அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் சாம ஸ்ரீ பட்டமளிப்பு விழா நேற்று (02) வெள்ளவத்தை ஸ்ரீ இராம கிறிஸ்னமிசன் மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் ஆனந்த சரத் மலவர ஆராய்ச்சி தலைமையிலும், சிரேஸ்ட பிரஜையும், அமைப்பின் தேசிய அமைப்பாளருமான அல்-ஹாஜ் முஹம்மட் ஹனீபா மற்றும் பொலிஸ் உயர் அதிகாரியும் அமைப்பின் வடக்கு கிழக்கு சிரேஸ்ட அமைப்பாளருமான தேசபந்து எஸ்.எம். சதாத் ஆகியோரின் வழிகாட்டலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மூவினங்களையும் சேர்ந்த மதகுருக்கள், மௌலவிமார்கள், தேரர்கள் மற்றும் கல்வி, விளையாட்டு, சமூக சேவை, ஊடகத்துறை, சமூக பங்களிப்பு போன்ற துறைகளில் சிறப்பாக செயலாற்றிவரும் சுமார் 200 சாதனையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இதன்போது விளையாட்டு, சமூக சேவை, மத நல்லிணக்கம், சமூகங்களுக்கிடையிலான உறவு, கல்வி போன்ற துறைகளில் பல்வேறு பங்களிப்புக்களை ஊடகங்களுடாக வழங்கிவரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும், பட்டதாரி ஆசிரியருமான எஸ். அஸ்ரப்கான் “சாம ஸ்ரீ, தேசகீர்த்தி, கலாஜோதி” பட்டம் வழங்கி கௌஃ;;ரவிக்கப்பட்டார்.
பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயற்படும் ஆயிரக்கணக்கான துறைசார்ந்தோர் அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் தொடர்ந்தும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படுகின்ற அதேவேளை, இன நல்லுறவு, புரிந்துணர்வு என்பனவற்றை கட்டியெழுப்பி ஒற்றுமையாக இலங்கையர்கள் நாம் என்ற உணர்வுடன் மூவின மக்களும் வாழ இவ்வமைப்பு செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.