கரீம் ஏ. மிஸ்காத்-
ஒவ்வொரு தடவையும் போட்டிப் பரீட்சை அதிபர் நியமனத்தின்போது, பதில் அதிபர் நிரந்தரமாக்கல் சர்ச்சையும் தோன்றுவது வழமையாகியுள்ளது. காரணம் பாடசாலைகளுக்குத் தேவையான அதிபர்கள் நியமிக்கப்படாமை, நியமிக்கப்படும் அதிபர்களுக்கு பாடசாலைகள் வழங்கப்படாமை, இந்நிலையில் பாடசாலைகளில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு பின்கதவால் ஆசிரியர்கள் கடமை நிறைவேற்றும் பதில் அதிபர்களாகின்றமை என்பனவற்றைக் குறிப்பிடலாம். இந்நிலைமை இலங்கை அதிபர் சேவை தாபிக்கப்பட முன்புள்ள காலம் முதல் தொடர்கின்றது.
சேவைப் பிரமாணக் குறிப்பின் 04ஆம் பந்தி : எந்தவோர் ஆண்டிலும் எந்தவோர் தரத்திலும், நிரப்பப்பட வேண்டிய வெற்றிடங்களின் எண்ணிக்கை, அந்த ஆண்டு ஜனவரி 1ஆந் திகதியிலும் யூன் 1ஆந் திகதியிலும் இருக்கின்ற வெற்றடங்களின் எண்ணிக்கையாகும். என்று தற்போது வரையான ஒவ்வொரு பிரமாணக் குறிப்பும் கூறிக் கொண்டிருக்கின்றது. நடப்போ வேறுவிதம்.
இலங்கை அதிபர் சேவை தாபிக்கப்பட்டபோது, அதிபர் ஆளணித்தேவை 13,623 ஆகவும்,1985.01.01இல் பாடசாலைகள் 9,634 ஆகவும் இருந்தது.இலங்கை அதிபர் சேவை மீளமைக்கப்பட்டபோது, அதிபர் ஆளணித் தேவை 16.512 ஆகவும்,1997.01.01இல் பாடசாலைகள் 10.280ஆகவும் இருந்தது.
மீண்டும் 2008.07.01இல் இலங்கை அதிபர் சேவை மீளமைக்கப்பட்டபோது அதிபர் ஆளணித்தேவை 16,512ஆகவும் 2008.12.31இல் பாடசாலைகள் 9,678ஆகவும் இருந்தது. அத்தினத்தில் சேவையில் இருந்த அதிபர்கள் 6919 மட்டுமேயாகும். 9593 அதிபர்களுக்கு வெற்றிடமிருந்தது.அவற்றில் 3500க்கும் அதிகமான கடமை நிறைவேற்று அதிபர்களும் சேவையில் இருந்தனர்.
இறுதியாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2013.06.01 இல், அதிபர் ஆளணித்தேவை 16,512 ஆகவும், பாடசாலைகள் 10,012 ஆகவும் இருக்கின்றது. 2015.04.10 இல் விண்ணப்பங் கோரப்பட்ட போது, 3 வகுப்புக்களைக் கொண்ட சேவையில், 3ஆம் வகுப்புக்கான ஆளணி 6868ஆக இருக்கையில். அவ்வகுப்பில் மட்டும் 4,431 வெற்றிடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அது தற்போது 5,600 எனவும் தெரிவிக்கப்படுகின்றது இந்நிலையில், தேசிய பாடசாலை உள்ளிட்ட 1ஏபி, 1சி மற்றும் தரம் 2, தரம் 3 பாடசாலைகள் அடங்கலாக 2353 கடமை நிறைவேற்று அதிபர்கள் சேவையில் உள்ளதாகவும் தெரியவருகின்றது.
இத்தரவுகளை நோக்குகின்றபோது, எந்த அளவு ஆளணித் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதையும், இவர்களில் எத்தனைபேர் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
இதுதவிர, போட்டிப் பரீட்சை நியமனங்கள் வழங்கப்பட்ட கால ஒழுங்கை நோக்குகின்றபோது, அதுவும் பதில் அதிபர் நியமனத்தை வலியுறுத்தியே நிற்கின்றது.
