வட- கிழக்கு மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதை ஏற்க முடியாது - உதுமாலெப்பை MPC

சலீம் றமீஸ்-
வட- கிழக்கு மாகாண மக்களுக்கான தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையை பயன் படுத்தி ஏனைய மாகாண சபைகள் அதிகாரங்களை பயன்படுத்தும் போது வட- கிழக்கு மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது - கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை

வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கான தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் முறையை பயன் படுத்தி ஏனைய மாகாண சபைகள் அதிகாரங்களை பயன்படுத்தும் போது வட- கிழக்கு மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு (29) தவிசாளர் திரு. சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்றபோது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரு. மெத்தானந்த டீ சில்வாவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் விஷேட கொடுப்பனவை கிழக்கு மாகாண சபை தவிசாளர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பிரத்தியோக உத்தியோகத்தர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற பிரேரனையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற போரின் தாக்கத்தினால் நமது நாட்டில் மாகாண சபை முறைமை அமுல் படுத்தப்பட்டு 09 மாகாண சபைகளும் அமைக்கப்பட்டது. துரதிஷ்ட வசமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற யுத்த சூழ் நிலையினால் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் மாகாண சபைகளின் அதிகாரங்களை அனுபவிக்க முடியாத நிலைமை உருவானது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. 

நமது நாட்டிலுள்ள 07 மாகாண சபைகளுக்கு ஒரு நியாயமும், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு வேறு நியாயமான சில செயற்பாடுகளும் அமைந்துள்ளது. 07 மாகாண சபைகளின் தவிசாளர்களினதும், மாகாண சபை உறுப்பினர்களினதும் பிரத்தியோக உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட சம்பள கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் அதே வேளை, கிழக்கு மாகாண சபையின் 05 அமைச்சர்களின் பிரத்தியோக உத்தியோகத்தர்களுக்கு மட்டும் அதிகரிக்கப்பட்ட சம்பள கொடுப்பனவை வழங்கி வருவது ஒரு பாரபட்சமான நிகழ்வாகும்.

இந்த யதார்த்ததை புரியாத கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அரசியல் வியாபாரியாக செயல்பட்டு வருவது குறித்து நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரங்களை வழங்குவதற்கு நாம் கோரிக்கை விடுப்பதைக் கூட சிலர் ஜீரணிக்க முடியாமல்; தடுமாறுகின்றனர்.

நல்லாட்சி அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகிக்கும் சம்பிக்க ரணவக்க அதி உச்ச அதிகாரப் பகிர்வு என சிறு பான்மை மக்கள் வலியுறுத்துவது சிறு பான்மை மக்களுக்கான தீர்வா? அல்லது வடக்கும், கிழக்கும் இணைந்த ஈழமா? என்று பகிரங்கமாக அறிக்கை விட்டுள்ளார். நமக்கான அதிகாரங்கள் தானாகவே நமது காலடிக்கு வரும் என்று நீங்கள் எதிர் பார்க்கக் கூடாது. மாகாண சபைக்கான அதிகாரங்களை உச்சமாக நாம் பாவிக்க வேண்டும்.

ஒரு நாட்டில் அமைந்துள்ள 07 மாகாண சபைகளுக்கும் ஒரு அதிகாரமும், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு மட்டும் வேறு அதிகாரமும் என்ற நிலையை நாம் அங்கீகரிக்க முடியாது. 

ஏழு மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கும், மாகாண சபைகளுக்கும் வழங்கப்படும் அதிகாரங்கள் அனைத்தையும் வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களும் பாவிக்க வேண்டும். அதற்காக எங்களால் இயன்ற ஒத்துழைப்புக்களை வழங்குவோம் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -