முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச போலியான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சட்டத்துறையில் பலர் தெரிவித்துள்ளனர்.
நேற்று அவசரமாக யோஷித நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும், எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி மஹிந்த தரப்பு தனியாக ஒரு பேரணி நடத்துவதற்கு ஆயத்தமாகின்றமையினால் அதற்கு தடை ஏற்படுத்தும் நோக்கிலே யோஷித அழைக்கப்பட்டுள்ளதாகவும், நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்ந்த போது, அங்கு வேறு சம்பவம் தொடர்பிலே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் நாமலின் பொய் பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது.
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 828/16 கீழ் பெற்றுகொள்ளப்பட்ட திடீர் உத்தரவிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்ட யோஷித ராஜபக்சவுக்கு சொந்தமான மேலும் பல கோடி பெறுமதியான சொத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கே மீண்டும் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்காக நீதிமன்றினால் கடந்த 5ம் 7ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அதற்கான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பல கோடி பெறுமதியான சொத்துக்களின் உரிமையாளர் என கூறப்படும் வயோதிப பெண் தொடர்பில் யோஷித ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளமையினால், அந்த பெண்னை நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்படுத்துமாறு யோஷித்தவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தன.
அந்த உத்தரவுக்கமைய குறித்த பெண்னை ஆஜர்படுத்த முடியவில்லை என்றால் புது வருட காலப்பகுதியில் மீண்டும் தான் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் இருந்த யோஷித் தனது வழக்கறிஞரிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் யோஷித ராஜபக்ச தனது வழக்கறிஞர்கள் ஊடாக மீண்டும் நீதிமன்றில் தன்னால் 5 மற்றும் 7ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஆஜராக முடியாது எனவும் வேறு ஒரு தினத்தை வழங்குமாறு கூறியிருந்தார்.
அதற்கமைய ஏப்ரல் 18 மற்றும் 23ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு யோஷிதவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவுறுத்தலுக்கமைய நேற்று யோஷித ராஜபக்ச விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார். எனினும் தங்களின் அரசியல் பயணத்தை தடை செய்வதற்காக நேற்றைய தினம் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளதாக நாமல் போலியான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சட்டத்துறையில் பலர் குறிப்பிட்டுள்ளனர்.