சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாண சபை அமர்வு எதிர் வரும் 2016.04.26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களினால் முக்கிய விடயம் தொடர்பான தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு.
அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை ஒன்றை ஸ்தாபித்தல், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இடை நிறுத்தப்பட்ட உடற்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிலுனர் கற்கை நெறியினை ஆரம்பித்தல், இறக்காமம் கல்விக் கோட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபையினை கோரும் தனி நபர் பிரேரணைகள் கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக விரிவாக தெரிவிக்கப்படுவதாவது,
அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை ஒன்றை ஸ்தாபித்து கல்வி வலயங்களில் சேவையாற்றும் ஆசிரிய ஆலோசகர்களை உள்ளீர்ப்பு செய்யுமாறு மத்திய அரசாங்கத்தையும், மத்திய கல்வி அமைச்சையும் கோரும் தனிநபர் பிரேரனை 1962 ம் ஆண்டு போட்டி பரீட்சை, நேர்முக பரீட்சைகள் ஊடாக ஆட்சேர்ப்பின் கீழ் உருவாக்கப்பட்ட ஆசிரியர் ஆலோசகர் சேவையானது காலத்தோடு இணைந்து வியாபித்துள்ள ஒரு சேவையாகும்.
நமது பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளில் அத்தியவசிய துறையாக இத்துறை காணப்படுகிறது. கடந்த 18 வருட காலமாக ஆசிரிய ஆலோசகர்களின் கோரிக்கைகள், மற்றும் தொழில் சார் போராட்டங்களின் பிரதி பலனாக மத்திய அரசாங்க கல்வி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட 04 ஆணைக்குழுக்களில் 03 ஆணைக்குழுக்கள் இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை உருவாக்க வேண்டும் எனவும் 01 ஆணைக்குழு இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவைக்கு உள்வாங்கப்பட வேண்டும் எனவும் சிபாரிசு செய்துள்ளது.
இதற்கமைவாக இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை ஏற்படுத்த வேண்டும் என 2014 ம் ஆண்டு ஜுன் மாதத்தில் மத்திய அரசாங்க கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் ஊடாக இச்சேவையை ஏற்படுத்துவதற்கு சம்பள திட்டத்தினை தயாரித்து 2015 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சம்பள ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்ற போதும் இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையை ஏற்படுத்துவதற்கு இதுவரை மத்திய அரசாங்க கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் கடந்த பல மாதங்களாக அகில இலங்கை ஆசிரிய ஆலோசகளினது ஒன்றினைந்த சங்கம் சட்டப்படியான வேலை செய்யும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
எனவே, நீண்ட காலமாக அர்ப்பணிப்போடு வலயக்கல்வி அலுவலயங்களில் சேவையாற்றி நமது கல்விச் செயற்பாடுகளில் பெரும் பங்களிப்புகளை வழங்கி வரும் ஆசிரிய ஆலோசகர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அகில இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையை உருவாக்கி உள்ளீர்ப்பு செய்ய வேண்டும் என அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதம மந்திரி, மத்திய அரசாங்க கௌரவ கல்வி அமைச்சர் ஆகியோர்களிடம் கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடவேண்டும்.
அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இடை நிறுத்தப்பட்ட உடற்கல்வி பயிலுனர் ஆசிரியர்களுக்கான , தகவல் தொழில்நுட்ப பயிலுனர் ஆசிரியர்களுக்கான கற்கை நெறியினை மீண்டும் ஆரம்பிக்க கோரும் தனி நபர் பிரேரனை
அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் சென்ற 1994 ம் ஆண்டில் இருந்து 2010 ஆண்டு வரை உடற்கல்வி பயிலுனர் ஆசிரியர்களுக்கான கற்கை நெறி வழங்கப்பட்டு 224 ஆசிரியர்கள் கற்கை நெறியினை பூர்த்தி செய்து வெளியேறி உள்ளனர். இதே போல் தகவல் தொழில்நுட்ப பயிலுனர் ஆசிரியர்களுக்கான கற்கை நெறி 2006 ல் இருந்து 2010 ஆண்டு வரை வழங்கப்பட்டு 31 ஆசிரியர்கள் தங்களின் கற்கை நெறியிiனை பூர்த்தி செய்து வெளியேறி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2010 ம் ஆண்டில் இருந்து அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியில் உடற்கல்வி பயிலுனர் ஆசிரியர்களுக்கான கற்கை நெறியும், தகவல் தொழில்நுட்ப பயிலுனர் ஆசிரியர்களுக்கான கற்கை நெறியும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இவ் இரண்டு கற்கை நெறிகளும் இடை நிறுத்தப்பட்டதனால் இத்துறைகளில் தகைமையுள்ள பயிலுனர் ஆசிரியர்களுக்கு கல்வி கல்லூரிக்கு சென்று இது தொடர்பான கற்கை நெறியினை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. குறிப்பாக விளையாட்டு துறையில் உடற்கல்வி விரிவுரையாளருக்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போனதுடன் பாடசாலைகளில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியில் இடை நிறுத்தப்பட்ட உடற்கல்வி கற்கை நெறியும், தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியினையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசாங்க கல்வி அமைச்சரிடம் கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடவேண்டும்.
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்;ட இறக்காமம் பிரதேச கல்விக் கோட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபையினை கோரும் தனி நபர் பிரேரனை
சம்மாந்துறை கல்வி வலயத்தில்; கஷ்டப் பிரதேசமாகவுள்ள இறக்காமம் கல்விக் கோட்டத்தில் 12 பாடசாலைகள் அமைந்துள்ளது. இப் பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளதால் இப்பிரதேச கல்வி அபிவிருத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இப் பிரதேச மக்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இறக்காம பிரதேச பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்த வருடம் (2016 இல்) கல்விக் கல்லுரிகளிலிருந்து பயிற்சி பெற்று வெளியாகவுள்ள இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை இறக்காமம் பிரதேச பாடசாலைகளுக்கு நியமனம் செய்வதற்கான அவசர ஏற்பாடுகளை மேற் கொள்ளுமாறும், தற்போது வெளியூர் பாடசாலைகளில் கடமையாற்றும் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை இறக்காமம் கோட்டப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கி,
இறக்காமம் பிரதேச கல்விக் கோட்டப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்யுமாறு மத்திய அரசாங்க கல்வி அமைச்சரிடம் கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடுக்க வேண்டும் என்று கோருவதுடன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இறக்காம பிரதேச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையும் விடுத்து இத்தனி நபர் பிரேரணை எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.