தற்போது பேசப்படும் அரசியல் யாப்பு மாற்றம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு முயற்சி விடயங்கள் தொடர்பில், கடந்த கால வரலாற்றில் சிங்கள, தமிழர் தேசியங்களின் இராணுவ, அரசியல் சமநிலைகளின் மாற்றத்தில், பலமிக்கவர்களால் சமஷ்டித் தீர்வு முன்மொழிவு மாறி மாறி நிராகரிக்கப்பட்ட நிலைப்பாட்டையே இப்போதும் எடுக்கப்போகிறார்களா?
அல்லது இந்த நாட்டை முன்னோக்கி நகர்த்திச் செல்ல முற்போக்கான தீர்மானங்களை எடுக்கப்போகிறார்களா? என்பதுதான் இன்றுள்ள கேள்வியாகும் எனக் கேள்வி எழுப்பினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார மற்றும் தொழில் வாய்ப்புச் செயலாளருமான ஏ.எல்.தவம் அவர்கள்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரிகள் மையத்தின் ஒன்று கூடல் பொத்துவில் அறுகம்பேயில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
1949 களில் தமிழரசுக் கட்சியை சமஷ்டிக் கட்சி என்று கூறுமளவுக்கு தமிழர்கள் மத்தியில் சமஷ்டி முறையே தமிழர்களுக்குத் தீர்வாக அமையும் என்ற உச்ச கட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவ்வெதிர்பார்ப்பு பெரும்பான்மை சிங்களவர்கள் மத்தியில் பிரிவினைக்கான அம்சமாகப் பார்க்கப்பட்டு, பலமிக்க சிங்கள அரசு தமிழர்களிடம் மண்டியிடுவதா என்ற மனப்பாங்கால் மழுங்கடிக்கப்பட்டது.
பின்னர் 2001 - 2004 ஆண்டுகளில் ரணில் விக்ரமசிங்ஹ அவர்களின் ஆட்சிக்காலத்தில், ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் தமிழர்களுக்குத் தீர்வாக சமஷ்டி முறை முன்வைக்கப்பட்டது. அப்போது, இராணுவ ரீதியில் பலம்பொருந்திய தமிழர்கள், சமஷ்டிக்குள் தம்மை அடக்கிக் கொள்வதா என்ற பிரபாகரனின் நிலைப்பாட்டால் அது முற்றாக மழுங்கடிக்கப்பட்டது.
இப்போது காலச் சக்கரம் சுழன்று, புலிகளை அழித்து தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்கிவிட்டு சிங்கள தேசியம் நிமிர்ந்து நிற்கும் இன்றைய சூழலில், தமிழர்கள் சஷ்டித் முறையை தீர்வாக வேண்டி நிற்கின்றனர்.
அதாவது, சுதந்திரத்திற்குப் பின்னரான சூழலில் 1949 களின் பிற்பகுதியில், பலமிக்க சிங்கள அரசின் நிலைப்பாட்டில் சிங்கள தேசியமும், பலவீனமான நிலைப்பாட்டில் தமிழர் தேசியமும் இருந்து கொண்டு, சஷ்டித் தீர்வொன்றை வேண்டி நிற்கின்றனர். தமிழர்களின் இக்கோரிக்கையை சிங்கள தேசியம் எப்படி அணுகப்போகிறது என்பதுதான் எம்மிடமுள்ள இன்றைய கேள்வியாகும்.
கடந்த கால வரலாற்றில் சிங்கள மற்றும் தமிழர் தேசியங்களின் இராணுவ அரசியல் சமநிலைகளின் மாற்றத்தில், பலமிக்கவர்களால் சமஷ்டித் தீர்வு முன்மொழிவு மாறி மாறி நிராகரிக்கப்பட்ட நிலைப்பாட்டையே இப்போதும் எடுக்கப்போகிறார்களா? அல்லது இந்த நாட்டை முன்னோக்கி நகர்த்திச் செல்ல முற்போக்கான தீர்மானங்களை எடுக்கப்போகிறார்களா? என்பதுதான் இன்றுள்ள கேள்வியாகும்.
இவ்வாறான எதிர்வு கூற முடியாத நிட்சயமற்ற நிலைப்பாட்டில், முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளையும் அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் அடைந்து கொள்வதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல, நம்மைப்போன்ற தெளிவான சமூக சிந்தனையுள்ள எல்லோரும் பங்கேற்க வேண்டும். அதற்கான கதவுகளை முஸ்லிம் காங்கிரஸ் திறந்து வைத்திருக்கிறது. அதற்காக பல கருத்துப் பரிமாற்ற அரங்குகளை தொடங்கி வைத்துள்ளது.
இந்தத் தருணம் முஸ்லிம்களின் தலைமைகளை விமர்சித்து பலவீனப்படுத்துவதற்கான தருணமல்ல. அவர்கள் எல்லோரையும் அரசியல் யாப்பு சீர்திருத்த யோசனைகளை முன்வைப்பதில் ஒத்த கருத்துக்குக் கொண்டு வர வேண்டிய தருணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தேர்தல்களில் வெற்றி தோல்வியைக் கணக்குப் பார்ப்பதை அவர்களின் வழியில் செய்து கொள்ள வேண்டுமானால், அதனைச் செய்யட்டும். வேண்டுமானால் அந்த சுதந்திரத்தை அவர்களிடமே விட்டு விடுவோம். ஆனால், அரசியல் யாப்பு சீர்திருத்த யோசனைகளை முன்வைப்பதில் ஒத்த கருத்துக்குக் கொண்டு வர வேண்டிய தருணம் இது.
வெறுமனே முஸ்லிம் தலைமைகளை சமூக வலைத்தளங்களில் நாகரீகமற்ற வகையில் விமர்சிப்பதை நிறுத்தி விட்டு, மற்றவர்கள் நமது சமூகத்தின் நியாயமான அரசியல் அபிலாசைகளை, ஒன்றைக்காட்டி மற்றதைத் தட்டிக்கழிக்க வழி திறக்கும் வகையில், வேறு வேறு முன்மொழிவுகளை முன்வைக்காமல், ஒற்றுமையாக ஒரே முன்மொழிவை திறந்த கருத்தாடல்களினூடாக வரைந்து வழங்குவதற்கான முயற்சிகளை எல்லோரும் செய்ய வேண்டும்.
இதற்கு நமது அமைப்பும் முடிந்த வரை முயற்சிக்க வேண்டுமெனவும் கூறினார்.