1985இல் சேவை தாபிக்கப்பட்டபின்,கடந்த 30வருடங்களில் 30தடவைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டிய நியமனங்கள் 1989.06.01, 1991.06.01,2002.01.01, 2009.11.13, 2010.02.03, 2012.01.24, 2012.01.26 என 7தடவைகள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அது ஒவ்வொன்றும் நீண்ட கால இடைவெளியைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
இதேவேளை,1980களில் ஆரம்பமான கடமை நிறைவேற்று அதிபர்களுக்கான நியமனங்கள் கடந்த 35வருடங்களில் 1982.04.21,1985.01.01, 1989.06.01, 1993.06.01, 2000.08.04, 2012.08.08 என 6தடவைகளில் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது 1980.04.30அந்திகதி கடமையில் இருந்த அதிபர்களுக்கு, பாடசாலையின் தரத்திற்கேற்ப 1982.04.21இல் 2,001நியமனங்கள் வழங்கப்பட்டது. 1985.01.01இல் 924 நியமனங்கள் வழங்கப்பட்டது. பின்னர் 1988.12.31வரை மூன்றுவருடங்கள் கடமை நிறைவேற்றிய அதிபர்களுக்கு 1989.06.01இல் 1,926 நியமனங்கள் வழங்கப்பட்டது.
1993.06.01இல் ஒருவருடம் கடமை நிறைவேற்றிவர்களுக்கு 3,182 நியமனங்கள் வழங்கப்பட்டது. 2000.08.04ஆம் திகதிய 2015 நியமனங்கள், கல்விச்சேவைக் குழுவின் 2000ஃ03 சுற்றறிக்கை விதிமுறைகளின்படி, காலம் எதுவும் கவனத்திற்கொள்ளப்படாது, மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில்; வழங்கப்பட்டன. 2012.08.08ஆம் திகதிய 2453 நியமனங்கள், 2012.02.01ஆம் திகதிய அமைச்சரைவைத் தீர்மானத்தின்படி, மூன்றுவருடகால சேவைக்காலத்தை உள்ளடக்கிய மூன்று நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டன.
இத்தரவுகளை உற்றுநோக்குகின்றபோது, ஒருநாள் முதல் மூன்றுவருட சேவைக்காலம் மற்றும் நிபந்தனைகன் என்பவற்றின் அடிப்படையில் 1980முதல் கடமைபார்க்கும் அதிபர்கள் நிரந்தரமாக்கப்பட்டு வந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அவ்வாறு 12,501 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 21ஃ2006 அரச நிர்வாகச் சுற்றறிக்கையின்படி 180 நாட்கள் கடமை பார்ப்பவர்கள் நிரந்தரமாக்கப்படவேண்டும்.என்ற சுற்றறிக்கையும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளது கடமைபார்க்கும் அதிபர்களின் சேவை நிரந்தரமாக்கப்பட மேற்சொன்ன காரணங்கள் ஏதுவாக இருக்க, அவர்களின் சேவையை எவ்வாறு அவ்வளவு இலகுவாகப் புறந்தள்ளிவிட முடியும்.
அது அவர்களது அர்ப்பணித்த கல்விப் பணிக்கும், மனிதாபிமானத்திற்கும் செய்யப்படும் பெரும் அநீதியாகாதா?. நீண்டகாலங்கள் கடமை நிறைவேற்றும் பணியில் இவர்களை வைத்திருந்துவிட்டு, திடீரென பதவி இறக்கி அனுப்பப்பட்டால், இவர்களில் இவ்வளவு காலப்பணிக்கு அரசு கொடுக்கும் கைமாறு என்ன?.
குறிப்பாக வடக்கு-கிழக்கு மண்ணில் அரசின் உச்ச பொருளாதாரத்தடை, போதிய போக்குவரத்து வசதியின்மை, அதிகூடிய பௌதிக வளப்பற்றாக்குறைகளுடன் யுத்தமேகங்கள் சூழ்ந்திருக்க, தொடர் எறிகணைத் தாக்கதல்கள், விமானத் தாக்குதல்கள் என்று பதுங்கு குழிகளில் பிள்ளைகளைப் பாதுகாத்து பாடசாலைகளை நடாத்தி. கல்வியை வளர்த்த கடமை நிறைவேற்று அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்க அரசு வழிகாண வேண்டும்.
அந்தவகையில், அவர்களுக்கான ஆசிரியர் தொழிற் சங்கங்களின் மனிதாபிமானக் குரலாக இதனை ஏற்று, இறுதிச் சந்தர்ப்பம் ஒன்றை வழங்கி, விசேட போட்டிப்பரீட்சை ஒன்றின் மூலமாவது அவர்கனை அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்க அரசும், அமைச்சும் அதிகாரிகளும் முன்வரல் வேண்டும் அத்தோடு, தரம் பெற்ற அதிபர்கள் அனைவருக்கும் தகுதியான பாடசாலைகளை உரிய காலத்தில் ஒதுக்கிக் கொடுக்கவும், காலத்திற்குக்குகாலம் ஏற்படும் வெற்றிடங்களுக்கு உரிய காலத்தில் போட்டிப் பரீட்சைகளை நடாத்தி தகுதியான அதிபர்களை போதிய அளவில் நியமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளாகும்.