எம்.வை.அமீர்-
தற்போது நான் இப் பல்கலைக்கழகத்தில் 10 மாதங்கள் கடமையாற்றியுள்ளேன். இறைவன் நாடினால் இன்னும் 5வருடங்களும் 2 மாதங்களும் இங்கு கடமையாற்ற முடியும். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின், நிர்வாக மற்றும் கல்விசார் நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவன் என்ற வகையில், எனது பதவிக்காலத்தில் இங்கு கடமையாற்றும் எந்த ஊழியர்களுக்கு எதிராகவும் அநீதியான முறையில் நடக்கவும் மாட்டேன். அதேபோன்று அவ்வாறான செயல்களுக்கு துணைபோகவும் மாட்டேன். என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தின் 18 வது வருடாந்த ஒன்றுகூடல் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய மற்றும் அரபு மொழி பீட கேட்போர் கூடத்தில் 2016-04-07 ஆம் திகதி ஊழியர்சங்கத்தின் தலைவர் வை.முபாறக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதலாவது அமர்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக இப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தாரும் விஷேட அதிதிகளாகஊழியர் மேன்பாட்டு நிலையத்தின் தலைவர் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெசீல் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் பி.எம்.முபீன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் உதவிப் பதிவாளர் ஐ.எஸ்.நர்சித் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய உபவேந்தர், இந்த பல்கலைக்கழகத்தினை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்ல எவ்வாறான பணிகளை நான் செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவைகள் அனைத்தையும் செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என உறுதியளித்தார். கடந்த எனது குறுகிய பதவிக்காலத்தில் ஏதாவது நடவடிக்கை அல்லது செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பேனானால் அது இப்பல்கலைக்கழகத்தின் நலனில் அபிவிருத்தியில் கருசனையுடனேயே இருக்கும் என்றும் தெரிவித்தார். தான் எப்போதும் ஊழியர்களின் பக்கமே இருப்பேன் என்றும் உறுதியளித்தார். எனவே ஊழியர்கள் எவ்வித சஞ்சலமுமின்றி தங்களது கடமைகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். நிர்வாக செயட்பாடுக்ளில் சில சில தடைகள் இடைஞ்சல்கள் வருவது சாதாரணமானது எனக்குறிப்பிட்ட உபவேந்தர், இவ்வாறான நிலைகள் எங்களது கணவன் மனைவி குடும்பத்துக்குள்ளும் வருவதுதான், என்றும் தெரிவித்தார். பல்கலைக்கழக சமூகமும் ஒருகுடும்பம் என்ற அடிப்படையில் எல்லோரும் இணைந்து செயற்பட்டால் சுமுகமாக செயற்பட முடியும் என்றும் தெரிவித்தார்.
ஊழியர்சங்கத்துக்கான அலுவலகம் ஒன்றைக் கோரியிருந்தார்கள் அதற்க்கான உத்தரவுகளை ஏற்கனவே வழங்கியுள்ளேன் குறித்த அலுவலகத்தை தெரிவுசெய்யப்படும் புதிய நிருவாக பயன்படுத்த முடியும். ஊழியர்சங்கம், உள்ளக இடமாற்றம் ஒன்றைக் கோருவதாலும் பல்கலைக்கழகத்துக்கும் இவ்வாறானதொரு தேவை இருப்பதாலும், ஊழியர்கள் தங்களது தொழிலில் சலிப்படையாது அனுபவங்களை, பெறுவதற்காகவும் உள்ளக இடமாற்றம் ஒன்றை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று ஊழியர்சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் உரியவர்களுடன் கலந்துரையாடி நிவர்த்தித்துத் தருவதாகவும் தெரிவித்தார். இப்பல்கலைக்கழகத்தில் எவ்வாறான நிருவாகம் வந்தாலும் அவைகள் தனக்கு எல்லாமே ஒன்றே என்று தெரிவித்த பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், சகலரும் சமனாக நோக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.
ஊழியர்களின் நியாயமான தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தான் எப்போதும் தடையாக இருக்கப்போவதில்லை என்று தெரிவித்த உபவேந்தர், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.