்பதையும் அனைவரும் ஏற்பார்கள். 

அப்படியாகக்கிடைத்த இடைவெளிக்குள் மக்கள் தமது அடிப்படை உரிமைகள் சார்ந்த பல விடயங்களுக்காக தாமாகவே ஒன்றுதிரளவும், குரல்கொடுக்கவும், போராடவும் முன்வந்தனர். குறிப்பாக இளைய தலைமுறையினர் கூட இன்றைக்கு ஜனநாயக அடிப்படையிலான தமது அரசியல் செய்றபாடுகளில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். 

பல இளைஞர்கள் அரசியல் கட்சிகளிலே தம்மைப்பதிவு செய்து வருகின்றமையையும் காண்கிறோம். இது சிறப்பான ஒரு முனேற்றமாக பார்க்கப்படுகிறது. இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தான் முன்னாள் போராளிகளின் கைது, அதைப்போல தமிழரசுக்கட்சியின் இளைஞர் அமைப்புக்கு பொறுப்பாக இருந்த சிவகரனின் கைது எனபன இடம்பெற்று வருகின்றன.

சிவகரனின் கைது மூலமாக இது நாளைக்கு ஏனைய இளைஞர்களுக்கும் நடக்கலாம் எனும் எச்சரிக்கையை விடுவதற்கு இந்த அரசாங்கம் விரும்புகிறதா? இளைஞர்களின் அரசியல் மீதான நாட்டத்தை ஆரம்பத்திலேயே அடக்கி விட வேணுமென்று இந்த அரசு கருதுகிறதா? என்பதான கேள்விகளை இது சுமந்து நிற்கிறது. 

கைதுகளுக்கான காரணத்தை இந்த அரசு வெளியிட தயாராக இருக்கிறதா? எனும் கேள்வியும் தமிழ் சமூகத்தால் எழுப்பட்டுக்கோண்டிருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -