சலீம் றமீஸ்-
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை 2012 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளதனால் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு சாய்ந்தமருது வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் - கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை 2012ம் ஆண்டு அனுமதி வழங்கியும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளதனால் கிழக்கு மாகாண சபை அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு சாய்ந்தமருது வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும்,கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்றபோது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனால் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தக் கோரி; சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாகவும் அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாகவும் தரமுயர்த்த முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் அவர்களினால் விசேட அமைச்சரவைப் பத்திரம் 2012 ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அனுமதியினையும் கிழக்கு மாகாண சபை வழங்கியது. 2012 ம் ஆண்டு கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இவ்விரண்டு வைத்தியசாலைகளையும் தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
சாய்ந்தமருது பிரதேசம் சுனாமி அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். கடற்கரைப்பிரதேசத்தில் அமைந்திருந்த இம்மக்களின் வைத்தியசாலை சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக சேதமடைந்து பிரதான வீதிக்கு மாற்றப்பட்டபோது அன்று கிழக்கு மாகாண உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்த தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா சாய்ந்தமருது பிரதேசத்திற்கான வைத்தியசாலை அமைப்பதற்கான முதற்கட்ட நிதியினை ஒதுக்கி வைத்தியசாலை அமைப்பதற்கு பெரும் பங்களிப்பு செய்தார்.
சாய்ந்தமருது பிரதேசம் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழும் பிரதேசமாகும். குறுகிய நிலப்பரப்பில் கூடிய சனத்தொகை வாழும் பிரதேசமாகும். எனவே இவ்வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த 2012 ம் ஆண்டு கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதனால் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த கிழக்கு மாகாண சபையும்இ கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார்.